வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தெலுங்கானாவுக்கு 'க்ரீன் சிக்னல்?': சந்திரசேகர் ராவுடன் சோனியா ஆலோசனை

 Sonia Kcr Meet On Telangana Issue Today டெல்லி: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு.
இதனால் இதுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இதனால் மத்திய அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது.
மேலும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டின் ஆதரவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தெலுங்கான பகுதிகளில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆதரவுத் தளத்தைக் கூட ஜெகன் மோகன் உடைத்தெறிந்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிடக் கூடும் எனக் கூறபடுகிறது.
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் இன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நிதியமைச்சர் சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று ஆளுநர் நரசிம்மன் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவை சோனியா காந்தி சந்தித்துப் பேச இருக்கிறார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஒப்புக் கொண்டால் தமது கட்சியையை காங்கிரஸுடன் இணைத்துவிடுவேன் என்று ஏற்கெனவே சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார்.
தற்போதைய நிலையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை தேவைப்படுவதால் எந்த ஒரு நிலைப்பாட்டையும் காங்கிரஸ் மேற்கொள்ளக் கூடும் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி க்ரீன் சிக்னல் கொடுத்துவிடும் என்றே கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: