சனி, 22 செப்டம்பர், 2012

போதிதர்மரை ஆதிமுதல் அலசத் தொடங்கிய நாம்

மரணமும் வாழ்க்கையும்

போதிதர்மர் / அத்தியாயம் 9 www.tamilpaper.net
ஷாவோலின் மடத்திலேயே தங்கிய போதிதர்மர் தான் கொண்டுவந்த தியான ஆன்மத்தை சீனர்களிடத்தில் சிறிது சிறிதாக எத்திவைத்தார். எத்திவைத்தல் என்றால், மனத்தில் இருப்பனவற்றை புத்தகமாக எழுதி, புத்தகத்திலிருந்து பிறர் மனத்துக்கு ஏற்றுவதல்ல. நேரடியாக மனத்திலிருந்து மனத்துக்கு. அதுதான் போதிதர்மர் கண்டுணர்ந்த வழிமுறை. அதுதான் ஜென்.
சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் போதிதர்மர் தன் முதன்மைச் சீடர்கள் எனக் கருதிய நால்வரை அழைத்தார். தனது ஆன்மீக வாரிசை (அதாவது 29ஆம் பௌத்த தலைவர்) அறிவிக்கப்போகிறார் என்று அறிந்து ஷாவோலினே கலகலப்படைந்தது.

ஒருவர் முகம் மற்றவருக்குத் தெரியாத காரிருள் இரவு. சீடர்கள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராக ஷாவோலின் மடத்தின் மத்திய அறையை அடைந்தனர். போதிதர்மர் அவர்களுக்கு முன்பாகவே அங்கு காத்திருந்தார்.
‘நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்க இருக்கிறேன்.’
‘கேளுங்கள் குருவே!’
‘நீங்கள் என்னிடமிருந்து இத்தனை வருடங்களாக என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஒருவர் பின் ஒருவராகக் கூறுங்கள்?’ என்றார்.
முதல் மாணவன் தாவ்ஃபூ (Dàofū) கூறினார். ‘புனித நூல்களால் புத்த மதத்தை மட்டுமே அறிய முடியும்; அதனால் நாம் புனித நூல்களை மட்டும் கற்று அத்துடன் கட்டுண்டு விடக்கூடாது. அதேசமயம் இந்நூல்களை விடுத்து எதுவும் செய்யவும் கூடாது.’
‘இதுதான் நீ அறிந்திருக்கிறாய் என்றால், நீ புத்த மதத்தின் தொடக்கத்தை மட்டுமே கற்றுள்ளாய், என் தோலைக்கூட கடக்கவில்லை. இன்னும் நீ கடக்க வேண்டிய பாதை அதிகம்.’
இரண்டாவதாக, தாரணி (Dharani) எனும் பிக்குணி தொடர்ந்தார். ‘தங்களது போதனைகள் எங்களை புத்தரது நிலத்துக்கே அழைத்துச் சென்றது. புத்தரை நேரில் கண்டு அவர் எப்படி விழிப்படைந்தார் என்று படிப்படியாக அவரிடமே கற்றதைப்போல் இருந்தது. அதனை தரிசித்ததே விழிப்படைந்த நிலையை எங்களுக்கு நல்கியது.’
‘நீ பரவாயில்லை, என் தசையை அடைந்துவிட்டாய், அடுத்து?’
‘நீர், நிலம், குளிர், வெப்பம், வானம், பூமி என நாம் பார்ப்பவை அனைத்தும் வெறுமையின் ரூபங்கள். பார்த்தல், தொடுதல், கேட்டல் என நாம் உணர்பவை அனைத்தும் மாயை. உண்மையில் ‘இருப்பு’ என்பதே இல்லை. நீங்கள், நான் என அனைவரும், அனைத்தும் மாயத் தோற்றங்களே, பிம்பங்களே. அழிந்து போகக் கூடியவர்களே’ என்று முடித்தார் மூன்றாம் சீடர் தாவ்யூ (Dàoyù).
‘மிக்க நன்று, நீ என் எலும்புகளை அடைந்துவிட்டாய்!’ என்று கூறி போதிதர்மர் அடுத்து தன் விருப்பத்துக்குரிய சீடன் ஹூய்கீ என்ன கூறப்போகிறான் என்று பார்த்தார்.
ஹூய்கீயிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. எழுந்துநின்றான். கைகூப்பினான். நேரே சென்று போதிதர்மரின் காலில் விழுந்தான். அவ்வளவு தான்.
போதிதர்மர் நெகிழ்ந்தே போனார். ‘நீ என் ஆன்மாவை அடைந்துவிட்டாய், நான் எடுத்துவந்த ஆன்மா தற்போது உன்னிடம்’ என்று கூறி தன் உடைகளையும், பிச்சைப் பாத்திரத்தையும், லங்கவர்த்தன சூத்திரத்தையும் ஹூய்கீயிடம் அளித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.
ஹூய்கீயின் இச்செயலுக்கு பொருள் என்ன? போதிதர்மரின் செயலுக்கும் வார்த்தைக்கும் என்ன அர்த்தம்?
‘எல்லாம் அறிந்தவன் அறிவிக்கமாட்டான்; அறிவிப்பவன் எல்லாம் அறியமாட்டான்’ என்ற போதிதர்மரின் போதனைக்கு ஏற்றவாறு, ‘நான் அறிந்தவன். அதனை தங்களிடம் நிரூபித்து நற்சான்றிதழ் பெற எனக்கு விருப்பமில்லை’, என்று தன் செய்கையால் தெரிவித்திருக்கிறான் ஹூய்கீ.
போதிதர்மரும் அதனை அறிந்து. ‘நீயே, எனக்குப்பின் என் பணியைத் தொடர்வதற்குத் தகுதி வாய்ந்தவன்’ என்று தெரிவிக்கும் விதமாக தன் உடைகளையும், திருவோட்டையும் ஹூய்கீவிடம் கைமாற்றினார். தான் சீனா சென்ற நோக்கத்தையும் பூர்த்தி செய்தார்.
இவ்வாறாக, ஹூய்கி ஜென்னின் இரண்டாம் குரு (மாஸ்டர்) ஆனார்.
இந்த நிகழ்வில் இருந்து பெறப்படும் கருத்துகளே போதிதர்மர் தோற்றுவித்த ஜென் புத்தமதத்தின் அடிப்படைத் தத்துவங்கள். புத்தரைப்போல் பிரபஞ்ச விழிப்படைய மறை நூல்களின் மூலம் கற்கும் அறிவைவிட அனுபவத்தால் கற்கும் அறிவே முக்கியம். அனுபவம் என்றால் புத்தர் பட்டுணர்ந்த அதே அனுபவம். இதனை செந்தமிழில் ‘பட்டறிவு’ என்பர்.
புத்தர் பெற்ற இந்தப் பட்டறிவை வார்த்தைகளால் ஒருவர் அறிய முடியாது. அதனை ‘ஜென்’ மூலமே அறியலாம். ஜென் என்றால் என்ன?
சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் வெளிநாட்டுப் பெயர்களை உச்சரிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே சிக்கல். அதனால் தான் போதிதர்மரை சீனர்கள் ‘தாமோ’ என்றும் ஜப்பானியர்கள் ‘தருமா’ என்றும் தங்களுக்கேற்றார் போல் பெயர் வைத்து அழைக்கின்றனர். அதே போல் ‘ஜென்’ என்பதும் ‘சான்’ என்பதும் ‘தியானம்’ என்ற சொல்லின் திரிபே.
சமஸ்கிருத சொல்லான ‘தியானத்துக்கு’, பாலி மொழியில் ‘ஜான்’ என்று பெயர், அதுவே சீன மொழியில் ‘சான்’ என்றானது. ஜப்பானிய மொழியில் ‘ஜென்’ என்றானது. இவ்வற்றுள் இன்று துலங்கிவிட்ட பெயர் ’ஜென்’ என்பதே. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் போதிதர்மர் சீனா எடுத்துச் சென்ற தியானம் கிட்டத்தட்ட ஜென் ஆனது. ஜென் புத்தமதத்தின் தனிப் பிரிவாக உருமாறியது. செக்ஸ் சாமியார் எனச் செல்லமாக அழைக்கப்படும் ஓஷோ ரஜ்னீஷை உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரும் ஜென் பிரிவு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தத்தால் ஈர்க்கப்பட்டவர்தான். அவர் ஏன் அந்தப் பட்டப் பெயரை பெற்றார் என்றால், கலவியிலும் தியானம் செய்ய முடியும் (அதாவது கலவியிலும் ஜென் சாத்தியம்) என ஆராய்ந்து அறிவித்ததால்தான்.
போதிதர்மர் தாம் வந்த நோக்கம் நிறைவடைந்தது என்று உணர்ந்தார்.
ஆனால் அதற்குப் பின் நடந்த நிகழ்வுகள்?
எப்போதுமே தலைமைப் பதவி என்பது அமைதிக்கு உரித்தானதல்ல என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான ரத்தச் சான்றுகள் இருக்கின்றன. ஷாவலின் பதவியும் அப்படித்தான் ஆனது. போதிதர்மர் இருந்தவரை அந்த நாற்காலி ‘பளிச்’சென்றுதான் பிரகாசமாக இருந்தது. எப்போது அவரை விட்டு ஹூய்கி கைக்கு மாறியதோ. அன்றே அதற்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது.
ஹூய்கிக்கு எப்படி போதிதர்மர் தன் பதவியைத் தரலாம்? அவன் நம்மைவிட எதில் சிறந்துவிட்டான்? ஒழுங்காக அவனுக்கு தியானம்கூட செய்ய வராது. அனாதை. பரதேசி. நம்மைவிடக் கீழான தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன். காலில் விழுந்து பாசாங்கு செய்து போதிதர்மரை ஒருவாறு கவிழ்த்துவிட்டான், சதிகாரன். அவன் எப்படியிருந்தாலும், முற்றும் அறிந்த போதிதர்மருக்கு எங்கே சென்றது புத்தி? அவருக்கு நாம் அப்படி என்ன துரோகம் செய்தோம்? அவர் உண்ணும் சோற்றில் மண்ணையா அள்ளிப்போட்டோம். சரி, இதுவரை மண்ணை அள்ளிப்போடவில்லை. திறமையான உண்மைச் சீடர்களை உணர்ந்துகொள்ள முடியாத அவரது சோற்றில் இனி நஞ்சைக் கலந்தாலும் தப்பில்லை.
ஷாவோலினில் சிலரது மனம் மேற்படி சிந்திக்கத் தொடங்கியது. அது செயல்படுத்தவும் பட்டது. ஆனாலும் எப்படியோ போதிதர்மர் அதிலிருந்து தப்பினார். மீண்டும் ஒருமுறை நஞ்சேற்றம், மீண்டும் போதிதர்மர் தப்புதல். மீண்டும் ஒருமுறை நஞ்சேற்றம். இப்படி மாற்றி மாற்றி செய்துகொண்டே இருந்தால் ஒரு சாமானியன்கூட விழித்துவிடுவான். ஆனானப்பட்ட போதிதர்மருக்குத் தெரியாதா என்ன? இறுதியில் ஒரு நாள் அவர் தமக்கு உணவில் இடப்பட்ட நஞ்சை மனம் விரும்பி உண்டார். சுயவிருப்பத்துடன் இறந்தார்.
இப்படி மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் ஃபிடல் காஸ்ட்ரோவின் ‘தப்புதல்’ படலத்தை விஞ்சியிருப்பார். விதியை வெல்ல யாரால் இயலும்?
போதிதர்மரின் மரணம் குறித்து இன்னும் சில கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், பெரும்பாலான நூல் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்து இதுதான்.
போதிதர்மர் இறந்த பிறகு ஹுய்கீ தானாகவே ஷாவோலினை விட்டு வெளியேறினார். சீனா, ஜப்பான் என தேசம் தேசமாக தியானத்தை எடுத்துச்சென்றார். போதிதர்மருக்குப் பின் ஜென் பௌத்த பிரிவின் இரண்டாம் உபதேசராக சீனம் முழுவதுமே அவரை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஷாவோலின் மட்டும் தனிப் பாதையில் பிரவேசித்துக் கொண்டிருந்தது.
போதிதர்மர் இறந்து மூன்று வருடங்கள் ஓடியிருந்தன.
பமிர் மலைச்சாரல், இதமான காற்றும், அதன் ஈரப்பதமும் அதனை கடந்து செல்பவர்களை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. வெளிநாட்டிலிருந்து சாங் யுங் என்ற அரச தூதுவன் தன் வேலையை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கிட்டத்தட்ட மூன்று வருட காலத்துக்குப் பின் தனது தாயகமான ஷாவோலின் நோக்கி வந்துகொண்டிருந்தான். அப்போது தூரத்தில் யாரோ ஒரு துறவி மெதுவாக நடந்து வருவதைக் கண்டான்.
‘யார் அவர், காலில் செருப்பில்லை. ஆனால் கைத்தடியில் செருப்பொன்று தொங்குகிறது. இந்தியத் துறவிபோல் தெரிகிறார். யார் இது? அட,  நம் போதிதர்மர்!’ என வியந்து யுங் அவரை நோக்கி விரைந்தான். யுங்குக்கு போதிதர்மர் இறந்தது அதுவரை தெரியாது. ‘மாஸ்டர் கொஞ்சம் நில்லுங்கள். நானும் உங்களுடன் வருகிறேன்’ என்று கூவிக்கொண்டே யுங் அவர் பின்னாலேயே ஓடினான். அவர் விலகிச் சென்றார். அவன் விடவில்லை. துரத்திக் கொண்டே பின்னால் சென்றான். ஓரிடத்தில் அவரும் நின்றார்.
‘மாஸ்டர், காலில் காலணி ஏதும் அணியாமல், ஒரே ஒரு செருப்பை தடியில் கட்டித் தொங்கவிட்டபடி எங்கே செல்கிறீர்கள்?’ என்று வினவினான் யுங்.
‘தற்போது நீ எங்கே செல்கிறாய்?‘’
‘ஷாவோலினுக்கு…‘’
‘ஷாவோலினில் நீ அதை அறிவாய், செல்’, என்று சொல்லிவிட்டு போதிதர்மர் நடந்து கொண்டே இருந்தார்.
சரி, போதிதர்மர் ஏதாவது அவசர வேலையாகச் சென்றுகொண்டிருப்பார் என எண்ணி யுங் அவரை வணங்கிவிட்டுக் கிளம்பினான். சில மணி நேரங்களில் யுங், ஷாவோலின் அடைந்தான். தன் வீட்டுக்குச் சென்று இளைப்பாறிவிட்டு கடைத்தெருவுக்கு வந்தவன், தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வழியில் தான் போதிதர்மரைப் பார்த்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டான்.
‘பமிர் மலை நோக்கிச் சென்ற போதிதர்மர் எதற்காக ஒருகால் செருப்பை தன் கைத்தடியில் கட்டித் தொங்கவிட்டிருந்தாரோ தெரியவில்லை’ என்று அவன் சொல்ல, நண்பர்கள் யுங்கை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘போடா பைத்தியக்காரா போதிதர்மர் இறந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. கனவேதும் கண்டாயா என்ன?’ என்று கேலி செய்தனர்.
யுங் அதிர்ச்சியிடைந்தான். ‘என்ன போதிதர்மர் இறந்து விட்டாரா. இல்லை, இல்லை உண்மையிலேயே நான் அவரைப் பார்த்தேன்’ என்று யுங் சத்தியம் செய்தான்.
அப்பக்கம் வந்த ஒற்றர்கள் மூலம் இது மன்னன் காதுக்குச் சென்று சேர்ந்தது.
மன்னன் யுங்கை அழைத்து விசாரித்தான். யுங் தான் கண்டவற்றை அப்படியே சொன்னான். அவன் பேச்சை நம்பாமல் கோபமடைந்த மன்னன், போதிதர்மர் விஷயத்தில் பொய் கூறிய குற்றத்துக்காக யுங்கை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். இப்போதும் யுங் மனம் திருந்தி தான் சொன்னது பொய்தானென்று ஒப்புக்கொண்டால் விடுதலை அடையலாம் என ஒரு வாய்ப்பும் அளித்தான்.
யுங் மனம் கலங்கவில்லை. தான் உண்மையிலேயே போதிதர்மரைக் கண்ணாரக் கண்டதாக உறுதியாகக் கூறினான். யுங் பொய் கூறுபவனல்ல என்றும் நேர்மைக்குப் பெயர் பெற்றவன் என்றும் மன்னனுக்கும் தெரியும் என்பதால், யுங்குக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஷாவோலின் மட பிக்குகளிடம் விசாரணை நடத்த விரும்பினான்.
பிக்குகள் அனைவரும் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
‘பிக்குகளே, போதிதர்மரைக் கண்டதாக யுங் என்பவர் சத்தியம் செய்து கூறுகிறார். தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்றான் மன்னன்.
குலை நடுங்கிப் போனது ஷாவோலின் மட பிக்குகளுக்கு. தாங்கள் போதிதர்மரை நஞ்சிட்டுக் கொன்ற விஷயம் எதுவும் யுங்குக்குத் தெரிந்து விட்டதோ? மழுப்ப ஆயத்தமாகினர்.
‘போதிதர்மரது உயிர் பிரிந்த பின்னர் நாங்களல்லவா, அவரது உடலை அவர் ஒன்பதாண்டுகள் தவமிருந்த குகைக்குள் நல்லடக்கம் செய்தோம்‘
‘இல்லை, யுங் கூறுவதை வைத்துப் பார்த்தால் அவன் உண்மை உரைப்பதாகவே தெரிகிறது. அவன் ஏன் அவசியமின்றி நம்மிடம் பொய் சொல்ல வேண்டும்.’ என்றான் மன்னன்.
‘மன்னா, தங்களுக்கே சந்தேகம் வந்தபின் பேசிப் பயனில்லை, வாருங்கள் அவரது சமாதியை உடைத்துக் காண்பிக்கிறோம்’ என்றனர் ஷாவோலின் பிக்குகள்.
‘தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; மக்கள் அவ்வாறு சந்தேகிக்கின்றனர். மன்னன் மக்கள் பிரதிநிதி அல்லவா? நம் மதத்தில் சமாதியை உடைப்பதற்கு இடமிருந்தால், அவ்வாறே செய்து மக்கள் சந்தேகத்தை தீர்த்துவிடுவோம்.’ என்றான் மன்னன்.
‘இடம் உள்ளது, வாருங்கள் செல்வோம்.’ பிக்குக்கள் ஆவேசமாக குகை நோக்கிப் புறப்பட்டனர். மக்கள் பின்தொடர்ந்தனர்.
போதிதர்மரது நெடுந்துயில் அறை திறக்கப்பட்டது. இல்லை உடைக்கப்பட்டது. நம்மூர் கோவில்களின் கருவறை திறப்பைப் போல.
உள்ளே உடலும் இல்லை, எலும்பும் இல்லை, துணியும் இல்லை. உள்ளே ஒரே ஒரு செருப்பு மட்டுமே அனாதையாகக் கிடந்தது. மிரண்டு போன பிக்குகள் சிரம் தாழ்த்தி வணங்கி மண்டியிட்டனர்.
மாஸ்டர் தாமோ (போதிதர்மர்), தாயகம் திரும்பி விட்டார் என்று உணர்ந்துகொண்டனர்.
இதன் பின்னர் ஷாவொலின் மட பிக்குகள் மனம் திருந்தி ஒன்றுகூடி ஹுய்கீயை அழைத்து வந்து மடத்தை அவர் பொறுப்பிலேயே ஒப்படைத்தனர்.
0
இதுவரை பார்த்தவை அனைத்தும் போதிதர்மரின் மரணத்தைப் பற்றி சீனர்கள் கூறும் கருத்தாகும். இதுவே பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் கருத்தும்கூட. அதன்படி போதிதர்மர் சாகவில்லை. தாயகம் திரும்பிச் சென்றுவிட்டார்.
இவை போக போதிதர்மரின் இறப்பைப் பற்றி வேறு சில கருத்துகளும் நிலவுகின்றன. போதிதர்மர், சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தபோதே இறந்துவிட்டார் என்பது சிலரது நம்பிக்கை.
ஜப்பானியர்களின் கூற்றுப்படி போதிதர்மர் அமர்ந்திருந்தபோதே மறைந்துவிட்டார். இங்கு மறைந்துவிட்டார் என்றால் மரித்துவிட்டார் என்று பொருள் இல்லை. அப்படியே மாயமாக மறைந்துவிட்டார் என்று பொருள். இரு நூல்களை அங்கு விட்டுவிட்டு மாயமாக மறைந்தார். அவை உடற்பயிற்சி பற்றி விளக்கும் ‘யி ஜின் ஜிங் (Yi Jin Jing)’ மற்றும் தியானத்தை விளக்கும் ‘க்ஷி சூய் ஜிங் (Xi Sui Jing)’ ஆகியன. யி ஜின் ஜிங்கே பின்னர் தோன்றிய யிங் ஜிங் குங்ஃபூவுக்கு அடிப்படை நூலாம். ‘க்ஷி சூய் ஜிங்’ கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாம்.
இவைபோக பமிர் மலை வழியே சென்ற போதிதர்மர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டதாகவும், போகிற வழியில் வியட்னாம், கம்போடியா, மலேசியா ஆகிய தேசங்களுக்குச் சென்றதாகவும், அவர் இறக்கவே இல்லை என்றும், ஒவ்வொரு நூற்றாண்டும் அவதரிப்பதாகவும் பல கதைகள் உலவுகின்றன.
இந்த சீன, ஜப்பானிய, பிற கூற்றுக்களின் முடிவில் நமக்குத் தெரியவரும் செய்தி. ‘போதிதர்மர் இன்றும் வாழ்கிறார்.’
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், நெப்போலியன், சே குவேரா, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், எம்.ஜி.ஆர், பிரபாகரன் போன்ற பெரும் புள்ளிகளின் மரணத்தை மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் தலைவரைப் பிரிந்த நிலையை சாமானிய மக்கள் விரும்பவதில்லை என்பதே யதார்த்தமான உண்மை.
அதனால் தங்கள் தலைவன் வாழ்கிறான் என பிறரை நம்ப வைக்க சில கதைகளை இவர்கள் தோற்றுவிப்பதும் வழக்கம். இதனை legend என்றழைப்பர். புனைக்கதைகள் முற்றிலும் கற்பனையாகவும் இராது, முற்றிலும் உண்மையாகவும் இராது; சிறிதளவு உண்மையை வைத்துக்கொண்டு கற்பனையால் புனையப்படுபவை என்று கொள்ளலாம்.
இவ்வாறு புனையப்பட்ட கதைகளின் ஆயுட்காலம் இறந்த நபரைப் பொருத்து வேறுபடும். சில ஒருசில நாட்கள், சில ஓரிரு மாதங்கள், சில ஓரிரு ஆண்டுகள், சில முடிவற்றவை. இம்முடிவற்ற புனைக்கதைகள் புராணக் கதைகள் எனப்படுகின்றன. புராணத்துக்கு பாரதத்தில் எந்தப் பஞ்சமும் இல்லை. அந்த அளவுக்கு பெருந்தலைவர்கள் நிரம்பி வழிந்த பூமி இது.
போதிதர்மர் மீதிருந்த அபரிமிதமான அன்பு, கண்மூடித்தனமான அன்பு மக்களை பல்வேறு புனைகதைகள் புனையத் தூண்டியது. அதுவும் குருட்டுத்தனமான கட்டுக்கதைகள், நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மேலும் பல.
போதிதர்மரை ஆதிமுதல் அலசத் தொடங்கிய நாம் அந்தமாகிய இப்புனைவுகளையும் கொஞ்சம் பார்ப்போம். புனைவுகளில் சீனர்களை லட்சம் மடங்கு மிஞ்சுகின்றனர் ஜப்பானியர்கள்.

கருத்துகள் இல்லை: