வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அரசுக்கு மம்தா ஆதரவு வாபஸ்! 6 அமைச்சர்களும் ராஜினாமா

டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று முறைப்படி விலகியது. பிரதமர் மன்மோகன்சிங்கிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மத்திய அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை நேரில் அளித்தனர். மேலும் மத்திய அரசுக்கு அளித்த வந்த ஆதரவையும் திருமப்பெறுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அதிகாரப்பூர்வமாக திரிணாமுல் காங்கிரசார் கடிதம் கொடுத்துள்ளனர்.
டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள 72 மணி நேர கெடுவையும் திரிணாமுல் காங்கிரஸ் விதித்திருந்தது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி அறிவித்திருந்தார்.

ராஜினாமா ஒப்படைப்பு
மமதா அறிவித்திருந்தபடி இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.
ராஜினாமா செய்தவர்கள் யார்?
ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய், சுற்றுலா துறை இணை அமைச்சரான சுல்தான் அகமத், சுகாதாரத் துறை இணை அமைச்சரான சுதிப் பந்தோ பாத்யாய, ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரான ஷிஷிர் அதிகாரி, தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சரான சவுத்திரி மோகன் ஜாதுவா, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சரான சாவுகதா ராய் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கொடுத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதிப் பந்தோ பாத்யாய, திரிணாமுல் முடிவு தமக்கு வருத்தம் அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாகத் தெரிவித்தார்.
ஆதரவும் வாபஸ்
பிரதமரிடம் ராஜினாமா கடிததத்தை கொடுத்த கையோடு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் கட்சியை கை கழுவிவிட்டோம் என்பதற்கான கடிதத்தையும் ஒப்படைத்தனர் திரிணாமுல் காங்கிரசார். கடந்த 40 மாதங்களுக்கு மேலாக காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே இருந்து வந்த உறவு இப்போது முறிந்துபோய்விட்டது!
அந்தரத்தில் தொங்கும் அரசு
திரிணாமுல் காங்கிரசின் ஆதரவை பறிகொடுத்துவிட்ட காங்கிரஸ் கட்சி இப்பொழுது சிறுபான்மை அரசாகிவிட்டது! திரிணாமுல் காங்கிரசுக்கு மொத்தம் 19 எம்.பிக்கள் உள்ளனர். இப்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை திரும்பப் பெற்றிருப்பதால் மத்திய அரசின் பலமானது 254 ஆகக் குறைந்துவிட்டது. மத்திய அரசுக்கு பெரும்பான்மைக்கு மொத்தம் 273 எம்.பிக்கள் தேவை. இதனால் மன்மோகன்சிங் அரசு ஆட்டம் கண்டுள்ளது. இருப்பினும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தருவதால் தப்பித்தோம்! பிழைத்தோம் என்ற நிலையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது மன்மோகன்சிங் அரசு!

கருத்துகள் இல்லை: