சென்னை: ""நாளை நடக்கும், நாடு தழுவிய, "பந்த்' போராட்டத்தில்,
தி.மு.க., மற்றும் தொ.மு.ச., பேரவையின் அனைத்து இணைப்புச் சங்கங்களும்
கலந்து கொள்ளும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்..
அவரது அறிக்கை:
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்கான உச்சவரம்பு மற்றும் சில்லரை
வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கான அனுமதி போன்றவைகளை, அடுத்தடுத்து மத்திய
அரசு அறிவிப்பு செய்துள்ளது. இதைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் நாளை
நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில், தி.மு.க., மற்றும் தொ.மு.ச., பேரவையின்
அனைத்து இணைப்புச் சங்கங்களும் கலந்து கொண்டு, அவற்றை வெற்றிகரமாகவும்
அமைதியாகவும், நடத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் அளிக்கும்.
தி.மு.க.,வின் பல்வேறு அமைப்புகளும், இதற்கான ஏற்பாடுகளில் பங்கேற்க
வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தொழிற்சங்கங்கள் பங்கேற்பு:
சென்னையில், நேற்று சி.ஐ.டி.யு., மாநிலத் தலைவர் சவுந்தரராஜன்,
ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் கஜேந்திரன், தே.மு.தொ.பே., பொதுச் செயலர்
சவுந்தரபாண்டியன், பகுஜன் தொழிற்சங்கத் தலைவர் கோபிநாத் ஆகியோர் கூட்டாக
நிருபர்களிடம் கூறியதாவது: சில்லறை வர்த்தகத்தில், 51 சதவீதம் அளவிற்கு,
அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது என்ற முடிவினால், ஐந்து கோடி சிறு
வியாபாரிகள் பாதிக்கப்படுவர். எனவே, அரசின் முடிவுகளை கைவிடக் கோரி, நாளை
நடக்கும் "பந்த்' போராட்டத்திற்கு, அரசு போக்குவரத்துக் கழகங்களில்
செயல்படும் சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன. அரசுப் போக்குவரத்துக்
கழகங்களில், பணி எண் வழங்குவதற்கு, 10 ஆயிரம் ரூபாய் வசூலிப்பது, ஓய்வு
பெற்றவர்களுக்கு உரிய பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பது போன்றவற்றைக்
கண்டித்து, வரும், 25ம் தேதி நடக்க இருந்த போக்குவரத்து வேலை நிறுத்தத்தைத்
தள்ளி வைத்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பா.ஜ., ஆதரவு:
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"" மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, நாளை நடைபெறும் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலில் பா.ஜ., பங்கேற்கிறது.சென்னையில் நடைபெறும் மறியலில், கட்சியின் அகில இந்திய செயலர் முரளிதர் ராவ், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பங்கேற்கின்றனர்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக