வெள்ளி, 1 ஜூன், 2012

Bihar உயர் ஜாதி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார் ரன்வீர் சேனையின்

பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில், இன்று அதிகாலை ரன்வீர் சேனையின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை நேருக்கு நேராக பலதடவை சுட்டுக் கொன்றார் என்கிறது போலீஸ்.
ரன்வீர் சேனை தலைவர் ‘முக்ஹியா ஜி’
இந்த ரன்வீர் சேனை என்பது கொஞ்சம் வில்லங்கமான அமைப்பு!
ரன்வீர் சேனையின் தலைவர் ப்ரமேஷ்வர் சிங், வழமைபோல காலையில் வாக்கிங் சென்றபோதே, சுடப்பட்டுள்ளார். தலை, மற்றும் மார்பில் பலதடவைகள் அவர் சுடப்பட்டதில் இருந்து, எக்காரணம் கொண்டும் அவர் உயிர் தப்பக் கூடாது என்ற நோக்கம் புலனாகிறது.
சூடு பட்டு கீழே விழுந்த சிங், அந்த இடத்திலேயே இறந்து போனார்.
இந்தச் சம்பவம், நவாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கதிரா மொஹாலா பகுதியில் நடைபெற்றுள்ளது. பட்னாவில் இருந்து 71 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம்.

கொல்லப்பட்ட ப்ரமேஷ்வர் சிங்,  பண்ணை உயர் ஜாதியார்கள் மத்தியில் ‘முக்ஹியா ஜி’ என்ற பெயரில் அறியப்பட்டவர். ரன்வீர் சேனை என்பது, உயர் ஜாதி பண்ணையார்களின் தனிப்பட்ட காவல் படை. தலித் இனத்தவரை கூட்டம்கூட்டமாக கொன்ற வரலாறு இந்த அமைப்புக்கு உண்டு.
இறுதியாக, 1996-ம் ஆண்டு டிசம்பரில் லக்ஷ்மன்பூரில் 61 தலித் மக்களை கொடூரமாக கொலை செய்த அமைப்பும் இந்த ரன்வீர் சேனைதான்.
ரன்வீர் சேனை தலைவர் ‘முக்ஹியா ஜி’யை கொலைக் குற்றச்சாட்டில் நேரடியாக சிக்க வைக்க ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், வெவ்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஒரு மாதத்துக்கு முன் (ஏப்ரலில்) விடுதலையாகி வெளியே வந்திருந்தார்.
1990களில் ரன்வீர் சேனை தலித் குடியிருப்பு ஒன்றுக்குள் புகுந்து தாக்கியபோது...
1990-களில் தலித் இன மக்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்ட மூன்று சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருந்ததாக வதந்திகள் இருந்தன. ஜகானாபாத், அவுராங்காபாத், நவாடா ஆகிய இடங்களில் நடைபெற்ற அந்த கொலைகளை ரன்வீர் சேனைதான் செய்தது என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அந்தக் கொலை சம்பவங்களிலும், சாட்சியம் ஏதும் இல்லாத காரணத்தால், முக்ஹியா ஜீ தப்பித்துக் கொண்டார்.
சட்டத்தின் பிடியில் கொலைக் குற்றத்துக்காக சிக்காமல் இருந்த இவர்தான், இன்று அதிகாலை கொல்லப்பட்டுள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட மக்களில் யாரோ ஒருவரோ, அல்லது ஒரு அமைப்போ, திட்டமிட்டு அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முக்ஹியா ஜி கொல்லப்பட்ட செய்தி பரவியதில், நூற்றுக்கணக்கான ரன்வீர் சேனை ஆதரவாளர்கள் இன்று காலை அவர் கொல்லப்பட்ட இடத்தில் கூடினர். அந்த இடத்தில் தலித்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் கோஷமிட்ட அவர்களை தடுக்க வந்த போலீஸ் படையை விரட்டியடித்தனர். அங்கு வந்த போலீஸ் எஸ்.பி.-யும் விரட்டியடிக்கப்பட்டார்.
தற்போது அதி பதட்டம் நிலவும் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டு, அங்கு போலீஸ் ரோந்து பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: