வியாழன், 31 மே, 2012

தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஜெயலலிதா மட்டுமல்ல தி.மு.க கூடத்தான் காரணம்.

வினவு
பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதின் பெயரில் எதிர்ப்பே இல்லாமல் ஒரு சடங்கு ஆர்ப்பாட்டத்தை தி.மு.க நேற்று – 30.5.2012 – நடத்தியது. அதில் காங்கிரசு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க விலகுமென கருணாநிதி பேசியதாக சில தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே கிளப்பிவிட்டிருக்கின்றன. அதிர்ச்சியடைந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கிறார்.
“பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று எங்களால் நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம்.
எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். மத்திய அரசிடமிருந்து நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறேன். விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். திமுக கசப்போடு அந்தக் கூட்டணியில் நீடிக்கும்.” இதுதான் கருணாநிதியின் விளக்கம்.
இந்தப் போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாகக் கொள்ளலாமா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆலமரத்து பஞ்சாயத்துக்குப் போன நாட்டாமை தன்னையே குற்றவாளி என்று தண்டித்துக் கொண்ட கதையை விட கருணாநிதியின் நாடகம் மோசம்.
இந்தக் கருமத்திற்கு ஒரு அறிக்கையோடு மட்டும் இந்த விலை உயர்வு அத்தியாயத்தை முடித்திருக்கலாம். ஊர் முழுக்க ஆர்ப்பாட்டம் என்று சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கத் தேவையில்லை. தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் என்று அறிவித்ததினாலேயே ஊடகங்கள் கூட்டணி விலகல் திரியை கொளுத்திப் போட்டன. இல்லையெனில் தினத்தந்தியின் மூன்றாவது பக்கத்து செய்தியோடு அந்த அறிக்கையோ அக்கப் போரோ முடிந்திருக்கும்.
7.50 ரூபாய் விலை உயர்வு என்பது நாடு முழுக்க பெரிய அதிர்ச்சியையும், கோபத்தையும் மக்களிடம் கிளப்பி விட்ட பிறகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆக வேண்டிய கடமை எல்லா கட்சிகளுக்கும் வந்தது போன்று தி.மு.கவிற்கு வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த கடமை நாடகம் நடிப்பே இல்லாமல் இவ்வளவு அவலச் சுவையுடனா நடக்க வேண்டும்?
சோனியாவே அடித்துத் துரத்தினாலும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அடிமைத்தனத்தை வைத்துக் கொண்டே வருவோர், போவோர் அடிப்பதை தாங்கிக் கொண்டே, “நான் ரொம்ப நல்லவன்னு சொன்னான்னு”  ஏன் எல்லோரின் சிரிப்புக்கு ஆளாக வேண்டும்?
பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிர்ப்பில்லையாம், இந்த ஆர்ப்பாட்டம் பெட்ரோல் விலை உயர்விற்கு மட்டுமென அஃறிணைப் பொருளான பெட்ரொலை ஒரு அரசியல் தலைவர் போல ஆளாக்கி சண்டையிடும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு கருணாநிதி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் பொறுப்பு பெட்ரோலுக்கே இருக்கிறதென ஒரு அரிய தத்துவத்தை வேறு கண்டுபிடித்திருக்கிறார் அவர். மக்கள் மீது என்ன ஒரு மரியாதை!
இதில் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற கடமையை மக்களுக்கு வரலாறு தெரியாது என்று துணிந்து நம்பிக்கையோடு விடுகிறார். வாஜ்பாயியின் மடியில் அமைச்சர் பதவிகளை ருசித்துக் கொண்டே, குஜராத் படுகொலையின் போது கண்ணை மூடிக் கொண்டதெல்லாம் தி.மு.கவின் மதச்சார்பின்மைக்கு மகுடம் சூட்டிய நிகழ்வுகள் போலும்.
போதாக்குறைக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் வரும்போது கூட்டணியை விட்டு நீங்குவது போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்ய மாட்டாராம். இதைக் கேட்டால் அந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவி கூட ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழும், இந்த ஊரில் தன்னையும் மதிக்க தெரிந்த ஒருவர் இருக்கிறார் என.
தரகு முதலாளிகளின் கட்சியாக உப்பிவிட்ட தி.மு.கவின் அரசியல், என்ன செய்தாவது அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு சேர்த்து வைத்த சொத்துக்களை காப்பாற்றுவதும், விரிவாக்குவதும் என்றான பிறகு இங்கே ஒட்டுப் பொறுக்கிக் கட்சிக்களிக்குரிய வெத்து வேட்டு சவுடால் கூட இல்லை என்றால் கருணாநிதியின் வீழ்ச்சியை புரிந்து கொள்ளலாம்.
தி.மு.க கசப்போடு காங்கிரசுக் கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்வதிலிருந்தே அவரது ஏனைய நவரசங்கள் போட்டி போடும் அழகினை தரிசிக்கலாம். வாரிசுச் சண்டைகளினால் அலுப்பு, கனிமொழி சிறையினால் வெறுப்பு, தி.மு.க அமைச்சர்களின் கைதால் வரும் நடுக்கம், இடையில் பேரன்களின் படத்தை பார்க்க வேண்டிய கடமை, ஜெயலலிதாவுக்காக எழுத வேண்டிய அறிக்கையின் நிர்ப்பந்தம், இதில் பெட்ரோல் விலை உயர்வு என்றால் அவர் என்னதான் செய்வார்?
தமிழகத்தின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஆளும் ஜெயலலிதா மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.கவும் அதன் தலைவரும் கூடத்தான் காரணம். பாசிசமும், கழிவிரக்கமும் இவர்களது இன்றைய உணர்ச்சி என்றால் அந்த உணர்ச்சியின் அடிப்படை கார்ப்பரேட் மயமாகிவிட்ட திராவிட அரசியல் என்றால் மறுப்பவர் உண்டா?

கருத்துகள் இல்லை: