வெள்ளி, 1 ஜூன், 2012

அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி

தனியார் டி.வி. நடத்திய சத்யமேவ ஜயதே என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தி நடிகர் அமீர்கான், டாக்டர்கள் குறித்து விமர்சனம் செய்தார்.
மருத்துவ சிகிச்சையில் முறைகேடுகள் நடக்கின்றன. 
மெத்தனம், லஞ்சம், தவறான சிகிச்சை, முறை தவறிய நடத்தைகள் போன்றவை டாக்டர் தொழிலில் காணப்படுகின்றன என்று விமர்சனம் செய்தார்.  பெண் சிசு கொலைக்கு டாக்டர்கள் வழிவகுக்கின்றனர் என்ற உண்மையை ஆதாரங் களுடன் அம்பலப்படுத்தினார்.இந்த கருத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். 21 மருத்துவக்கல்வி நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுள்ள மெட்ஸ்கேப் இந்தியா என்ற அமைப்பு, நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, அந்த அமைப்பு அமீர்கானுக்கு எழுதி யுள்ள பகிரங்க கடிதத்தில்,

’’எல்லா டாக்டர்களையும் ஒரே மாதிரியாக பாவித்து, அவதூறான கருத்துக்களை தாங்கள் வெளியிட்டது, வெட்கக் கேடானது.
மற்றவர்களுக்கு எந்த மாதிரியான சமூக சட்ட சூழல்கள் வகுக்கப்பட்டுள்ளதோ, அதன்படியே டாக்டர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த தொழிலில், நேர்மையின்மை, லஞ்சம், ஊழல் போன்றவை நிலவுவதாக சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
மருத்துவ முறையிலும் கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பிற துறைகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.

லஞ்சம், ஊழல், நேர்மையின்மை போன்ற அவலங்களை இந்த சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தவோ, ஒதுக்கித் தள்ளவோ முடியாது. இந்த அவலம் உயர்ந்த நிலையில் நீடித்துக் கொண்டே இருக்கும். பொது மக்கள் மாதிரியே லைசென்ஸ்கள் பெற டாக்டர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
சமூகத்துக்கு நிவாரணம் அளிக்கவும், சேவை செய்யும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்தான், டாக்டர்கள். டாக்டர்களுக்கு நீதி போதிக்கும் தாங்கள், நோயாளிகள் டாக்டர்களை தாக்கும் நிலையை வசதியாக மறந்து விட்டீர்கள். தங்கள் கருத்தால், கோடிக் கணக்கானோர் மனதில் டாக்டர்கள் பற்றி எதிர்மறையான சிந்தனையை பரப்பி விட்டுள்ளீர்கள்.

நம்பிக்கை தான் மிகப் பெரிய நிவாரணி எனவே, உங்கள் டாக்டரிடம் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லாமல் ஒரு டாக்டரை நோயாளி அணுகினால் இது நமது சமூகத்தில் மோசமான பிரதிபலிப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே டாக்டர்கள் குறித்து தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவிக்க வேண்டும்’’ என்று  கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: