செவ்வாய், 29 மே, 2012

வருத்தப்படுவது போல் நடிக்காமல் வரியை குறைக்க வேண்டும்

சென்னை: பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை குறைத்துக் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:சந்தையில் ஏறி வரும் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியம் உயர்ந்து வருகிறது. மானியத்தைத் தொடர்ந்து அளிக்க முடியாது என்பதால், பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது என மத்திய அரசு கூறுகிறது.
மானியம் குறைவு; வரி அதிகம்:ஆனால், அரசு தரும் மானியத்தை விட, பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வரி மூலம், மத்திய, மாநில அரசகள் அதிகமான வருவாயைப் பெறுகின்றன. 2020-11ம் ஆண்டில், மத்திய அரசு பெட்ரோலுக்கு அளித்த மானியம் 4,000 கோடி ரூபாய். அதே நேரத்தில், பெட்ரோலுக்கு விதித்த வரி மூலம் 1 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. பெட்ரோல் மூலம் அரசின் நிகர வருமானம் 96 ஆயிரம் கோடி ரூபாய்.
வருத்தம் எதற்கு:பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி 46 சதவீதம். தமிழகத்தில், பெட்ரோலுக்கு மாநில அரசு 17 சதவீத வரியை விதிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரியை கணிசமாகக் குறைத்துக் கொண்டாலே, பெட்ரோல் விலை உயர்வு பெருமளவு குறையும்.எனவே, பெட்ரோல் விலை உயர்வுக்கு வருத்தப்படுவது போல, மத்திய, மாநில அரசுகள் காட்டிக் கொள்ளாமல், தாமாகவே முன்வந்து, பெட்ரோல் மீது விதிக்கும் வரியை குறைத்துக் கொள்ள வேண்டும்.தி.மு.க., ஆட்சியின் போதும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இதன் பாதிப்பு மக்களுக்கு செல்லக்கூடாது என, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொண்டது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதெல்லாம், பெட்ரோல் மீதான வரியை, எத்தனை முறை குறைக்கப்பட்டது என்ற புள்ளி விவரம் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

கருத்துகள் இல்லை: