வியாழன், 31 மே, 2012

Cellphone..Walking 838 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில், 838 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். இவர்களில், அலைபேசியில் பேசியபடி கவனக்குறைவாக ரயில் பாதையை கடந்தவர், 62 சதவீதம் பேர் இறந்தனர். இது தவிர, 45 பேர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில், நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டியும்; மொபைல் போனில் பேசியபடி, ரயில் பாதையை கடக்கக் கூடாது; ஆளில்லா ரயில்வே கேட்டுகளில், ரயில் வரும் பாதையை கவனித்து கடக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே போலீசார் பொது மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்; விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.இருப்பினும், கவனக்குறைவால் ரயிலில் அடிபட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தமிழகம் முழுவதும், 2010 ஆண்டு, 2,309 பேரும்; 2011ல், 2,318 பேரும்; இந்த ஆண்டு இதுவரை, 838 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.
114 ஆபத்து இடங்கள்:தமிழக ரயில் பாதைகளில், அதிகமாக விபத்து நடக்கும் பகுதி மற்றும் அதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சென்னை ரயில்வே போலீஸ் மண்டலத்திற்கு உட்பட்ட ரயில் பாதைகளில், 67 இடங்களும்; திருச்சி ரயில்வே போலீஸ் மண்டலத்திற்குட்பட்ட பாதைகளில், 47 இடங்களிலும் அதிகமாக விபத்துகள் நடப்பது தெரிய வந்துள்ளது.சென்னை ரயில்வே போலீஸ் மண்டலத்தின் கீழ் உள்ள சென்னை, சேலம், திருப்பூர், கோவை நகரங்களிலும்; திருச்சி ரயில்வே போலீஸ் மண்டலத்தில் உள்ள, திருச்சி கோட்டை, ஸ்ரீரங்கம், திருவரம்பூர், மதுரை கூடல் நகர், சமயநல்லூர் பகுதிகளிலும் சாவைத் தழுவியுள்ளனர்.இந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, ரயில்வே போலீசார் மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளதோடு, இங்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்:இதுகுறித்து தமிழக ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி., தினகரன் கூறுகையில்,தமிழகத்தில், ரயில் பாதையை கவனக்குறைவாக கடந்ததில், சென்னையில் தான் அதிகம் விபத்து நடந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ததில், அலைபேசியில் பேசியபடி ரயில் பாதையை கடந்தவர்கள் முதலிடத்தையும்; ரயில் வருவது தெரியாமல் பாதையை கடப்பவர்கள், இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

"வீடியோ சிடி' ஒளிபரப்பு:ரயில் போக்குவரத்தில் பயணிகள், பொதுமக்கள் முக்கியம் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த, 10 தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு வீடியோ சி.டி., ரயில்வே போலீஸ் மூலம் தயாரிக்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் ரயில் நிலைய அறிவிப்பு மையங்களில் உள்ள ஒளிபரப்பு வசதிகள் மூலமும், ரயில் பாதையை ஒட்டியுள்ள கிராமங்களிலும் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு தினகரன் கூறினார்.

-வீ.சக்கரபாணி-

கருத்துகள் இல்லை: