செவ்வாய், 29 மே, 2012

பிரதிபா பாட்டீல் நிகழ்ச்சிக்காக மினரல் வாட்டர்12 லட்ச ரூபாய்.

சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்! கா.அப்துல்கனி, சென்னையிலிருந்து எழுதுகிறார்:

கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பங்கேற்ற ஒருநாள் நிகழ்ச்சிக்காக, 23 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. விருந்தினருக்கு, "மினரல் வாட்டர்' பாட்டில் வழங்கிய செலவு மட்டும், 12 லட்ச ரூபாய்.
சமீபத்தில், மதுரையில், "தாமரை சங்கமம்' என்ற பெயரில், மூன்று நாள் மாநாடு ஒன்றை, பா.ஜ., கட்சி நடத்தியது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற அந்த மாநாட்டிற்குக் கூட, 23 கோடி ரூபாய் செலவாகியிருக்குமா என்பது சந்தேகமே. வெறும் 83 பேர் பங்கேற்று, ஒருநாள், "கொட்டி' கொண்டதற்கு, 23 கோடி ரூபாய் செலவு. ஜனாதிபதி, "முப்படைகளின் தளபதி' அல்லவா? சம்பிரதாயத்திற்காக, கடற்படை சார்பில் நடத்தப்பட்ட ஒருநாள் கூத்துக்கு, 23 கோடி ரூபாய் செலவு எனில், விமானப்படை மற்றும் தரைப்படை சார்பில் நடத்தப்படும் அணிவகுப்பு மரியாதைகளுக்கு எவ்வளவு செலவாகும்?
சந்திரலேகா படத்தில், ஒரு காட்சியில், "குதிரைக்குக் கொள்ளு வாங்கிப் போட்ட செலவு; ஆனைக்கு அல்வா வாங்கிப் போட்ட செலவு' என, ஒரு, "டுபாக்கூர்' கணக்குக் காட்டப்படும். கணக்கைப்பார்ப்பவர், "குதிரைக்குக் கொள்ளு சரி; ஆனைக்கு எதுக்கய்யா அல்வா?' என வினவுவார்.கடற்படையின் மேற்கு கமாண்டரின் தலைமையக செலவுக் கணக்கு, நமக்கு
சந்திரலேகா படக் காட்சியைத் தான் ஞாபகப்படுத்துகிறது. 83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை, 12 லட்சம் ரூபாய் எனில், ஒரு லிட்டர், "மினரல்' பாட்டில் ஒன்றின் விலை, 14 ஆயிரத்து 457 ரூபாய் ஆகிறது.இவ்வளவு செலவழித்து, வெறும்,"தண்ணீர்' கொடுத்ததற்கு, "ஜானி வாக்கர் பிளாக் லேபிளோ, ரெட் லேபிளோ' "சப்ளை' செய்திருக்கலாமே! இவை கூட, ஒரு லிட்டர், 2,000 மற்றும் 3,000 ரூபாய் விலைக்கே கிடைக்குமே!

கண்ணியம் பற்றி பேசலாமா?நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: "ராஜா லைசென்ஸ் கொடுத்த கம்பெனிகள் மீது விசாரணை; ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வரித்துறை கிடுக்கிப்பிடி' என்ற செய்தி படித்தேன். சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றை நினைத்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.குதிரை காணாமல் போய், மூன்று மாதங்கள் கழித்து, லாயத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போட்டது போல் உள்ளது, இந்த செயல்பாடு. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை, கடலில் போட்ட கல்லாக ஆக்க வேண்டுமென்பது தான் சோனியா, பிரதமர், தி.மு.க., எண்ணம். சுப்ரமணியசாமி, பிரசாந்த் பூஷன் போன்றோரால்தான், வழக்கு இந்த நிலைக்கு வந்துள்ளது.மாபெரும் ஊழலை மறைத்து, பார்லிமென்ட் தேர்தலை (2009) நடத்திய காங்கிரஸ், கண்ணியம் பற்றி பேசுகிறது. பார்லிமென்ட் பெருமை பற்றி ஜனாதிபதி பேசுகிறார். போபர்ஸ் கதைதான், "2ஜி'க்கும் என்பது, நடைமுறையில் தெரிகிறது.

அபாயம்காத்திருக்கு!டி.ஏ.இளங்கோ ஜெயசீலன், தூத்துக்குடியிலிருந்து எழுதுகிறார்:
தென் மாவட்டங்களின் பல கிராமங்களில், பஸ் ஸ்டாண்ட் சுவர்களில், அவ்வூரில் அதிகமாக வாழும் சமூகத்தினர், தங்கள் ஜாதித் தலைவர்களின் புகைப் படங்களை வரைந்து வைக்கின்றனர்.ஜாதித்தலைவர்களின் சிலைகளை கூண்டுக்குள் வைத்து, அரசு பாதுகாக்கிற போது, திறந்த வெளிகளில் வரைந்து வைக்கிற இத்தகைய படங்களால், எப்போது வேண்டுமானாலும் பிரச்னைகள் வெடிக்கலாம்!இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பவர்கள், இந்த படங்களுக்கு அவமரியாதை செய்தால், முதலில் பாதிக்கப்படுவது, உள்ளூரைச் சார்ந்த மாற்று சமூகத்தினர் தான்.தற்போது, தமிழகத்தில், ஜாதி மோதல்கள் இல்லையென்றாலும், நீறுபூத்த நெருப்பாக, பல இடங்களில் புகைந்து கொண்டு தான் உள்ளது.இப்படிப்பட்ட படங்கள் வரைவதை தடுத்து, வரப்போகும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிகாரிகள் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்!

திவாரிக்குகாந்தி குல்லா எதற்கு?க்யூ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சென்னையிலிருந்து எழுது
கிறார்:என்.டி.திவாரி, உ.பி., முதல்வராக இருந்தவர்;முதியவர், அனுபவசாலி. நன்னடத்தைக்கு, முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்.போலீஸ் உதவியுடன், ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, இவர் தான் தந்தையா, இல்லையா என, டி.என்.ஏ., பரிசோதனை வழி முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இவர், தன் பதவி, பணபலம் மூலம், டி.என்.ஏ., பரிசோதனையை முறியடிக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். கோர்ட் ஆணையை மதிக்க தயங்குகிறார்.
"சட்டம் எல்லாருக்கும் சமம்' என்றிருக்கும் போது, கோர்ட், அவருக்கு ஏன் அவகாசம் அளித்து,
பரிசோதனைக்கு உட்படச் சொல்கிறது?
அவர், சாதாரண மனிதராக இருந்தால், கோர்ட்டும், உடனே வலுக்கட்டாயப்
படுத்தி, பரிசோதனைக்கு ரத்தம் எடுத்திருக்கும். செல்வாக்கு பெற்ற நபர், "மாஜி' முதல்வர் என்பதால், அவரிடம் மென்மையாக நடந்து கொள்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு, கோர்ட், அவருடைய பிடிவாதத்துக்கு எல்லாம், அனுசரித்து போகிறது என்பதையே, செய்திகள் உணர்த்துகின்றன.இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் அவர், தன் செல்வாக்கை பயன்படுத்தி, பரிசோதனை முடிவை, தனக்கு சாதகமாக மாற்ற முயலமாட்டாரா? மக்களுக்கு, அரசியல் மீது வெறுப்பு வர, இவர் போன்றோரின் செயல்களே காரணம்.நல்ல அரசியல்வாதியை காண்பது, குதிரை கொம்பாகி விட்டது. இது, நம் நாட்டின் துரதிருஷ்டம். காந்தி குல்லாவை போட்டு, அவரையும் கேலிக்குரியவராக்குகிறார் திவாரி.

ஒட்டகம் மேய்க்கரெடியாகுங்க!வி.பாலு, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மணல் கடத்தலை தடுக்க, தமிழக முதல்வர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு வரவேற்கத் தக்கது.இந்த கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் யார் என்று பார்த்தால், அவர்கள் குப்பனும் இல்லை; சுப்பனும் இல்லை; ஆளும் கட்சி, எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் தான்.இவர்களுக்கு கட்சி, கொள்கை வேண்டுமானால் மாறலாம்; ஆனால், கொள்ளை அடிப்பதில் ஒற்றுமையாக இருக்கின்றனர். அதிகாரிகளின் உறுதுணையுடன், மிகவும் சிறப்பாக இது நடக்கிறது.அண்டை மாநிலமான கேரளத்தில், ஒரு கைப்பிடி மணல் அள்ளக் கூட, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கிருந்து அவர்களுக்கு லாரி லாரியாக மணல் செல்கிறது. அயல் நாடான மாலத்தீவுக்கு, கப்பலில் மணல் செல்கிறது. விரைவில், தமிழகம் பாலைவனமாகும்; ஒட்டகம் மேய்க்கலாம்!

கருத்துகள் இல்லை: