செவ்வாய், 29 மே, 2012

அழகிரியின் கை ஓங்கிறது கொதி நிலையில் ஸ்டாலின்

Viruvirupu
தி,மு.க.வில் தற்போது ஒரே அழகிரி பேச்சாகவே இருக்கிறது. ஸ்டாலின் லண்டன் சென்றதை அழகிரி நன்றாக பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் உள் விஷயம் அறிந்தவர்கள். சென்னை அறிவாலய வட்டாரங்களில் கூட, அழகிரியின் கை ஓங்கியிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
சென்னை அறிவாலயம் எப்போதும் ஸ்டாலின் ஆதரவு மையமாக திகழ்ந்த இடம்.கடந்த வாரமே கருணாநிதியைச் சந்தித்து, முதலில் மதுரையில் தமது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பைசல் பண்ணிக் கொண்டார் அழகிரி.“இங்கே நாங்கள் ஆளும் கட்சியாகவும் இல்லை. மத்தியிலும் முன்பு போல செல்வாக்கு கிடையாது. இந்த நேரத்தில் கட்சியில் இருப்பவர்களையும் வெளியே விரட்டி விட்டு என்ன செய்ய உத்தேசம்?” என்று அவர் நேரடியாக கேட்டபோது, கருணாநிதியால் பதில்கூட சொல்ல முடியவில்லையாம்.

“என்னுடைய சொந்த விருப்பத்தில் செய்யப்பட்ட காரியம் அல்ல அது” என்று மட்டும் சொன்னாராம்.
அதன்பின் நடந்த பேச்சுவார்த்தைகளின்பின், மதுரைக்காரருக்கு சாதகமான பல முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிறார்கள். அழகிரிக்கு சாதகமாக தயாளு அம்மாளும் நடந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.
தென் மாவட்டங்களில் தனது அனுமதி இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி, கருணாநிதியின் உத்தரவாதத்தையும் பெற்ற பின்னரே வீட்டை விட்டு கிளம்பினார் என்று தெரியவருகிறது. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் அவர்.
இதையடுத்தே, மதுரையில் நோட்டீஸ் பெற்றவர்களுக்கு, மறு ஓலை போனது. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று அண்ணா சொன்னதை மேற்கோள் காட்டி, கலைஞரின் கடிதம் முரசொலியில் வெளியானது.
இந்த விபரம் எல்லாம், அவர்கள் குடும்ப நபர் ஒருவராலேயே ஸ்டாலினுக்கு ‘பதமான முறையில்’ போட்டுக் கொடுக்கப்பட்டது. அமைதியாக ஓய்வு எடுக்கச் சென்ற அவர், கொதி நிலையில் உள்ளார் என்கிறார்கள். எதிர்த் தரப்புக்கு செக் வைக்கும் விதமாக சில ஏற்பாடுகளை செய்திருக்கிறார் என்று காதைக் கடிக்கிறார்கள் அவரது நெருங்கிய சகாக்கள்.
“வரும் திங்கட்கிழமைக்கு முன், ஸ்டாலின் தரப்பில் இருந்து பெரிதாக ஒரு ‘அடி’ கொடுக்கப்படும். அப்போது பாருங்கள் சேதியை” என்றார், ஸ்டாலினின் இன்னர்-சர்க்கிள் நபர் ஒருவர்.
வரும் திங்கட்கிழமை அல்லது அதற்குமுன், தென் மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில், முக்கிய தி.மு.க. நடவடிக்கை நடக்கவுள்ளதா?

கருத்துகள் இல்லை: