வெள்ளி, 1 ஜூன், 2012

சாமியார்கள் தேர்தலில் போட்டியிட தடை புத்த, இந்து, கிறித்துவ, இஸ்லாமிய சகலரும் தேர்தலில்

 இலங்கையில் புத்த துறவிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதை தடை செய்யக் கோரும் மசோதா ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து, எந்தவொரு மதத் தலைவரும், எம்.பி.-யாவதை தடை செய்ய வேண்டும் என்று கோருகிறது இந்த மசோதா.
இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷே, இந்த மசோதாவை சமர்ப்பித்திருக்கிறார். இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலே, சட்டமாகும்.
இலங்கை அரசியல் சட்டத்தின் 19-வது சட்டப்பிரிவாக இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரியிருக்கிறார் விஜேதாச ராஜபக்ஷே. தற்போதுள்ள 17-வது நாடாளுமன்றம் கலைக்கப்படும் முன்னர் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
“மதங்கள், தத்தமது கௌரவத்தையும், பெருமையையும் காத்துக் கொள்ள வேண்டும். மதத் தலைவர்கள் அல்லது மதகுருக்கள் தமது மதப் பணிகளை செய்வதே, மதத்துக்கு அவர்கள் ஈட்டிக் கொடுக்கும் கௌரவமாக இருக்கும். அதை விடுத்து மதத் தலைவர்கள் அரசியல்வாதிகளாக செயல்படுவது, மதத்தின் மீதுள்ள மரியாதையை கெடுத்துவிடும்” எனவும் விளக்கம் கொடுத்திருக்கிறார் அவர்.

இலங்கையின் பிரதான மதங்களாக, புத்த, இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மதங்கள் உள்ளன. அரசியலில், புத்த துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஈடுபட்டு வருகிறது. கணிசமான எம்.பி.க்களை உடைய அக்கட்சி, ஆளும் கட்சி கூட்டணியில் உள்ளதுடன், ஆட்சியிலும் பங்கு பெறுகிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ள விஜேதாச ராஜபக்ஷேவின் ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
ஆரம்ப காலம் முதல் அரசியலுக்கும் புத்த மதத்துக்கும் நெருங்கிய தொடர்புடைய இலங்கையில், இந்த மசோதா ஜெயிக்க சான்சே இல்லை. ஜெயிப்பதை விடுங்கள், மசோதாவை தாக்கல் செய்துள்ள விஜேதாச ராஜபக்ஷேவை பிலுபிலுவென பிடித்துக் கொள்ள போகிறார்கள் புத்த துறவிகள்!

கருத்துகள் இல்லை: