திங்கள், 28 மே, 2012

வரலாறு காணாத மக்கள் எதிர்ப்பு-சகாயம் மீண்டும் மதுரை கலெக்டராவாரா?

 Sagayam Be Madurai Collector Again
நேர்மையான, கண்டிப்பான அதிகாரி என பெயர் எடுத்த மதுரை கலெக்டர் சகாயம் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பும் ஏற்றுக் கொண்டார்.
இந்த மாறுதல் மதுரை மாவட்டத்தில் பொது மக்கள், அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நுகர்வோர் அமைப்பினர், சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி, திருநங்கைகள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் மதுரை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கலெக்டரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை கலெக்டர் சகாயத்தை மாற்றக் கூடாது என தலைமை செயலாளருக்கு தந்தி அனுப்பிய வண்ணம் உள்ளனர். சிலர் எஸ்.எம்.எஸ். மூலம் கலெக்டரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே சகாயம் மாற்றம் குறித்து தமிழக உளவுத்துறை தமிழக அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் மதுரை கலெக்டர் சகாயம் மாற்றம் பொது மக்கள் மத்தியில் அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதாம்.

இதனால் சகாயத்தை மீண்டும் மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் சகாயம் இதை விரும்பவில்லை என்று அவரது ஆதரவு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: