வியாழன், 31 மே, 2012

MGR புலிகள் ஆதரவு? கலைஞர் ஆதரவில்லை? ஜெயலலிதா எதிர்ப்பு?


 http://mathimaran.wordpress.com/

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் கணிசமான பேர் திமுக காரர்கள்தான்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, நன்கொடை தருவது என்பதை திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது.
தலைமையை மீறிய இந்த அரசியல் உணர்வு மரியாதைக்குரியதாக இருக்கிறது.
ஈழப் பிரச்சினையின் காரணமாகவே பல தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறியும் இருக்கிறார்கள். (வைகோ மற்றும் அவரை ஆதரித்தவர்கள்)
இதற்கு நேர் எதிராக, அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் தீவிரமான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிறைய பண உதவி செய்தவர் என்று அவரை பற்றிய புகழுரை இன்றும் பேசப்படுகிறது.
அதற்கு நேர் மாறாக, ஒரே ஒரு அதிமுக காரரைக்கூட விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவோ, ஈழ விடுதலை ஆதரவாளராகவோ பார்க்க முடியவில்லை.

குறிப்பாக, ஈழப் பிரச்சினையை தன் கட்சிக்குள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் தன் தொண்டர்களிடம் அறிமுகம் கூட செய்யவில்லை.
அதற்கு அடையாளமாகத்தான் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தனி ஈழத்திற்கும், புலிகளுக்கும் எதிரான ஒருவர் அந்தக் கட்சிக்கு தலைவராகவும் வர முடிந்தது.
ஜெயலலிதா பகிரங்கமாக, புலிகளுக்கு எதிராகவும், தனி ஈழத்திற்கு எதிராகவும் கருத்து சொன்னபோது, விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான எம்.ஜி.ஆர் மீது, பக்தி கொண்ட தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல,
“அய்யோ.. விடுதலைப் புலிகளா, அவுங்க மோசமான ஆளுங்கப்பா… ராஜிவ் காந்தியையே கொன்னுட்டானுங்கப்பா..” என்றும்,
“அட, இலங்கைக்குபோய் அவுங்க நாட்ல இருந்துகிட்டு.. தமிழ் ஆளுங்க ஏம்பா தனிநாடு கேக்குறாங்க? அதனாலதாம்ப அவன் இவனுங்கள சுடுறான்..” என்றும் பொறுப்பற்று பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: