திங்கள், 28 மே, 2012

ஆந்திராவில் காங்கிரஸ் தன் தலையில் தானே மண்ணை

 Y S Jagan Arrest Congress Hits Self Destruct Button நம்மை நாமே நாறடித்துக் கொள்வது எப்படி?... காங். கற்றுத் தரும் பாடம்!

ஹைதராபாத்: யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது என்பது பழமொழி. நம்மை நாமே நாறடித்துக் கொள்வது என்பது புதுமொழி. இந்தப் புதுமொழியை இந்திய அரசியலுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.
ஆந்திராவில் காங்கிரஸ் இத்தனை காலம் தாக்குப் பிடித்து, உயிரோடு இருந்ததற்கு முக்கியக் காரணமே மறைந்த ராஜசேகர ரெட்டி என்பது ஆந்திராவில் ப்ரீகேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட தெளிவாகத் தெரியும்.
முற்றிலும் ராஜேசகர ரெட்டியின் சொந்த செல்வாக்கால்தான் ஆந்திராவில் காங்கிரஸார் தாக்குப் பிடிக்க முடிந்தது, தழைத்தோங்க முடிந்தது. சந்திரபாபு நாயுடு என்ற பெரிய இமயமலையை தகர்த்துத் தவிடுபொடியாக்கி காங்கிரஸை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தவர் ராஜேசகர ரெட்டிதான்.மேலும் தான் உயிருடன் இருந்தபோதே தனது வாரிசு தனது மகன் ஜெகன்தான் என்பதையும் வெளிப்படையாக தெரிவித்தவர் ரெட்டி. மேலும் 'ஜகன்கோசரம் ஜனம், ஜனாக்கோசரம் ஜெகன்' என்ற புதுமொழியை உருவாக்கி பட்டி தொட்டியெங்கும் தனது மகனை தனது வாரிசாக பட்டம் சூட்டி அறிமுகப்படுத்தியவரும் ராஜசேகர ரெட்டிதான்.

அப்போதெல்லாம் காங்கிரஸ் மேலிடம் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. அவர்களுக்குத் தேவை ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்க வேண்டும். ராஜசேகர ரெட்டி புண்ணியத்தில் எம்.பிக்கள் கிடைக்க வேண்டும்.இதன் மூலம் மத்தியில் நமது ஆட்சி தொடரும் என்ற ஒரே எண்ணம்தான்.

ஆனால் ராஜசேகர ரெட்டி மறைந்த பின்னர் அப்படியே மாறி விட்டது காங்கிரஸ் கட்சியின் மேலிடம். ராஜசேகர ரெட்டியின் வாரிசாக அனைவராலும் அறியப்பட்ட, ஏற்கப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டியை ஏற்க, அங்கீகரிக்க, மதிக்க காங்கிரஸ் மேலிடம் தவறி விட்டது, மறுத்து விட்டது. இதன் விளைவை இன்று காங்கிரஸார் அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்.

2004ம் ஆண்டு மே மாதம் முதல் 2012 மே மாதம் வரையிலான ஆந்திர அரசியல் நிகழ்வுகளைப் பார்த்து வந்தவர்களுக்கு அதன் ஆறு வித்தியாசம் மிகப் பெரிதாகவே தெரியும். 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது சோனியா காந்தியின் கரத்தை வலுப்படுத்துவதற்காகவும், காங்கிரஸுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஓடி ஓடி உழைத்தார் ராஜசேகர ரெட்டி. ஆனால் இன்று அவரது மகனை மிகப் பெரிய அளவில் அசிங்கப்படுத்தி விட்டது காங்கிரஸ் என்று அனைவரும் குற்றம்சாட்டுகிறார்கள்.

நிதி மோசடி செய்து விட்டார், சொத்துக்களைக் குவித்து விட்டார் என்று குற்றம் சாட்டி சிபிஐயை விட்டு கைது செய்து விட்டனர் ஜெகனை.

இதை சாதாரண லோக்கல் அரசியல் விளையாட்டு என்று எடுத்துக் கொண்டாலும் கூட காங்கிரஸுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு என்பது மிகப் பெரிதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

ராஜசேகர ரெட்டி மறைந்ததற்குப் பிறகு ஆந்திராவில் காங்கிரஸின் அஸ்திவாரம் கிட்டத்தட்ட நமுத்துப் போய் விட்டது. எப்போது அது இடிந்து விழும் என்ற கேள்வி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தெலுங்கானா விவகாரத்தில் ஏற்கனவே காங்கிரஸ் நாறிப் போய் விட்டது. முதல்வர் பதவியில் கிரண் ரெட்டி இருக்கிறாரே தவிர அவரால் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை. இவரது தலைமையில் 2014 சட்டசபை பொதுத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால் மிகப் பெரிய அழிவு உறுதி என்கிறார்கள்.

கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. இதை சமாளிக்கத்தான் சிரஞ்சீவியைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இருக்கும் அளவுக்குக் கூட சிரஞ்சீவிக்கு தெளிவான அரசியல் பார்வை கிடையாது என்பதே உண்மை.

இந்த நேரத்தில் ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கை இங்கு நினைவு கூற வேண்டும். 2004 தேர்தலிலும் சரி, 2009 தேர்தலிலும் சரி ஆந்திராவிலிருந்து அதிக அளவிலான காங்கிரஸ் எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பி வைத்த பெருமை ராஜசேகர ரெட்டிக்கு மட்டுமே உண்டு. அதை காங்கிரஸ் தற்போது வசதியாக மறந்து விட்டது.

ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்தபோதும் கூட அவர் மீது பெருமளவிலான ஊழல், நிதி மோசடி புகார்கள் வரத்தான் செய்தன. ஆனால் அப்போது சோனியா காந்திக்கு அது காதில் விழவில்லை போலும், மெளனமாகத்தான் இருந்தார். காங்கிரஸ் மேலிடமும் அதை கண்டுகொள்ளவில்லை. ராஜசேகர ரெட்டியால் எத்தனை எம்.பிக்களை அனுப்ப முடியும் என்பது குறித்து மட்டுமே காங்கிரஸ் மேலிடம் கவலைப்பட்டு வந்தது. ராஜசேகர ரெட்டி மீதான ஊழல் புகார்கள் குறித்து அது கவலைப்படவே இல்லை.

ஆனால் இன்று ராஜசேகர ரெட்டி ஆட்சியில் பெருமளவில் நிதி மோசடி நடந்து விட்டது. சொத்துக்களை குவித்து விட்டார் ஜெகன் என்று கூறி சிபிஐ கைது செய்துள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலையை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் மேலிடத்திற்குப் பெரும் குடைச்சலாக இருக்கிறார், முதல்வர் பதவியை கேட்டு பிடிவாதம் செய்கிறார், தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்க துடிக்கிறார், இதை விடக் கூடாது, அனுமதிக்கக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே காங்கிரஸ் மேலிடம் செயல்படுவதாக ஜெகன் கைது பின்னணியை ஆந்திர அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் தேசிய அரசியல் விமர்சகர்களும் பார்க்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அழிவை இந்த கைது விவகாரம் தேடித் தரப் போகிறது என்று அத்தனை பேருமே கூற ஆரம்பித்துள்ளனர். அதாவது தன்னைத் தானே அழித்துக் கொள்ள காங்கிரஸ் முடிவெடுத்து நடந்து வருவதாகவே இதை அனைவரும் பார்க்கின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டியை ஒடுக்கினால், அதிருப்தியில் இருந்து வரும், போர்க்கொடி உயர்த்தி வரும் பிற காங்கிரஸ் தலைவர்கள் தாங்களாக வழிக்கு வருவார்கள் என்பது காங்கிரஸ் கட்சியின் எணணமாகத் தெரிகிறது. ஆனால் ஜெகன் விவகாரம் அப்படிப்பட்டதல்ல என்பது ஆந்திர அரசியல் நோக்கர்களின் எச்சரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் விரைவில் சிதறுண்டு போகும் வாய்ப்புகள் பிரகாசமாகி வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஜெகன் கட்சி மேலிடத்திடம் கேட்டது முதல்வர் பதவியை. அதைக் கொடுக்க காங்கிரஸ் மேலிடம் முகத்தில் அடித்தாற் போல மறுத்து விட்டதால்தான் தனிக் கட்சி காணும் முடிவுக்கு வந்தார் ஜெகன். ஒருவேளை அவரிடம் முதல்வர் பதவியைக் கொடுத்திருந்தால் நிச்சயம் தனது தந்தையைப் போல காங்கிரஸை இரும்புக் கோட்டை போல மாற்றியிருப்பார் என்பது ஜெகனின் ஆதரவாளர்கள்வாதமாகும். இப்படி நடந்திருந்தால் 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியை ஜெகன் எளிதாக தேடித் தந்திருப்பார் என்று அவர்கள் கோபத்துடன் கூறுகிறார்கள்.

மொத்தத்தில் ஆந்திராவில் தனது தற்கொலைக்கு தானே முடிவு செய்து விட்டது காங்கிரஸ். எப்போது அந்த முடிவு வரப் போகிறது என்பதுதான் இப்போதைக்கு அனைவரின் கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது

கருத்துகள் இல்லை: