வெள்ளி, 1 ஜூன், 2012

சிக்கன நடவடிக்கை: ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்த மத்திய அரசு கட்டுப்பாடு

புதுடில்லி: செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், மத்திய அரசு துறைகளில் புதிதாக பதவிகளை உருவாக்கவும், நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்களை நடத்தவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
வாகனம் வாங்க தடை: இதுதொடர்பாக, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும், மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும், திட்டமில்லா செலவில், 10 சதவீதத்தை குறைக்க வேண்டும். எந்த துறையைச் சேர்ந்தவர்களும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தக் கூடாது.
புதிதாக வாகனங்கள் வாங்குவதும், மறு உத்தரவு வரும்வரை தடை செய்யப்படுகிறது. துறை ரீதியான பணிகளுக்காக அதிகாரிகள் மற்றும் அமைச்சகத்தினர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது, குறைந்த அளவிலான குழுவினரை மட்டுமே, உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அத்துடன், குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டும்: வெளிநாடுகளில் மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில், 10 சதவீதம் குறைவான அளவுக்கே, ஒவ்வொரு அமைச்சகமும் செலவிட வேண்டும். பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி, வரும் முன்மொழிவுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்படாது. மத்திய அரசு, ஏற்கனவே ஒதுக்கிய நிதியை அல்லது மானியங்களை சரியாக செலவிட்டதற்கான கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத, மாநில அரசுகள் மற்றும் இதர அமைப்புகளுக்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லாமல், எந்த துறையினரும் நிதி எதுவும் ஒதுக்கக் கூடாது. பேரியல் பொருளாதாரச் சூழலை மேம்படுத்த, கிடைக்கும் நிதி ஆதாரத்திற்குள், சரியானவகையில் அனைத்து துறையினரும், செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.

கொள்முதல் செலவு: நிதியாண்டின் கடைசி காலாண்டில், கொள்முதல் செலவுகளை, ஒவ்வொரு துறையினரும் தவிர்க்க வேண்டும். இதன்மூலம் வீணான செலவுகளை தவிர்க்கலாம். இந்த சிக்கன நடவடிக்கைகளை எல்லாம், அனைத்து அமைச்சகங்களை சேர்ந்த துறையினரும் கண்டிப்பாக, முழுமையான அளவில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, நிதி அமைச்சக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: