பம்பாயில் பாஜகவின் தேசிய செயற்குழுவில் யார் பலமாகத் தும்மல் போடுகிறார்கள், Racists நரேந்திர மோதி வருவாரா? corruption எதியூரப்பா வருவாரா? அத்வானி கடைசிநாள் பேரணியில் கலந்து கொள்வாரா என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த, இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற தேசியப் பிரச்சனைகளை மாய்ந்து மாய்ந்து எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
சென்ற மாதம் காங்கிரஸில் அல்லோலகல்லோலப்பட்ட அபிஷேக் மனு சிங்வி விவகாரம் பற்றி வாயே திறவாத மீடியாக்கள் இன்று சஞ்சய் ஜோஷிக்கும், மோதிக்கும் கடும் விரோதம்; அதனால் மோதி கட்கரியை மிரட்டுகிறார் என்று சேற்றை வாரித் தூற்றுகின்றன. சஞ்சய் ஜோஷி பதவி விலகவில்லயென்றால் நான் முதல்வர் பதவியைத் துறப்பேன் என்று மோதி மிரட்டுவதாக மீடியாக்கள் சரடு விடுகின்றன. இன்னொரு பக்கம், சஞ்சய் ஜோஷி கட்சியில் நீடித்தால் கட்சிக்குக் காசு கொடுக்க முடியாது என்று சவால் விடுவதாக எழுதித் தள்ளுகின்றனர் மீடியா மஹானுபாவர்கள். எல்.கே.அத்வானி எதியூரப்பாவுடன் ஒரே மேடையில் அமர்வதை விரும்பவில்லை, எனவே அவர் இந்த செயற்குழுவைப் புறக்கணிக்கப் போகிறார்; எல்.கே. அத்வானிக்கு கட்கரி இரண்டாம் முறை கட்சித் தலைவராவது பிடிக்கவில்லை, எனவே பேரணியைப் புறக்கணிக்கிறார்..இவையெல்லாம் 24/7 அண்ட ஆகாசப் புளுகு சானலின் உபயம்.
கடந்த 2011 டிசம்பரில் தில்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழுவிலும், அதைத் தொடர்ந்து வந்த உத்திரப் பிரதேசத் தேர்தல் பிரசாரத்தில் மோதி பங்கேற்காததும் மீடியாவின் மோதி தொடர்பான மேற்கூறிய குடைச்சலுக்கு ஒரு காரணம். எண்பதுகளின் கடைசியில் மஹராஷ்டிர ஆர்.எஸ்.எஸ்சில் பணி புரிந்து கொண்டிருந்த சஞ்சய் ஜோஷியை குஜராத்தில் பாஜகவின் கட்சிப் பணிக்காக ஆர்.எஸ்.எஸ் அனுப்பியது. அப்பொழுது நரேந்திர மோதி அங்கு பாஜக பொதுச் செயலாளர். பிறகு பாஜக 1995 ஐல் ஆட்சியைக் கைப்பற்றி கேஷுபாய் படேல் தலைமையில் ஆட்சி அமைந்தது; இடையில் ஷங்கர் சிங் வகேலா கட்சிக்குள் புரட்சிக் கொடி தூக்கியதில் நரேந்திர மோதியிடமிருந்த பொதுச் செயலாளர் பதவி சஞ்சய் ஜோஷிக்குச் சென்றது. இதிலிருந்தே இவர்களிருவருக்கும் உரசல் இருப்பதாகக் கூறப்படுவதுண்டு. பிறகு 1998 இல் நரேந்திர மோதியிடம் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டதுடன், சஞ்சய் ஜோஷியை தில்லி தலைமை அங்கு இழுத்துக் கொண்டு கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் ஆக்கியது. பிறகு உத்திரப் பிரதேசத் தேர்தல் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்ட்து, அங்கு தோல்வி கண்டது….இதெல்லாம் பூர்வ கதை. இந்த இருபதாண்டு காலக் கதைகளைக் கிளறி, அதெற்கிடையே தோராயமாக ஒரு முடிச்சிட்டு பிதற்றித் திரிகிறது மீடியா. ஆயிற்று, இப்பொழுது சஞ்சய் ஜோஷி ராஜிநாமா செய்ததாலேயே, மோதி கலந்து கொண்டார் என பிதற்றத் துவங்கியிருக்கிறது.
ஆனால் நடந்து முடிந்தது நேர் மாறான விஷயம்! மோதி பம்பாயில் பேசிய பேச்சிற்கு காங்கிரஸிற்கு பேதி கண்டதுதான் மிச்சம். எடுத்த எடுப்பிலேயே பிரதமரையும், இந்த ஆட்சியையும் கூறு போட்டுத் தொங்க விட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் எஸ்.எம் கிருஷ்ணா தன்னுடைய உரையைப் படிக்காமல், அந்நிய நாட்டின் உரையைப் படித்த்தற்கும் பிரதமர் கூட்டணி நிர்பந்தம் என்று சொல்வாரா?
· கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சி; அவ்வளர்ச்சியோடு தேசிய வளர்ச்சி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சி ஒப்பீடு.
· தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்ற பெயரில் காங்கிரஸ் செய்யும் தகிடுத்தத்ங்கள்.
· மத்திய காங்கிரஸ் பாஜக மற்றும் இதர கட்சிகள் ஆளும் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது.
· அரசிற்கும், ராணுவத் தளபதி வி.கே.சிங்கிற்கும் இடையிலான மோதல் போக்கு.
போன்றவற்றையெல்லாம் கடுமையாக விமர்சித்தார். இதற்கு முன்னதாகப் பேசிய அருண் ஜேட்லி தனக்கே உரித்தான பாணியில் இந்த காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்ற நாள் முதலாக இவர் பேசும் கணம் வரை நடைபெற்ற ஊழல்களை அடுக்கி, அதற்கு பிரதமரின் கையாலாகாத்தனத்தையும், மெத்தனப் போக்கையும் கடுமையாகச் சாடினார். பிறகு பேசிய நிதின் கட்கரி அவ்வளவாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் கூட இந்த தேசிய செயற்குழுவின் நோக்கம் வெற்றி பெற்றதாகவே சொல்ல வேண்டும்.
பிறகு சம்பிரதாயமான சில தீர்மானங்கள், கட்கரியை இரண்டாம் முறையாக கட்சித் தலைவராகத் தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலிரண்டு தினங்கள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்வானியும், சுஷ்மா ஸ்வராஜும், இத்தீர்மானங்களின் போதும் பேரணியின் போதும் இல்லை, தனிப்பட்ட மற்றும் முன்னதாக ஒப்புக் கொண்ட கட்சி நிகழ்வுகளுக்காக தில்லி திரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் ஜனசங்க காலம் தொட்டு, இன்று வரை கட்சியின் மூளையாக செயல்பட்டு வரும் அத்வானி கட்சியின் செயற்குழுவிற்குப் பிறகு மரபாகவே நடைபெறும் பேரணியைப் புறக்கணிப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக என்று கட்சியினர் என்னதான் சமாதானம் கூறினாலும், அத்வானி பேரணியைப் புறக்கணித்ததில் விஷயமில்லாமலிருக்காது என்றே தோன்றுகிறது.
தேர்தலில் வாக்களிக்கப் போகும் மக்கள் நிச்சயமாக NDTV யையோ, மற்ற மீடியாக்களின் கருத்திற்கோ செவி சாய்த்து வாக்களிக்கப் போவதில்லை. நல்ல நிர்வாகத் திறன் கொண்ட நேர்மையான நல்லாட்சி வழங்கக் கூடிய ஒரு தலைவரைத்தான் மக்கள் விரும்புவர். இதை பாஜக உணர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தேசத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
இட்லிவடையின் சில கேள்விகள்:
1. இரண்டாம் முறை கட்சிதலைவர் பரிந்துரையின் போது ஏன் அத்வானி அப்செண்ட் ஆக வேண்டும் ?.
2. ஏன் கட்கரி தலைவர் பதவியை இரண்டாவது முறை வேறு யாருக்காவது விட்டுக்கொடுக்க கூடாது ?
3. ஏன் இப்போது சஞ்சய் ஜோஷி ராஜிநாமா செய்ய வேண்டும் ?
4. மத்திய தலைமை முதுகெலும்பற்றது என்று சொல்லும் எடியூரப்பாவை ஏன் ஒதுக்கி வைக்க முடியவில்லை ?
சர்க்கஸில் மற்றவர்களை காட்டிலும் நம்மை கவர்வது அங்குள்ள கோமாளிகள் தான். தற்போது பிஜேபியிலும் அதே மாதிரி தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக