சனி, 17 மார்ச், 2012

எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்க செய்யுங்கள்: ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை:""எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்'' என, சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை தீட்டி, மக்களிடையே எடுத்துச் செல்வது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம். இதற்கு மாறாக, தி.மு.க., ஆட்சியில் குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, திட்டங்களைத் தீட்டினர். இதனால், கருணாநிதி தலைமையிலான ஆட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் வெளியேற்றப்பட்டு அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்தது.அ.தி.மு.க., பொறுப்பேற்றதிலிருந்து, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை உயர்வு, காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் இணைப்பு, மாணவர்களுக்கு விலையில்லா மடி கணினி என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளீர்கள். அமைச்சராக இருந்த கருப்பசாமி இறந்ததால், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நாளை (18ம் தேதி) நடக்கிறது. இதில், அ.தி.மு.க., வேட்பாளராக முத்துச்செல்வி போட்டியிடுகிறார். அமைச்சராக இருந்த கருப்பசாமி போலவே எளிமையாக பழகக் கூடியவர் இவர். மக்களை சுற்றி, சுற்றி வந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடியவர்.தி.மு.க., சார்பில் போட்டியிடுபவரோ, நில அபகரிப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளார். இவற்றை சீர்தூக்கிப் பார்த்து, 18ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களை, டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என, சங்கரன்கோவில் தொகுதி வாக்காளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: