புதன், 14 மார்ச், 2012

காங்கிரஸ் கூட்டணி தி.மு.க. மறுபரிசீலனை செய்ய.வீரமணி வேண்டுகோள்


இலங்கை தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்கு அரசு தமிழர்களுக்கு எதிரான விரோத போக்கை கடைபிடித்து வருவதால் காங்கிரஸ் கூட்டணி உறவை தி.மு.க. மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கி.வீரமணி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அதன் தலைவர் பல முறை வற்புறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி உள்பட அத்துணைக் கட்சிகளும், வற்புறுத்தி, தங்கள் உணர்வுகளைத் தெரிவித்து விட்டனர்.
தமிழக ஆளுங் கட்சி, முதல் அமைச்சர், இடதுசாரி கட்சிகள் உட்பட பலரும் இதில் ஒரே குரலில் வற்புறுத்தி விட்டனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் தி.மு.க., அ.தி.மு.க. இடதுசாரிகள், பா.ஜ.க., உட்பட எதிர்க்கட்சிகள் இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உரையில்கூட தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்கும் வகையிலான உத்தரவாதம் இல்லை. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வைக் கிஞ்சிற்றும் மதிக்காத வஞ்சிக்கும் போக்காகவே கருதப்படும். இந்நிலையில் இன்னமும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு வெண்டைக்காய், விளக்கெண்ணெய், கத்தாழை கலந்ததாக'' இருப்பது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது.
தமிழ்நாட்டையும் காங்கிரஸ் கட்சி கை கழுவி விடத் தயாராக விட்டது என்பதையே இது காட்டும். அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் தி.மு.க. தலைவர் எவ்வளவோ வேண்டுகோள் மேல் வேண்டுகோள் கொடுத்த பிறகும் மேலும் பிடிவாதம் காட்டினால், தி.மு.க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடருவதுபற்றி தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.
மத்திய ஆட்சி என்பது வெறும் காங்கிரஸ் ஆட்சி அல்ல; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதை ஏனோ வசதியாக மறந்துவிட்டு, அவர்கள் நினைப்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்று செயல்படுவது   கூட்டணி முறைக்கே விரோதமான போக்கு அல்லவா?
தி.மு.க. இது பற்றி சிந்தித்து, இனிமேலும் அதில் தொடருவது விரும்பத்தக்கதல்ல என்பதால் நமது அன்பான வேண்டுகோள்   உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரின் உள் உணர்வுகள், நிலைப்பாடு இதுவேதான்.
மத்திய அரசு இதில் தனது பிடிவாதத்தைத் தொடர்ந்தால் ஏற்கனவே ஏற்பட்ட அபவாதம் என்ற பழியிலிருந்து தி.மு.க. மீளுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்பது நமது வேண்டுகோள், தி.மு.க.விற்கும் அதன் தலைமைக்கும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: