“அட, ஜெயலலிதாவின் கைக்கூலிகளே..” வைகோ வாக்குவாதம்!
இன்று (16.03.2012) கலிங்கப்பட்டியில் வீடு தோறும் ஓட்டுக்கு ரூ.1000 என கொடுத்து வந்த அதிமுகவினர், ஒரு குடும்பத்திடம் “உங்க வீட்ல ஏழு ஓட்டு இருக்கு.. இந்தாங்க ஏழாயிரம்..” என்று பணத்தை நீட்டியிருக்கின்றனர்.
அந்தக் குடும்பமோ “பணம் எங்களுக்குத் தேவையில்லை..” என்று மறுத்து விட்டு, இந்தத் தகவலை அதே கிராமத்தில் வீட்டில் இருந்த வைகோ விடம் போய்ச் சொல்லியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, எப்படியாவது கலிங்கப்பட்டியில் மதிமுகவைக் காட்டிலும் அதிக ஓட்டுக்களை வாங்கி விட வேண்டும் என்று மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுக்கு ஏற்ப அங்கு பண மழை பொழிந்து கொண்டிருந்த அதிமுகவினர் 4 பேரை ஊர்க்காரர்கள் பணமும் கையுமாகப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
இந்த தகவலை மேலிடத்துக்குத் தெரிவித்து விட்டு, நேராக வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றது போலீஸ். “அதிமுகவினரை அடித்துக் காயப்படுத்தி போலீஸிடம் ஒப்படைத்தது உங்கள் வீட்டில் இருக்கின்ற 5 பேர் தான்.. அவர்களிடம் விசாரிக்க வேண்டும்..” என்று அங்கிருந்த வைகோ விடம் கண்டிப்பு காட்டியிருக்கிறார் ஏ.டி.எஸ்.பி. மகேஷ்.
அப்போது ஊர்க்காரர்களும் அங்கு திரண்டு விட, கொந்தளித்து விட்டார் வைகோ. “பிடிச்சுக் கொடுத்தவங்க என் வீட்டுல இல்லை,.. அதுக்காக விசாரணைக்குன்னு என் வீட்ல இருக்கிற அஞ்சு பேரைக் கூட்டிக்கிட்டுப் போயி அரெஸ்ட் பண்ண நினைக்கிறது நடக்காது.
நான் கேட்கிறேன்.. இப்பவும் ஊருக்குள்ள பணம் கொடுத்துக்கிட்டிருக்காங்களே ஆளும் கட்சிக்காரங்க.. அவங்களைப் பிடிக்கிறத விட்டுட்டு, பிடிச்சுக் கொடுத்தவங்களத் தேடி அலையறீங்களே.. உங்களின் கடமை உணர்வு என்னாயிற்று?
ஜெயலலிதா பிரச்சாரத்துகு வந்த போது அவர் பின்னால 1000 காருக்கு மேல வந்துச்சே.. அப்பத்தானே கோடி கோடியா தொகுதிக்குள்ள பணம் வந்துச்சு.. அந்தக் காரையெல்லாம் ஏன் செக் பண்ணல? அட.. ஜெயலலிதாவின் கைக்கூலிகளே..!” என்று ஆங்கிலத்தில் வைகோ பொரிந்து தள்ள.. எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பியிருக்கின்றனர் காக்கிகள்.
இதைத்தொடர்ந்து, மார்ச் 18ந் தேதி வாக்குப்பதிவு நடந்தால் தேர்தல் நியாய மானதாகவும், சுதந்திரமானதாகவும், நேர்மையான தாகவும் நடக்காது. ஜனநாயகத்துக்கு எதிரானதாக அமையும்.
இந்தச் சூழ்நிலையில் நியாயமான தேர்தல் நடத்த சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலை பிந்திய தேதிக்கு ஒத்திவைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையரை வேண்டிக் கொள்கிறேன் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் குரோசிக்கும், அதன் நகலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வேட்பாளர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் அனுப்பியுள்ளனர்.
சி.என்.இராமகிருஷ்ணன்
Thanks nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக