ஞாயிறு, 11 மார்ச், 2012

கூடங்குளம் தினமும் ரூ.5 கோடி "அவுட்!': ஆறு மாதங்களில் ரூ.900 கோடி வீண்

"கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், கடந்த ஆறு மாதங்களாக, தினமும் ஐந்து கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது,'' என, இந்திய அணுமின் கழக இயக்குனர் பரத்வாஜ் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், கடந்த ஆறு மாதங்களாக, கூடங்குளம் மின் நிலைய பணிகள் முடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் முதல் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம், மேலும் ஆறு மாதங்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனுமதி கிடைக்கலை: போராட்டம் இன்று முடியும்; நாளை முடியும் என, சமூக அக்கறை கொண்டவர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், நாளொரு பிரச்னை, பொழுதொரு காரணம் சொல்லி, தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைப்பது தாமதமாகிறது.
இதனால், அணுமின் நிலைய பணிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட 1,000 பேர், தினமும் எந்த பணியும் இன்றி முடங்கிக் கிடக்கின்றனர். வழக்கமான தங்களது பராமரிப்பு பணியை கூட மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்திய அணுமின் கழகம், பணிகளின்றி காத்திருக்கும், கூடங்குளம் நிலைய அலுவலர்கள் 1,000 பேருக்கும் சம்பளம் அளித்து, நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

வேலையின்றி சம்பளம்: இதுகுறித்து, இந்திய அணுமின் கழகம் தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் பரத்வாஜ் அளித்த பேட்டி வருமாறு: கூடங்குளம் மின் நிலையத்தின் முதல் யூனிட்டில், 99 சதவீத பணிகள் முடிந்து விட்டன. உற்பத்தி துவங்கும் நேரத்தில், போராட்டம் மூலம் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இதனால், அணுமின் கழக பணியாளர்களுக்கு, எந்த பணியுமின்றி சம்பளம் கொடுக்கும் வகையில் மட்டும், தினமும், ஐந்து கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மாநில அரசின் அனுமதி விரைவில் கிடைத்தால், முழு வீச்சில் பணிகளை துவங்கி, நான்கு மாத காலத்தில், மின்சார உற்பத்தியை துவங்கி விடுவோம். அதிர்ஷ்டமிருந்தால், இரண்டாவது அலகையும் விரைவில் இயக்கி, மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். இவ்வாறு பரத்வாஜ் கூறினார்.

நடவடிக்கை எடுக்குமா அரசு? இந்த வகையில், மாதம் 150 கோடி ரூபாய் வீதம், ஆறு மாதங்களுக்கு, 900 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிக்காக, ஒரு சிலரின் தூண்டுகோலில் நடப்பதாக சொல்லப்படும், கூடங்குளம் போராட்டத்தால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியாவில், இதுபோன்ற போராட்டங்களால், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சக்திகளை, தமிழக அரசு விரைவில் அடையாளம் கண்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளுமா என, நடுநிலையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: