""நானும் குழந்தைதான். எனக்கு ஒன்றரை வயதுகூட ஆகலை. நல்லா ஆரோக்கியமா இருந்த எனக்கு தடுப்பூசி போடுறதுக்குப் பதிலா விஷ ஊசியைப் போட்டிருக்காங்க. இனி என் உயிருக்கே ஆபத்துன்னு எல்லோரும் சொல்றாங்க. இந்தக் குழந்தைக்கு எந்த உயர் சிகிச்சை மருத்துவமனையில் உயிர்ப்பிச்சைக்கான ட்ரீட்மெண்ட் கொடுக்கப்போறாங்கன்னு கேட்டு சொல் லுங்க'' -அண்ணா நூற்றாண்டு நூலகம் என்கிற அறிவுக் குழந்தையின் அவலக்குரல்தான் இது. அந்த நூலகத்திற்கு ஆர்வத்தோடு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்த அவலக்குரல்.
சென்னை கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் "பிரம்மாண்ட அபலை' போல் நிற்கிறது அண்ணா நூற் றாண்டு நூலகம். அதனை டி.பி.ஐ வளாகத்தில், இனிமேல் கட்டப்படத் திட்டமிடப்பட்டிருக்கும் அறிவுசார் பூங்காவுக்கு மாற்றிவிட்டு, நூலகம் உள்ள கட்டிடத்தை குழந்தைகளுக்கான உயர்சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்போவதாக ஜெ.அரசு அறிவித்த சில நிமிடங்களில் நாம் அந்த 8 மாடி நூலக வாசலில் நின்றோம்.
அருகிலுள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அரசின் அறிவிப்பைப் பற்றி அறியாமல் வழக்கம்போல் நூலகத்திற்கு வந்தபடி இருந்தார்கள். தரைத்தளத்தில் இருக்கிறது, சொந்தப் புத்தகங்களைப் படிப்பதற்கானப் பகுதி. மாண வர்கள், இளைஞர்கள், படிப்பார்வம் மிக்கவர் கள் கையில் நல்லபுத்தகங்கள் இருந்தாலும் அதனைப் படிப்பதற்கேற்ற சூழல் மிகுந்த இடம் அமைவதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில்தான் அண்ணா நூலகத்தில் சொந்தப் புத்தகங்களைப் படிப்பதற்கான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அமைதியான சூழல். குளிர்சாதன வசதி. தரமான இருக்கைகள். புத்த கத்தை வைத்துப் படிக்க வசதியான மேசை. சந்தேகங்கள்-தேடல்கள் இவற்றிற்குத் தீர்வு காண கணினி வசதி என உருவாக்கப்பட்டுள்ள பகுதி இது. மாணவ-மாணவியர் பலரும் அமைதி யாக அங்கே படித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பகுதிக்குப் பக்கத்திலேயே பார்வைத் திறன் குறைந்தோருக்கான ப்ரெய்லி எழுத்துப் புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளது. பார்வைக்குறைபாடு உடையோர் சிரமப்படக்கூடாது என்பதற்காக தரைத்தளத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது இந்த நூலகம். ஐ.ஏ.எஸ். தேர்வு, குரூப்-1 தேர்வு, வங்கித் தேர்வு உள் ளிட்ட அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளுக்கும் தயார் படுத்திக்கொள்ளத் தேவையான புத்தகங்கள் கொண்ட தனிப் பகுதியும் இங்கு இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்துக்காரரான சுந்தரமூர்த்தி, ""நான் கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னையில் படிக்கிறேன். ஐ.ஏ.எஸ் ஆகணும்னு ஆசை. அதுக்குப் படிக்கிற துக்குத் தேவையான புத்தகங்களை வாங்க எனக்கு வசதியில்லை. அதனால இந்த லைப்ரரிக்கு வந்துடுவேன். பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் விலையுள்ள தரமான புத்தகமெல்லாம் இங்கே இருக்கு. படிச்சி, குறிப்பெடுத்து, எக்ஸாமுக்குத் தயாராக ரொம்ப வசதியா இருக்கு. இதை காலி பண்ணப்போறதா பேசிக்கிறாங்க. எங்க எதிர்காலத்தை காலி பண்ணப்போறதாத்தான் தோணுது''’என்றார் சோகமாக.
சாஃப்ட்வேர் துறையினர், ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள், அருகிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் (சி.எல்.ஆர்.ஐ) என பல தரப்பினரும் அண்ணா நூலகத்தின் புத்தக மலர்களிலிருந்து தேன் எடுக்கும் வாசக வண்டுகள். தமிழக அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தில் இல்லாத மருத்துவ ஆய்வு நூல் கள் பல அண்ணா நூலகத்தில் இருப்ப தால் எம்.டி, எம்.எஸ். போன்ற உயர் மருத் துவ படிப்பு மாணவர் களும் இங்கே வருவது வழக்கம். ஐ.நாவின் கிளை அமைப்பான யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் லைப்ரரி யுடன் இந்த நூலகம் இணைக்கப்பட்டிருப்பதால் எல்லாத் துறையினருக்கும் பயன் தருகிறது.
மொத்தமுள்ள 8 மாடிகளில் 7 மாடிகள் முழுக்க 15 லட்சம் புத்தகங்கள் குவிந்துள்ளன என்பதைக் குறிப்பிடும் நூலக ஊழியர் கள், ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரத்திலிருந்து 1,500 பேர் வருவார்கள். மெம்பர்ஷிப் கார்டு கொடுக்கும் வேலை கிடப்பிலே யே இருந்தது. அதையும் தொடங்கியிருந்தால் வருகை இன்னும் அதிகமாகியிருக்கும். அனைத்துவிதமான பத்திரிகைகள், தமிழ்-ஆங்கில நூல்கள், சிறுவர் புத்தகங்கள், வரலாறு, தொழில் நுட்பம், மருத்துவம், பிறமொழி புத்தகங்கள், ஆராய்ச்சி நூல் கள்னு 7 தளம் வரை புத்தகங்கள்தான். அதோடு 1500 பேர் உட் காரக்கூடிய கலையரங்கம், மேல்தளத்தில் திறந்தவெளி ஆடிட் டோரியம் இப்படி உலகத்தரமான எல்லா வசதிகளையும் கொண்ட ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம்ங்க இது. இதை ஏன் மாத்துறாங்கன்னு தெரியல என்றனர் தயங்கித் தயங்கி.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான பழைய புத்தகங்களைக் கொண்ட யாழ்ப்பாண நூலகத்தை சிங்கள வெறியர்கள் தீ வச்சி எரிச்சாங்க. நெருப்பேயில்லாம அண்ணா நூலகத்தை எரிக்கிறார் ஜெயலலிதா. இரண்டு செயல்பாடுகளுக்கும் வித்தியாசமில்லை என்கிறார்கள் படிப்பாளிகளும் படைப் பாளிகளும். அண்ணா நூற்றாண்டை யொட்டி 2008 ஆகஸ்ட் 16-ல் அன் றைய முதல்வர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 180 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 2010 செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் கலைஞரால் திறக்கப்பட்டது இந்த உலகத்தரமான நூலகம். அதனால்தான் தற்போது இந்த கதி.
""அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகம் வந்தபோது, ஜெ.வை சந் தித்ததை அ.தி.மு.ககாரங்க பெரு மையா பேசுறாங்க. அந்த ஹிலாரி பெருமையா பேசுனது இந்த நூலகத் தைத்தான். போன ஜூலை 20-ந் தேதி இங்கே நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஹிலாரி, நூலகத்தின் அமைப்பை ரொம்பவே பாராட்டினார். அமெரிக்காவில் ஹாவார்டு பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளான தரமான புத்தகங் கள் பல இங்கே இருப்பதை அறிந்து ரொம்ப ஆச்சரியப்பட்டார். இப்ப சென்னை மேயராகியிருக்கும் அ.தி. மு.க.வின் சைதை துரைசாமி நடத்துற மனிதநேய அறக்கட்டளையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் பயிற்சி பெறுகிற மாணவர்கள் பலபேர் இந்த நூலகத்துக்குத்தான் வந்து ரெஃபர் பண்றாங்க. இதைச் சுற்றி உயர்கல்வி நிறுவனங்கள் நிறைய இருப்பதால் இது அறிவுக்கான போதிமரமா இருக்குது'' என்றார் தொடர் வாசகராக இங்கே வரும் பெரியவர் பஞ்சாபகேசன்.
அண்ணா நூற்றாண்டு நூல கத்தை இடம்மாற்றுவதுங்கிற ஜெ. அரசின் அதிரடிப் போக்குக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஜெ. அரசு தனது முடிவினைக் கைவிட்டு, அண்ணா நூலகம் சிறப்பாக செயல்பட நட வடிக்கைகள் எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட் டம் நடத்துவோம் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழின் முன்னணி எழுத்தாளர்களான சா.கந்த சாமி, அசோகமித்ரன், பொன்னீலன், இந்திராபார்த்தசாரதி, பிரபஞ்சன், மேலாண்மை பொன்னுச்சாமி, நாஞ்சில் நாடன், அ.மார்க்ஸ், ஞாநி, வாசந்தி, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜெ. அரசின் முடிவைக் கைவிடக் கோரியிருக் கிறார்கள்.
நூலக இடமாற்றத்துக்கு உடனடி எதிர்ப்புக் குரல் கொடுத்த சுப.வீர பாண்டியன், ""இடமாற்றம் என்பதுகூட வெறும் சமாதானம்தான். கோட் டையிலிருந்து இடம்மாற்றப்பட்ட செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகத்தின் நிலைமை என்ன?'' என்று கேட்டிருக் கிறார். ""கோட்டைக்குள் மீண்டும் சட்ட மன்றத்தைக் கொண்டுவந்ததும், அங்கி ருந்த செம்மொழி ஆய்வு நூலகப் புத்த கங்களெல்லாம் மூட்டை மூட்டையாகக் கட்டப்பட்டு பாலாறு மாளிகையில் ஏதோ சரக்கு போல போட்டு வைக்கப் பட்டுள்ளன'' என்கிறார்கள் அரசு ஊழியர்கள். அண்ணா நூலகத்தின் 15 லட்சம் புத்தகங்களுக்கும் இதே நிலை மைதானா என்ற அச்சமும் உள்ளது.
சினிமா நடிகையாக ஜெ. இருந்த போதே தன்னுடைய தனிமைக்கேற்ற நட்பாக அவர் தேர்ந்தெடுத்தது புத்தகங்களைத்தான். ஷூட்டிங் இடைவேளையில் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கி, தற்போதும் தனக்கு விருப்பமான புத்தகங்களைப் படிக்கிறார். ஆனால், தமிழகத்தில் தரமான நூல் நிலையங்கள் இருக்கக்கூடாது என்ற ஆணவத்தோடு செயல்படு கிறார். அதாவது, ""படிப்பு என்பது குறிப்பிட்ட சமுதாயத் தினருக்கு மட்டுமே உரியது என்றும், மற்ற சமுதாயத்தினர் யாரும் படிக்கக்கூடாது என்றும் சொல்லும் வர்ணாசிரம மனுநீதியின் மறுவடிவமாகவே ஜெ.வின் செயல்பாடுகள் உள்ளன என்கிறார்கள் சமூக அறிஞர்கள்.
தஞ்சையில் உலகத்தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கிய எம்.ஜி.ஆர் அங்கு முதலில் கட்டியது பாராளுமன்ற கட்டிட வடிவிலான நூலகத்தைத்தான். எம்.ஜி.ஆர் தொடங்கிய அண்ணா பெயரிலான கட்சிக்குத் தலைமை தாங்கும் ஜெ, அண்ணா நூலகத்தைச் சிதைக்கும் முடிவை எடுத்திருக்கிறார். கொடுங்கோலன் ஹிட்லர் சக ஐரோப்பிய நாடுகளின் செல்வங் களை அழித்தபோதுகூட, கலைப் பொருட்களையும் நல்ல புத்தகங்களையும் அழிக்காதீர்கள் என்று பாதுகாக்கச் சொன்னானாம். ஹிட் லரைவிட கொடியவராக இருக்கும் ஜெ, புத்தகங்களையே குறிவைத்து அழிக்கிறார்.
""நூலகம் என்பது கல்விச் சாலையையும் விட உயர்ந்தது. விரும்பியதைக் கற்று அறிவை விருத்தி செய் கிற கலாசாலை. முந்தைய அரசு போட்ட கோட்டை அழிப்பது என் பது இன்றைய அரசின் பொறாமையைக் காட்டுகிற அவலமாத்தான் இருக்கும். சமச்சீர் கல்வியில் கண்ட தோல்வியைத்தான் நூலக விஷயத்திலும் இந்த அரசு சந்திக்கப் போகிறது'' என்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமி தார்மீக கோபத்துடன்.
வீட்டுக்கு ஒரு நூலகம் என்பது அண்ணாவின் விருப்பம். ஆனால் அந்த அண்ணாவின் பெயரில் நாட்டுக்கே பெருமை சேர்க்கும் நூலகக் குழந்தை, சிசுக்கொலை போல அழிக்கப்படவிருக்கிறது. ""அண்ணா சமாதி கடற்கரையிலிருந்து கோட்டூர்புரத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது. அண்ணாவின் எண்ணங்களுக்கு சமாதி கட்டுவது என்பது அவரை உயிருடன் புதைப்பதற்கு சமம். ஜனநாயகம் என்ற பெயரில் இங்கே நடப்பது சர்வாதிகார வெறியின் உச்சகட்டம். பல்நோக்கு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை இவற்றை விட இன்றைய அவசரத்தேவை ஆட்சியாளர்களுக்கான மனநல மருத்துவமனை'' என்பதே படிப்பாளிகள் படைப் பாளிகள் மாணவர்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படும் கோபக்கனல்.
-லெனின்
thanks nakkeran + habib,velachcheri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக