வெள்ளி, 4 நவம்பர், 2011

அஞ்சா நெஞ்சம் கொண்டவர் 'சில்க்'-வித்யா பாலன் புகழாரம்

சில்க் ஸ்மிதாவைப் பற்றி பலரும் தவறாகவே பார்த்து வருகின்றனர், சித்தரித்து வருகின்றனர். உண்மையில் பய உணர்வு சற்றும் இல்லாதவர் சில்க். தைரியமானவர், எதைச் செய்தாலும் உறுதியாக செய்யக் கூடியவர், துணிச்சல் மிக்கவர்.
குழந்தைத்தனமான மனது கொண்டவராக இருந்தாலும் தான் செய்வது சரி என்று அவருக்குத் தோன்றினால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் செய்யக் கூடியவர் என்று சில்க் வேடத்தில் தற்போது தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வரும் வித்யா பாலன் கூறியுள்ளார். இந்தியில் உருவாகி வரும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் கதையை தழுவி உருவாக்கப்படுகிறது. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இவரது கவர்ச்சிகரமான ஸ்டில்கள் படம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் சில்க் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் வித்யா பாலன். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நிஜ வாழ்க்கையில் அவரது காலத்து நடிகைகளை விட அதிக உயரத்தில் இருந்தவர் சில்க். அவரை ஆபாச கோலத்தில் பார்த்துப் பார்த்தே மக்கள் தவறான முறையில் சில்க் ஸ்மிதாவை சித்தரித்து விட்டனர். ஆனால் உண்மையில் சில்க் ஸ்மிதா குழந்தை மனம் கொண்டவர். அதேசமயம் மிகுந்த தைரியசாலி, துணிச்சல்மிக்கவர், எதற்கும் அஞ்சாதவர்.

தான் செய்வது சரி என்று நினைத்தால் அதை துணிச்சலாக செய்வார். யார் என்ன நினைத்தாலும், பேசினாலும் அது பற்றி அவர் கவலைப்பட மாட்டார். தான் செய்யும் செயலுக்காக அவர் வெட்கமோ, கூச்சமோ படமாட்டார். மிகுந்த வெளிப்படையானவர் சில்க் ஸ்மிதா.

தன்னைத் தேடி வந்த எந்த வாய்ப்பையும் விடாமல் பற்றிக் கொண்டு முன்னேறும் பக்குவம் உடையவராக இருந்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமையாகவும், திருப்திகரமாகவும் வாழ வேண்டும் என்று எண்ணியவர்.

சில்க் அரை குறை உடைகளுடன், ஆபாச கோலத்தில் நடித்ததை வைத்து அவரை மிகுந்த தைரியசாலி என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் அவரது துணிச்சலின் ஒரு பகுதிதான் அவர் அப்படி நடித்தது என்று நான் கருதுகிறேன். அவரது அடிப்படை பலமே இந்த துணிச்சல்தான்.

தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க்கின் கதை அல்ல. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் படமும் அல்ல. மாறாக ஒரு கவர்ச்சி நடன நடிகையின் வாழ்க்கைக் கதை. அந்தக் கால கட்டத்தில் சில்க்தான் முன்னணியாக இருந்தார். எனவே அவரது திரையுலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையின் நிழல்களை நாங்கள் முன்னோடியாக எடுத்துள்ளோம் என்றார் வித்யா பாலன்.

கருத்துகள் இல்லை: