ஆம். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஐந்தாவது இடத்திற்கும் அப்பால் தள்ளப்பட்டு விட்டது. 1970-1980-ம் ஆண்டுகளில் அந்தக் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. அதற்கு என்று பத்து சதவிகித வாக்கு வங்கி இருந்ததும் உண்மை. ஆனால் காலப் போக்கில் அதன் செல்வாக்கு தேய்பிறையாகி விட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி இரண்டு நகராட்சிகளை கைப்பற்றி யிருக்கிறது. ம.தி.மு.க. ஒன்றிலும், தே.மு.தி.க. இரண்டு நகராட்சிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அத்தகைய வெற்றி கூட கிடைக்கவில்லை. அந்தக் கட்சிகளுக்கும் பின்னே காங்கிரஸ் கட்சியை ஆறாவது இடத்தில் மக்கள் அமர்த்தி விட்டனர். ஒரு கூட்டணி வெற்றி பெறுவதற்குக் காங்கிரஸ் கட்சியின் உறவு தேவை என்று ஒரு காலத்தில் கருதினர். ஆனால் காங்கிரஸ் அங்கம் பெறும் கூட்டணிக்குத் தோல்வி உறுதி என் பதனை கடந்த சட்டமன்றத் தேர்தல் உணர்த் தியது. அதன் பலனை தி.மு.கழகம் சந்தித்தது.
காங்கிரஸ் உறவு வேண்டாம் என்று அந்தக் கழகத்தின் உயர்மட்டக் குழு முடிவு செய்தது.. ஆனால் அந்த முடிவினை அழகிரியும் தயாநிதிமாறனும் மாற்றினர். காகித ஓடங்கள் கரை சேர்க்குமா? இன்றைக்குக் காங்கிரஸ் கட்சியின் மெய்யான வலிமை என்ன என்பது வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
திருச்சி மாநகராட்சி மேயர் பதவி வேட்பாளராக சுஜாதாவைக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ஆனால் அவர் போட்டியிட மறுத்துவிட்டார். விருப்ப மனுவில் கையெழுத்தே போடவில்லையென்றும் தெரிவித்தார். கடைசி நேரத்தில் இன்னொரு வேட்பாளரைக் காங்கிரஸ் தேடிப் பிடித்தது. வார்டு தேர்தலில் போட்டியிடுவதற்கும் வேட்பாளர்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது என்று திருச்சி நகர காங்கிரஸ் தொண்டர்கள் கண்கலங்கினர்.
எல்லா மாநகராட்சி, நகராட்சிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு இதே சோதனை தான். வார்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டி யிட முன்வருகிறவர்களுக்கு ஆரம்பத்திலேயே அச்சாரம் பத்தாயிரம் என்று பல நகரங்களில் விதி வகுத்து விட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி யிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அதிரடி அரசியல்வாதிகள் ஆசைப்பட்டனர். அவர்களுக்கு ஊடகங்களும் பூச்சுற்றி விட்டன.
அவர்களுடைய ஆசையைக் கெடுப் பானேன் என்று தனித்துப் போட்டியிடப் போவதாக தி.மு.கழகம் அறிவித்தது. அகில இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியுடன் நல்லிணக்கம்தான். ஆனால் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று கழகத் தலைவர் கலைஞரும் தெளிவுபடுத்தினார்.
தனித்துப் போட்டி என்றதும் பெருங்காயம் இருந்த பாத்திரத்தில் கலகம் மூண்டது. இவர்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டுமானால் எம்.பி.யாக வேண்டுமானால் கூட்டணி தேடுவார்கள். கோபாலபுரத்தில் குடியேறுவார்கள். ஆனால் நம்மை நடுரோட்டில் நிறுத்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று வீரம் பேசுவார்கள் என்று வெடிகுண்டு விமர்சனங்கள் வெடித்தன.
நடக்கமாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் கேட்ட கதையாகத்தான் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தேடிப் பிடித்தது. திண்டுக் கல்லில் சிவசேனாக்காரர் ஒருவர் தந்தை பெரியார் சிலைக்குப் பொட்டு வைத்து மாலை போட்டு பூஜை நடத்தினார். இது இந்துத்துவாக்களின் வக்கிரத்திற்கு எடுத்துக்காட்டு. அந்த சிவசேனைக் காரர்தான் இன் றைக்கு அங்கே தலைவர் பதவிக் குக் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். எப்படியோ தமது அடையாளத்தைத் தேடிக் கொள்ள உள்ளாட்சித் தேர் தலை காங்கிரஸ் கட்சி பயன்படுத் திப் பார்த்தது.
குளிக்கப் போய் சேற் றைப் பூசிக் கொண்ட கதை யாகிவிட்டது.
1967-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரசியல் அதிகாரத்தை இழந்தது. ஆந்திராவில், கேரளாவில் இதுபோன்று தோல்வியைத் தழுவி யிருக்கிறது. அங்கெல்லாம் கூட மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியது. ஆனால் தமிழகத்தில் அந்தக் கட்சிக்கு அந்த வாய்ப்புக் கிட்டவேயில்லை. கேரளாவைப் போல கூட்டணி அரசு அமைக்கும் சந்தர்ப்பம் கூட அதற்கு எட்டவில்லை.
அதற்கு டெல்லி காங்கிரஸ் தலைமை ஒரு காரணம். தமிழகத்திலிருந்து தங்கள் கட்சி சார்பாக அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்பார்த்தது. அதே சமயத்தில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிபீடம் ஏறும் வகையில் அதன் வியூகம் அமையவே இல்லை.
எனவே நாடாளுமன்றத்திற்குத் தங்களுக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்கித் தரும் தி.மு.க.வுடனோ அ.தி.மு.க.வுடனோ அந்தக் கட்சி கூட்டணி வைத்துக்கொண்டது. முத்துக்களை எடுத்துக்கொண்டு சிப்பிகளை சத்தியமூர்த்தி பவனுக்கு அர்ப்பணித்துவிட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிக்கு இடையே நல்லிணக்கம் ஏற்பட்டது. மையத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப் பதைத்தான் தமிழக மக்கள் விரும்புவார்கள். எனவே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று வந்தது.
ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக் குள்ளேயே ஒற்றுமை இல்லை. அதனால் கோவை, தென்காசி ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஈழத்தமிழர் இயக்கத்திற்கு எதிரான நிலையெடுத்ததாலும், கொங்கு வேளாளர் ஒன்றுபட்டதாலும் ஈரோடு தொகுதியில் இளங்கோவன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கூட்டணியில் தி.மு.கழகம்தான் எப்போதும் பெரிய பங்குதாரர். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கழுத்தில் கத்தி வைத்துக் கேட்பதுபோல் தங்களுக்கு 63 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் நிர்பந்தப்படுத்தியது. அந்த உடன்பாட்டை தி.மு.கழகத் தொண்டர்கள் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் இளங்கோவனும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜும் தேர்தல் அறிவிப்பு வரை -உடன்பாடு ஏற்படும் வரை தி.மு. கழகத்தை வரம்புமீறி விமர்சித்து வந்தனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் அவர்கள் பழைய கச்சேரியையே ஆரம்பித்தனர். இப்படி இங்கே தப்புத்தாளங்கள் போடு வதை காங்கிரஸ் தலைமை கண்டு கொள்வதே இல்லை. அப சுரங்களை அவர்களின் கவனத்திற் குக் கொண்டு போனாலும் அவர்கள் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று டெல்லி சமாதானம் கூறும். அவ்வளவுதான்.
தமிழகத்தில் தனித்து நிற்க ஆசைப்பட்டீர்கள். நின்று பாருங்கள் என்று கடைசியாக சோனியா காந்தியும் கோபத்தோடு ஆசிர்வதித்ததாகச் செய்திகள் வந்தன.
அடுத்துவரும் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம் என்று தங்கபாலு தெரிவித்திருக் கிறார். கடலை கடப்பதற்கு முன்னர் கால்வாயைக் கடக்கும் முயற்சியாக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் பார்த்தனர்.
உள்ளாட்சித் தேர்தல்தான் காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம் என்று ஜி.கே.வாசன் நம்பிக்கையூட்டினார். அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்று தங்கபாலு தெரிவித்தார்.
ஆனால் ஒரு மாநகராட்சியைக் கைப்பற்றாவிட் டாலும் பத்து நகராட்சிகளையாவது காங்கிரஸ் கட்சி கைப்பற்றியிருக்கலாம். சட்டியில் இல்லை, எனவே அகப்பைக்கு அகப்படவில்லை. சென்னை மாநக ராட்சியில் வார்டிற்கு நூறு வாக்குகள் கூட காங்கிரஸ் வாங்கவில்லை. ஒருவேளை யுவராஜ் ஈரோட்டில் களம் கண்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். அந்த வாய்ப்பை அவர்கள் நழுவ விட்டுவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் மானம் காத்திருக்கலாம்.
தனித்துப் போட்டி என்ற ராகுல்காந்தியின் கோட்பாட்டை முதலில் பீகாரில் செயல்படுத்தினர். பலன்?
கட்சி காணாமல் போய்விட்டது. அடுத்து ஜார்கண்ட் மாநிலத்திலும் தனித்துப் போட்டி என்றனர். உள்ள பலத்தையும் இழந்தனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்றனர். பீகாரில் ராகுல்காந்தி தொடங்கி வைத்த தோல்விப் பயணத்தை இங்கே நிறைவு செய்துவிட்டனர்.
இப்போதாவது ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு என்று இங்கே வாக்கு வங்கி இல்லை. இன்னொரு கட்சியின் வாக்கு வங்கியை நம்பித்தான் அந்தக் கட்சி தேர்தல் களம் காண முடியும். இதனை அறிந்த பின்னரும் இனியும் காங்கிரஸ் கட்சியுடன்தான் உறவு என்று எந்தக் கட்சி விரும்பினாலும் அந்தக் கட்சி அரசியல் தற்கொலை செய்துகொள்ள ஆசைப்படுகிறது என்றுதான் அர்த்தம்.
thanks nakkeeran.+solai+sasivarnam-usilampatti
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக