செவ்வாய், 1 நவம்பர், 2011

பாமகவுக்கு இளைஞர்களை இழுத்து வந்த வேல்முருகன் அதிரடி நீக்கம்


Velmurugan
சென்னை: பாமக மாநில இணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவும், பாமகவுக்கு பெருமளவில் இளைஞர்களை சேர்க்க பாடுபட்டவருமான வேல்முருகன் திடீரென கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் படங்கள், கட்சிக் கொடிக் கம்பங்களை அடித்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தினர்.
பண்ருட்டி தொகுதியிலிருந்து 2 முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் வேல்முருகன். கடந்த தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாமகவிற்கு பெருமளவில் இளைஞர் படையைத் திரட்டி வந்து கட்சியைப் பலப்படுத்தியவர். நெய்வேலி அனல் மின் கழகத்தில் பாமக தொழிற்சங்கமான பாட்டாளி தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைக்க கடுமையாக பாடுபட்டு வெற்றி பெற்றவர்.இப்படிப்பட்டவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர்.

சென்னையில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்கத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் உள்கட்சிப் பிரச்சினை காரணமாக அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாமகவில் இளைஞர்களைச் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருபவர் டாக்டர் ராமதாஸ். அதை தெய்வ வாக்காக ஏற்று பெருமளவில் இளைஞர்களை கட்சிக்குக் கொண்டு வந்தவர் வேல்முருகன். படு சுறுசுறுப்பாகவும், துணிச்சலாகவும், தைரியமாகவும் செயல்படக் கூடியவர். படு வேகமாக கட்சிக்குள் வளர்ந்து வந்த இளம் தலைவர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போதும், கடந்த திமுக ஆட்சியின்போதும் பல சிக்கல்களை சவால்களை, வழக்குகளை சந்தித்தவர் வேல்முருகன். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ராமதாஸுக்கு விசுவாசமாகவும், கட்சிக்கு விசுவாசமாகவும் தீவிரமாக செயல்பட்டவர் வேல்முருகன்.

இதன் காரணமாக ராமதாஸின் மனதிலும் இடம் பெற்றார். இவரது விஸ்வரூப வளர்ச்சியைப் பார்த்து கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கே பொறாமை இருந்தது. கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தைகளின்போது திமுக அல்லது அதிமுக தலைமைக்கு குழுவினரை அனுப்பும் ராமதாஸ் மறக்காமல் வேல்முருகனையும் கூடவே அனுப்பி வைப்பார். அதேபோல அன்புமணியிடமும் நல்ல பெயரைப் பெற்றிருந்தார் வேல்முருகன்.

ஆனால் அவரை திடீரென நீக்கியது பாமக வட்டாரத்தை அதிரவைத்துள்ளது. வேல்முருகன் நீக்கத்தால் அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்து போராட்டங்களில் குதித்துள்ளனர். கடலூரில் பாமக கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்தனர். பல்வேறு ஊர்களிலிலும் ஆதரவாளர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோல கடலூர் பாமக அலுவலகத்தில் புகுந்த வேல்முருகன் ஆதரவாளர்கள் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் படங்களை உடைத்து தீவைத்தனர்.

கருத்துகள் இல்லை: