வியாழன், 3 நவம்பர், 2011

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. அந்த இதயம் இதையும் தாங்குமோ: கலைஞர்


தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் பண்பாட்டுச் சின்னங்களையெல்லாம் ஒவ்வொன்றாக அழித்து வருவதாக, திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். எதையும் தாங்கும் இதயம், இதையும் தாங்குமோ என்றும் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எம்.ஜி.ஆருடைய ஆட்சிக் காலத்தில் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அதன் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்பு அவர் மறைந்துவிட்டார். அதன் பின்னர் ஜானகி அம்மையார் ஆட்சியிலும், ஆளுநர் ஆட்சியிலும் தரமணியில் சிறிய வாடகை வீட்டில் அப்பல்கலைக்கழகம் அனாதையாக இயங்கி வந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உயர்ந்த மாட மாளிகைப் போன்ற கட்டிடங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய அளவுக்கு அமையும் என்று தாம் அறிவித்ததையும், அதற்கான வடிவமைப்பை தாமே உருவாக்கியதையும் கலைஞர் நினைவு கூர்ந்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயரிட்டதையும், தொடக்க காலத்தில் சென்னை மாநகர மேயர் பொறுப்பில் திமுக இருந்தபோது, காமராஜர் சிலை திறந்து வைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகிலம் புகழும் அறிவுப் பண்ணையாக ஆசியாவிலேயே முதன்மையானதாக 172 கோடி ரூபாய் செலவில், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அமைத்ததையும், திராவிட மக்களின் அறிவு வளர்கூடமாக அந்த நூலகம் விளங்குவது கண்டு, தாம் பேருவகை கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த நூலகத்தை காழ்புணர்வு காரணமாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதன் மூலம், எந்த அளவுக்கு குரோதம் குடிகொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம் என்றும் கலைஞர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு மூடு விழா நடத்தி வருவதை பட்டியலிட்டுள்ள கலைஞர், தமிழ் பண்பாட்டுச் சின்னங்களையெல்லாம் ஒவ்வொன்றாக ஜெயலலிதா அழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. அந்த இதயம் இதையும் தாங்குமோ என்றும் திமுக தலைவர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: