ரொரான்ரோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2500 – 3000 வரையான மிகக் குறைந்தளவு பேர்களே பங்கு பற்றியது நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ பகுதியினருக்கு விழுந்த பலத்த அடியாகும்.
டி.பி.எஸ் ஜெயராஜ்
ஒக்டோபர் 29ல் நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ சார்பான பகுதியினர் ரொரான்ரோவில் அரங்கேற்றிய பொங்கு தமிழ் நிகழ்வில் 3000க்கும் குறைவானவர்களே பங்கு பற்றியிருந்தனர். கனடியத் தரங்களைப் பொறுத்தவரை இந்தக் கூட்டம் பெரிது என்று கணிக்கப்பட்ட அதேவேளை முன்னர் நடைபெற்ற எல்.ரீ.ரீ.ஈ யினரின் நிகழ்வுகளில் இதே இடத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இம்முறை எண்ணிக்கையில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதே இடமான குயின்ஸ் பாக்கில் 2004ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொங்கு தமிழ் நிகழ்வில் 35,000 பேர்கள் வரை கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
பொங்கு தமிழ் போன்ற பொது நிகழ்ச்சிகள் தமிழீழ விடுதலைப் புலியினரின் அனுசரணையுடன் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. 2011 ஒக்டோபர் 29ல் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கு 2500 – 3000 வரையானவர்களே சமூகமளித்திருந்த போதிலும் “ரொரான்ரோ சண்” பத்திரிகை அங்கு கிட்டத்தட்ட 5000 பேர் வரை கலந்து கொண்டதாக தெரிவித்திருந்தது.
எல்.ரீ.ரீ.ஈ சார்பான பெரும்பாலான இணையத்தளங்கள் எண்ணிக்கையை குறிப்பிடாமல் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்கள் என்றும், அதேவேளை சில ஊடகங்கள் ரொரான்ரோ சண் பத்திரிகையின் பெருப்பிக்கப்பட்ட தொகையான 5000த்தை மேற்கொள் காட்டியும் குறிப்பிட்டிருந்தன.
பொங்கு தமிழ் என்பதன் கருத்தான தமிழர்களின் எழுச்சி என்பதனை தமிழர்களின் விடுதலைப் பேரணி என சில ஊடகங்கள் வருணித்திருந்தன, இருந்தாலும் தமிழ் ஊடகங்களின் மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் அது எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஒரு தோல்வியே.
இந்த நிகழ்ச்சி கனடிய தமிழர் தேசிய பேரவை(என்.சீ.சீ.ரி), மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (ரி.ஜி.ரி.ஈ) ஜனநாயக குழுவினராலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவை இரண்டுமே நோர்வேயை தளமாகக் கொண்ட நெடியவன் என அழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரின் ஒட்டு மொத்த தலைமைத்துவத்தின் கீழ் இயங்குபவை.
நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகள் மிகவும் குறைவான ஒரு சுயவிபரத்தை பின்பற்றி; சகல தமிழர் சமூகங்களினதும் மற்றும் இளையோர்களினதும் சார்பாக இதில் கலந்து கொள்ளும்படி கனடாவில் வாழும் தமிழர்களை அழைத்திருந்தது.
நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகள் மிகவும் குறைவான ஒரு சுயவிபரத்தை பின்பற்றி; சகல தமிழர் சமூகங்களினதும் மற்றும் இளையோர்களினதும் சார்பாக இதில் கலந்து கொள்ளும்படி கனடாவில் வாழும் தமிழர்களை அழைத்திருந்தது.
நெடியவன் விசுவாசிகளின் பொங்கு தமிழ் நிகழ்ச்சி நடத்தும் முயற்சியினை மற்றொரு எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகளின் பிரிவினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்தப் பிரிவினர், தற்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்து இயங்கிவரும் வினாயகம் என்று அழைக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈயின் சிரேட்ட புலனாய்வுத் தலைவர் சேகரப்பிள்ளை வினாயகமூர்த்திக்கு விசுவாசமானவர்கள்.
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் பகிரங்கமாக வெளிவந்ததின் பின்னரே பொங்கு தமிழ் நிகழ்ச்சி நடத்தப்படவேண்டும் என்று கூறித்தான் வினாயகம் விசுவாசிகள் நெடியவன் விசுவாசிகளை எதிர்த்தனர்.
கனடாவில் ஏற்பட்ட இந்த பொங்கு தமிழ் உராய்வு, வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ பிரிவுகளின் தலைவர்களான நெடியவன் மற்றும் வினாயகம் ஆகியோரிடையே தற்போது நடந்துவரும் அதிகாரப் போராட்டத்தின் ஒரு வெளிப்பாடுதான்.
வினாயகம் பகுதியினர் தமிழர்களை இந்த பொங்கு தமிழ் நிகழ்வினைப் புறக்கணிக்கோரி துண்டுப் பிரசுங்களை வினியோகித்தும் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டியும் வேண்டிக் கொண்டனர். நெடியவன் பகுதியினர் இதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவினர் கனடாவுக்கு வருகை தருவதையொட்டி அவர்கள் இந்நிகழ்வில் பேசுவதற்கு வசதியாக நெடியவன் பகுதி எல்.ரீ.ரீ.ஈயினர் இந்நிகழ்விற்கான திகதியாக ஒக்டோபர் 29யை நிச்சயித்திருந்தனர்.
ரி.என்.ஏ யின் சம்பந்தன், சேனாதிராஜா, மற்றும் சுமந்திரன் ஆகியோர் பேரணியில் பேசுவதைக் கேட்க கூட்டம் பெரியளவில் கூடும் என்று பொங்கு தமிழ் ஏற்பாட்டாளர்கள் கணக்குப் போட்டார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ யை உத்வேகப்படுத்தும் ஒரு கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துவிட்டதுடன் ரொரான்ரோவுக்கு அவர்கள் வருகை தரும் நேரத்தை அந்த நிகழ்ச்சியை சாமர்த்தியமாக தவிர்க்கும் வகையில் 29ந்திகதி நள்ளிரவாக மாற்றிக் கொண்டனர்.
எல்.ரீ.ரீ.ஈ சக்திகளின் அழுத்தங்கள் இருந்தபோதும் கூட்டமைப்பு பொங்கு தமிழ் நிகழ்வில் பங்கேற்பதிலிருந்து ஒதுங்கிக் கொண்டது. கூட்டமைப்பினரின் கவர்ச்சி இல்லாதபடியால் நிகழ்ச்சிக்கான வரவு குறைந்து விட்டது.
எல்.ரீ.ரீ.ஈ யின் இராணுவம் மே 2009ல் தோல்வியுற்றதிலிருந்து, கனடாவில் புலிகள் சார்பான நிகழ்வுகளுக்கு வருகை தரும் கூட்டத்தினரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
பெரியதோர் கூட்டத்தைக் கூட்டும் ஆவலான முயற்சியாக எல்.ரீ.ரீ.ஈ சக்திகள் உள்ளுர் தமிழ் ஊடகங்களை இயன்றவரை பயன்படுத்தின. இலவச போக்கு வரத்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், நிகழ்ச்சிக்கு வரவு தந்தவர்களின் எண்ணிக்கை 2500 – 3000 ஆக மட்டுமே இருந்ததால், நிகழ்ச்சி ஒரு புஸ் வாணம் போலாகி விட்டது.
“ரொரான்ரோவை ஆக்கிரமி” எனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அநேக தமிழர் அல்லாத எதிர்ப்பாளர்களும், பார்வையாளர்களாக இதில் கலந்து கொண்டதால் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.
கலந்து கொண்டவர்களில் பலர் எல்.ரீ.ரீ.ஈயின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் ஆடைகளை அணிந்திருந்தனர். பிரபாகரனின் படம் பதித்த பதாதைகள் மற்றும் தமிழ் ஈழக் கொடிகள் எனப்படும் புலிகளின் கொடிகளையும் காணக்கூடியதாக இருந்தது.
ரொரான்ரோவில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை மிக மோசமாக இருந்தது கனடியத் தமிழ் புலம் பெயாந்தவர்களின் இடையே எல்.ரீ.ரீ.ஈ யின் செல்வாக்கு சரிவடைந்துள்ளது என்பதற்கு ஒரு சாட்சியாக காணப்படுகிறது.
வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யினரிடத்து வினாயகம் பிரிவினரின் கை, படிப்படியாக நெடியவன் பிரிவினரை விட உயர்ந்து கொண்டே போகிறது என்பதையும் இந்தத் தோல்வி மேலும் வெளிப்படுத்துகிறது.
தமிழில்: எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக