செவ்வாய், 1 நவம்பர், 2011

புலிகளை யாரும் அழிக்கவில்லை; அவர்களாகவே அழிந்துபோனார்கள்!

தமிழ் தேசியவாதிகள் எனக் கூறிக் கொள்ளும் ஒரு குழு போய்யான ஒரு வரலாற்றைப் பதிவு செய்வதை தங்கள் தேசியக் கடமையாகக் கருதி செயற்படுகின்றனர்.
புலிகள் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்தார்கள் ஏகாதிபத்தியங்கள் சதி செய்துவிட்டன என்ற தொனியில் அறிவழகன் …. போன்றோர் எழுதுவதும் இந்த அபத்தங்களில் ஒன்று தான். விடுதலை இயக்கங்கள் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்திப்பது ஒன்றும் புதிதல்லவே. ஆனால் எனக்கு தெரிந்தவரை விடுதலை இயக்க வரலாற்றில் ஒட்டுமொத்த தலைமையையும் கொன்றழிக்கப்பட்டது என்றால் அது புலிகளாகத் தான் இருக்க வேண்டும். புலிகள் ஏன் அழிந்து போனார்கள் என்பதை தமிழ் தேசியவாதிகள் புவிசார் அரசியல், சமூக, பெருளாதார பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாக ஆய்வு செய்வதை திட்டமிட்டே தவிர்க்கின்றனர். இந்தப் போக்கு தமிழர்களின் எதிர்காலத்துக்கு செய்யும் பச்சைத் துரோகம்.
30 வருடம் நாம் கொடுத்த விலைகளையும் சமூகம் வழிநடத்தப்பட்டு வந்த பாதையையும் மீளாய்வு செய்வதை தமிழ்த் தேசியவாதிகள் விரும்பவில்லை. புலிகள் எல்லாவற்றையும் சரியாகச் செய்திருந்தால் ஏன் அழிந்து போனார்கள்?
மக்களுக்கு ஏன் இந்தப் பேரழிவு ஏற்பட்டது? என்று சிந்திப்பதையும் இவர்கள் தடுத்து நிறுத்துகின்றார்கள். பொய்யான வரலாற்றுப் பதிவு மக்களின் வெற்றிக்கு உதவப்போவதில்லை.
1972ம் ஆண்டு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நாம் மனம் திறந்து விவாதிக்க வேண்டும். அதனுடாகவே அடுத்த தலைமுறையிடம் இப்போராட்டமும் பதிவுகளும் கையளிக்கப்பட்டு வெற்றியை நோக்கி நகர முடியும். மாறாக பொய்யான பிம்பத்தையோ, பதிவுகளையோ செய்வது மாபெரும் துரோகமாகும். தென் இந்திய தொடக்கம் வடக்கு கிழக்கில் புத்தளம் தொடக்கம் அம்பாரை வரை, தென் இலங்கையில் பரவலாகவும் களனி கங்கை ஓரங்களிலும் எமது உறவுகளின் குருதியை உரமாக்கியவர்களை சரியாக ஆராய நமக்கு உரிமை உண்டு என நம்புகின்றேன். புலியை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தமிழர்களின் எதிரிகள் அல்லது அரசின் ஆதரவாளர்கள் என்ற வரைவிலக்கணத்தை கையில் எடுப்பவர்கள் மிகப்பெரிய பிற்போக்காளர்கள். அவர்களது கொள்கை மக்கள் நலனல்ல! அவர்களது கொள்கை புலி அவ்வளவு தான். மாற்றுக் கருத்துக்கு அறிவழகனிடமும் இடமில்லை என்பதை ஒரு இடத்தில் புலிப் பாணியிலேயே குறிப்பிடுகின்றார். புலிகள் செய்த எல்லாப் படுகொலைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மல்லிகைப் பூவால் ஒற்றிவிட்டு, அடுத்த வரியில் குறிப்பிடுகின்றார் கொல்லப்பட்டவர் யாவரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைக்கு தடையாக இருந்தவர்கள் தான் என்று கூறி படுகொலைகளை நியாயப்படுத்துவது பாசிசத்தின் உச்சம். வாழ்க உங்கள் மனிதநேயம்! ஐயா நீங்கள் படுகொலைகளை கோடம்பாக்கத்து தமிழ் சினிமாவில் பார்த்தவர்கள். நாங்கள் அந்த ரணத்திலேயே வாழ்க்கை நடத்தியவர்கள். நீங்களும் நாமும் ஒன்றாக முடியாது.
ராஜினி திரணகம (பேராசிரியர்) கேசவன், செல்வி, விமலேஸ்வரன், ஒப்ரோய் தேவன், ஜெகன், விசுவானந்ததேவன்,ரமணி, தர்மலிங்கம், சிறிசபாரத்தினம் உட்பட 116 ரெலோ தோழர்கள், பத்பநாபா குழு, மனோமாஸ்ரர் ….. இவர்கள் எல்லோரும் துரோகிகள் தானா? இவர்கள் எல்லோரும் துரோகிகள் என்றால் புலிகளையும் தமிழ் தேசிய வாதிகளையும் தவிர தமிழ் மக்கள் அனைவரும் துரோகிகள்தான்.
அமெரிக்காவை புலிகள் ராஜதந்திர ரீதியில் கையாண்டார்கள் மாறாக ஆதரிக்கவில்லை என்று அறிவழகன் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். புலிகள் எல்லாக் காலத்திலும் அன்னிய மூலதனத்துக்கு எதிராகவோ, உலகமயமாதலுக்கு எதிராகவோ செயற்பட்டதோ, கருத்துக் கூறியதோ இல்லை. குறைந்த பட்சம் எந்த அறிக்கையிலும் இது பற்றி குறிப்பிட்டதில்லை. புலிகள் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரியல்ல என்பதை பலதடவைகளில் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்களிற்கு பிரியமான குளிர்பானம் கொக்கோ கோலா என்பது தமிழர்கள் அறிந்த ரகசியமாகும். ஏகாதிபத்தியங்கள் எந்த ஒரு நாட்டையோ, போராட்ட அமைப்பையோ தங்கள் நலனுக்காக பயன்படுத்தும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். புலிகள் தங்களின் எதிரியல்ல என்பதை அமெரிக்கா நன்கு புரிந்து வைத்திருந்தது. அமெரிக்கா புலிகளுக்கு இரை போடவில்லை என்பது உண்மைதான்.
புலிகள் இரை கேட்டார்கள். ஆனால் அமெரிக்காவுக்கு தேவை ஏற்பட்டிருக்கவில்லை. புலிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் தேவை எதுவும் கனிந்திருக்கவில்லை. இந்தியச் சந்தை மிக இலகுவாக அமெரிக்காவுக்கு கிடைத்திருந்ததும், இதில் ஒரு காரணியாக நாம் கருதவேண்டும். இதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இந்தியாவுக்கு உதவின. இந்தியா சாதித்தது. மகிந்தா பலனடைந்தார். இறுதி யுத்தம் நடக்கும் போதும் புலிப் பிரமுகர்கள் ஏகாதிபத்தியங்கள் உதவும் என்றே நம்பியிருந்தனர். புலித் தலைமை அறிவித்தது அமெரிக்கா அல்லது பிரித்தானியா சென்னால் நாங்கள் துப்பாகிகளை கீழே வைப்போம் என்றனர்.
பிராத்தானியா வாழ் தமிழர்கள் வரலாறு காணாத அளவுக்கு அணிதிரண்டு பாராளுமன்றத்தை முற்றிகையிட்டு போராடினர். அதே வேளை எதுவித முன் தயாரிப்பும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டக் கூடிய அமைப்புகளும் ஐரோப்பாவில் உண்டு. அவர்கள் யாரும் இவர்களுக்கு துணையாக போராட முன் வரவில்லை என்பதை நாம் கவனத்தில் கொண்டால் அங்கே சில உண்மைகள் தெளிவாகும். சர்வதேசம் தமிழர் போராட்டத்தின் நியாயத் தன்மையை உணர்ந்திருந்த போதும் அதற்கு உதவ யாரும் முன்வராத அக புறவாயமான சூழலை புலிகள் ஏற்படுத்தி இருந்தமை மிகைப்படுத்தப்பட்டவை அல்ல என்பதே உண்மை. நடேசன், சூசை போன்றோர் தொடர்ந்து ஏகாதிபத்தியங்களின் உதவியைக்கோரினர். கே பி இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தே செயற்படுகின்றார் என்பதை வன்னிப்புலிகளும் அவர்களது உளவுத்துறையும் அறிந்திருக்கவில்லை.
புலிகளின் ஆட்சிக்காலத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது சுமையை ஏற்றி கசக்கிப் பிழிந்தவர்கள், கொழும்பில் இருந்து தமிழ் வியாபாரிகள் யாழ் கொண்டு செல்லும் பொருட்களுக்கு முகமாலையில் ஒரு வரி விதித்தார்கள். கிழக்கில் அரச ஊழியர்கள் அனைவரிடமும் வரி பெறப்பட்டது வியாபாரிகள் உட்பட எரிபொருள் ஒரு லீற்றர் முன்று ரூபாய் வரி அறவிடப்பட்டது. தமிழ் மக்கள் அரசுக்கும் வரி செலுத்தி புலிகளுக்கும் வரி செலுத்தி யுத்தத்தையும் தாங்கி நின்றனர். புலிகளிடம் புதிய உள்ளடக்கம் எதுவும் இருக்கவில்லை. ஒரு புதிய ஜனநாயகத்தை அறிமுகம் செய்யும் ஆர்வமும் இருந்ததில்லை.
கூர்மையான சமூக முரண்பாட்டை (உ-ம் இனமுரண்பாடு) பிரதான முரண்பாடாகக் கொண்டு போராடும் ஒரு சமூகம் குறிப்பிட்ட அந்த முரண்பாட்டை மாத்திரம் வெல்லதற்கு போராடுவதில்லை. அப்படியாயின் அது ஒரு விஞ்ஞான பூர்வ அணுகுமுறையாக இருக்க வாய்பில்லை. வெற்றி பெற்ற விடுதலைப் போராட்டம் அப்படி நடந்ததுமல்ல. மாறாக அந்த சமூகத்தில் உள்ள அனைத்து பிற்போக்குத் தனங்களையும் நீக்கிய ஒரு சமூக மாற்றத்துக்கான புதிய உள்ளடக்கமுள்ள புரட்சிகர ஜனநாயகத்தை சிரத்தையோடு நடைமுறைப்படுத்த முனையும். புலிகள் அப்படியான எதுவித சிந்தனையையும் கொண்டிருந்தவர்களல்ல. சிங்கள மக்களை சிங்கள அரசு சுரண்டிக் கொள்ளட்டும், தமிழ் மக்களைச் சுரண்டும் உரிமை தமக்குத் தேவை என்ற அடிப்படையிலேயே அவர்களது அணுகு முறைகள் அனைத்தும் இருந்தன. அவர்கள் அரசோடு நடத்திய எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் முறிவுக்கான காரணத்தை அவர்கள் எப்போதும் நேர்மையோடு தமிழ் மக்களுக்குச் சொன்னதில்லை.
பௌத்த சிங்களப் போரினவாத அரசும் அதன் படைகளும் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாகக் கொடுத்த இனவாத ஒடுக்கு முறையே புலிகள் முள்ளிவாய்கால் வரைக்கும் உயிர்வாழ முடிந்தமைக்கான காரணமாகும். குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழ் மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையின் ஒரு பகுதி புலிகளின் நலன்களோடு (கோரிக்கை) பின்னிப் பிணைந்திருந்தன. புலிகள் எப்போதும் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வந்துள்ளதை விசயஞானம் உள்ளவர்கள் அறிவார்கள். யாழ் குநாட்டை விட்டு வன்னிக்கு இடம் பெயர்ந்த போதும் மக்களை கேடயமாக தான் பயன்படுத்தினர் என்பதை உலகம் அறியும். இறுதி யுத்த நேரம் மரணத்தின் கொடுமையையும், யுத்தத்தின் அகோரத்தையும் தாங்க முடியாது ராணுவத்தின் பக்கம் வெளியேறி உயிர்ப் பாதுகாப்புத் தேட முனைந்த பொது மக்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்ததை செய்யமதிப் படங்கள் மூலம், அல்ஜசீரா தொலைக்காட்சி உட்பட அனைத்து சர்வதேச தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டதை கண் இருந்தவர்கள் எல்லோரும் அதைப் பார்த்தார்கள். ஆனால் அறிவழகன் அதைப் பார்க்க வாய்பில்லை. ஏனெனில் அது அவரது கண்ணுக்குத் தெரியாது.
இறுதியுத்தம் நடந்து கொண்டிந்த போது ஒரு குறுகிய வட்டத்தினுள் மக்களும் புலிகளும் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் பொது மக்களிடம் ஒரு பவுண் (8 கிராம்) தங்கம் 300 இலங்கை ரூபாவுக்கு புலிகள் கொள்வனவு செய்தார்கள் (அப்போது கொழும்பு சந்தை மதிப்பு 37000 இலங்கை ரூபா ஒரு பவுண்) என்பதை அறிவழகன் அறிவாரா? மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக புலிகள் செயற்பட்டார்கள் என்று கூறுவது மிகவும் மலிவான ஒரு கற்பனை. இதை எஞ்சியுள்ள புலிகள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் சாதிய முரண்பாட்டின் கூர்மையும் 1970 காலப்பகுதியில் அதற்கான போராட்டங்களும் நடந்த பகுதி யாழ் குடாநாடாகும். மாவட்டபுரத்தில் கள் இறக்கப் பனையில் ஏறிய ஒருவரை, அவர் பனையில் இருக்கும் போதே மரத்தை வெட்டி வீழ்த்திய வரலாறு படைத்த பிரதேசம். புலிகளின் அமைப்பில் பல்வேறுபட்ட சாதியினர் இருந்த போதும் அவர்கள் சாதிக்கு எதிராக எதுவும் செய்ய முற்பட்டதில்லை. ஏனெனில் புலிகள் சுரண்டலோடு கூடிய பிற்போக்கான இதே சமுதாய அமைப்பை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள். சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் மாத்திரமே உண்மையான சாதிய முரண்பாடுகளைக் களைய முடியும் என்பதை அன்ரன் பாலசிங்கம் புரிந்திருந்ததால், இது தமக்கு சம்மந்தமுள்ள விடையமல்ல என்பது அவருக்கு தெரியும். பெண்கள் பற்றி அவர்கள் பார்வையும் மிகவும் பிற்போக்கானதே. மனிதவளக் குறைவை ஈடுசெய்ய பெண்களைப் படையில் சேர்த்துக் கொண்டார்களே தவிர வேறு எந்த முற்போக்கு பாத்திரத்தையும் அவர்கள் பெண்களுக்கு கொடுத்ததில்லை. புலிகளின் படைகளில் முடிவெடுக்கும் உரிமைகள் அனைத்தும் ஆண்களிடமே இருந்தது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு கிழக்கு இருந்த போது இளைஞர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமை இருந்தது என்பது மிகவும் தவறான வாதமாகும். இளவயதினர் கூடும் பல்கலைக்கழகம், உயர்கல்வி நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வெளிப்படையான விவாதங்கள், மாற்றுக் கருத்துகள் எதுவும் துளிர் விடவிடாமல் இளங்கல்வியாளர்களை இருட்டில் இருத்தியே வந்தனர். தங்கள் கருத்தை மாத்திரம் ஏற்குமாறு நிர்ப்பந்தித்தனர். அதேகாலத்தில் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களின் தாய் தந்தையரை காடுகளிலே உள்ள அவர்களது முகாம்களுக்கு வரவழைத்து லட்சக்கணக்கான பணம் கப்பமாக மிரட்டிப் பெற்றார்கள். (இன்னுமோர் கட்டுரையில் அறிவழகன் இதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என வர்ணித்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்)
சமுதாயத்தில் எல்லாவகையான தொழிலையும் அங்கீகரித்தார்கள், அவர்களுக்கு கப்பம் செலுத்த உடன்பட்டால் மாத்திரமே. சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை கூட அனுமதிக்கப்பட்டது. நான் பிறந்த கிராமத்து மண்ணில் புலிகளது அனுசரனையைப் பெற்று மது விற்பனை செய்து பல ஏழைக் குடும்பங்களின் உலையில் மண்ணைப் போட்டவன் தான் இன்று எனது ஊரில் பெரிய பணக்காரன். முதலாளித்துவம் அனைத்து சமூக நிகழ்வுகளையும் வியாபாரமாக மாற்றியது மாத்திரமல்லாமல், அனைத்து சமூக அவலங்களையும் வியாபாரமாக மாற்றுகின்றது. புலிகள் தமிழ் மக்களின் அவலத்தை தங்கள் நிதி சேகரிப்புக்கு பயன் படுத்தியது என்றால் அது மிகையாகாது.
தமிழ் நாட்டில் சினிமாக் கலைஞர்கள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் போன்றவர்களே! கனடாவில் நடந்த தமிழ் நாட்டு இசைக் கலைஞர்களின் இசை நிகழ்சியை தொலைக் காட்சியில் பார்த்தேன் (புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னியும் கிழக்கு மாகாணமும் இருந்த காலம்) எஸ் பீ பாலசுப்பிரமணியம் இசை நிகழ்சியை ஆரம்பிக்கும் போது ரசிகர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லோரும் உங்கள் தாய் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் புனிதப் போருக்கு உதபவுபவர்கள் என்ற அடிப்படையில் உங்கள் முன் இந்த இசை நிகழ்ச்சியில் பாடுவதை பெருமையாக நினைக்கின்றேன்” என்றார். இதையே மீண்டும் ஐரோப்பாவிலும் கூறினார். சில வாரங்களின் பின்னர் கொழும்பில் அதே இசைக்குழு அதே கலைஞர்கள் அதே பாலசுப்பிரமணியம் என்ன பேசினார் தெரியுமா? இலங்கை வானோலியின் தமிழ் இசைப் பணியையும் அதற்கு இலங்கை அரசு அளித்துவரும் ஆக்கபூர்வமான உதவிக்கு நன்றி என்று அரசைப் புகழ்ந்தார்.
சீமான், அமீர், மன்சூர் அலிகான், பாரதிராஜா … என்று தங்கள் வர்த்தகத்தை ஐரோபிய மண்ணில் நிலை நிறுத்தியவர்கள் பலர் படித்த தமிழர்களும், பாமரத் தமிழர்களும் பாராதிராஜா தலைவரை துணிந்து போய் சந்தித்தவர் என்று பேசும் அளவுக்கு நிலமை போனது. பாரதிராஜா இந்திய உளவுத் துறைக்காகவே தான் பிரபாகரனை போய் சந்தித்தார் என்பதை மறுதலிக்க போதிய ஆதாரம் எதுவும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் நாட்டு மக்கள் எப்போதும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டவர்கள், அபிமானங்கொண்டவர்கள் தமக்குள்ள தொப்புள் கொடி உறவை தொடர்ந்து பேணுபவர்கள். இதை அரசியல் வாதிகள் நன்கு புரிந்து வைத்துள்ளதன் பயனே தமிழ் நாட்டில் அரசியல் அறுவடை செய்ய இலங்கைத் தமிழர் பிரச்சனையை இணைத்துக் கொள்கின்றனர்.
பெங்களுரில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை திறக்க முடியாதவர்கள், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு நீரை கொண்டுவர முடியாதவர்கள், தமிழகத்தின் எல்லையை விட்டுக் கொடுத்தவர்கள், தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாதவர்கள், இலங்கை தமிழர்கட்கு என்ன செய்ய முடியும். 1977ம் ஆண்டு முதல் இராயதந்திர அடிப்படையில், இவர்கள் தமிழர்களிற்கு சாதகமாக என்ன செய்துள்ளார்கள் என்பதை நாம் உணரவேண்டும். நமது பிரச்சனை அவர்களுக்கு நன்கு உதவியுள்ளது என்பதே உண்மை. இலங்கைத் தமிழர் உலகம் முழுவதும் பரந்து வாழ்வதால் நம்மை நுகர்வோராக அவர்கள் கருதுகிறார்கள். இதில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் மாத்திரமல்ல ம.க.இ.க வும் உள்ளடக்கம் என்பது எனது கணிப்பு.
கடைசியாக அறிவழகனுடைய கருத்துக்களுக்கு பதில் கூறி இக்கட்டுரையை முடிக்கலாம் என நான் நினைக்கின்றேன். தலைமைத்துவத்தின் தனிமனித ஒழுக்கம் அவர் பிரதிநித்துவப்படுத்திய சமூக பொருளாதார அரசியலை ஒருபோதும் நியாயப்படுத்தப் போதுமானவையல்ல. புலிகள் தான் மோசம் மற்றவர்கள் சிறந்தவர்கள் என்பது எனது வாதமல்ல. எல்லாக் குழுக்களும் மக்களின் உரிமையை ஏதோ ஒரு வகையில் மதிக்காதவர்களேயாவர். ஆனால் புலிகள் மற்றவர்களை தளத்தில் இருந்து அகற்றி விட்டு நீண்ட காலம் தாம் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தம்மை தாமே கூறியவர்கள் என்ற வகையிலும் பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோமணத்தையும் பறிகொடுத்த நிலைக்கு தமிழர்களை கொண்டு வந்தவர்கள் என்ற அடிப்படையிலும் இவர்கள் நமக்கு முக்கியமாகின்றார்கள்.
இதைவிட தீவிர வலதுசாரி பிற்போக்காளர்களை சிவப்புச் சாயம் பூசி வரலாறு படைக்க நாம் அனுமதிக்க முடியாது. எங்கேயோ இருந்து கொண்டு யதார்த்த வாழ்கையின் பிரதிபலன்களை அறியாது போட்டிருக்கும் ஆடையின் மடிப்புக் குலையாது எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு உண்மை புலப்படாது. நமக்கே நமது வாழ்கை எப்படி அமைய வேண்டும் என்று தீர்மானிக்கும் வல்லமை தேவை மற்றவர்களுடைய வியாபாரத்துக்கு நமது மக்களுடைய வாழ்கையை பலியிட முடியாது.
திறந்த விவாதம் தேவை நமது விடுதலையின் பாதை மிக நீண்ட தூரத்தை கொண்டது நமக்கு ஓய்வில்லை விடிவெள்ளி காணும்வரை நமது பயணம் தொடர வேண்டும். சமாதானம் நமக்கு மாத்திரமல்ல எல்லோருக்கும் அவசியம் அது சம உரிமையோடு கூடிய சமாதானம் மாறாக அடிமைத்தனத்தோடு கூடியதல்ல.
இலக்கியா
www.ndpfront.com

கருத்துகள் இல்லை: