வியாழன், 3 நவம்பர், 2011

தி.நகர் வர்த்தகர்கள் கட்சி கதவுகளை ‘வெறும் கையால்’ தட்டியிருப்பார்களா?

Viruvirupu
சென்னை, இந்தியா: கடந்த 3 நாட்களாக தி.நகரில் மூடிக்கிடக்கும் 25 வணிக வளாகங்கள், தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். சென்னையில் கட்சிகள் ஏதாவது பெரியளவில் கடையடைப்பு நடத்தும் தினங்களைத் தவிர, மற்றைய தினமெல்லாம் திறந்திருக்கும் கடைகள் இவை. சென்னையின் ரீடெயில்-பிசினெஸ்ஸின் டர்ன்-ஓவர் அதிகமான வர்த்தகங்களும் இவைதான்.
தி.நகரில் உள்ள இந்த 25 வணிக வளாகங்களும் கடந்த திங்கட்கிழமை சீல் வைக்கப்பட்டதில் எந்தவொரு அரசியல் பின்னணியும் இருப்பதாகத் தெரியவில்லை. இது முற்று முழுதாக சட்ட விவகாரம்.
இந்த வணிக வளாகங்களை நடாத்தும் ஆட்களுக்கு சகல அரசியல் கட்சிகளின் சகல மட்டங்களிலும் செல்வாக்கு உண்டு. அனைத்துக் கட்சிகளுக்கும் பெரியளவில் தேர்தல் நிதி போவதும் இங்கிருந்துதான். இதனால் தமது வர்த்தகங்களில் யாரும் கைவைக்க முடியாது என்ற நினைப்பு இவர்களுக்கு இருந்தது.
கடந்த திங்கட்கிழமை அதுதான் அடிபட்டுப் போனது.
கடைகள் சீல் வைக்கப்பட்டவுடன், மத்திய கட்சி மேலிடத்திலிருந்து, மாநில ஆட்சி மேலிடம்வரை சகல கதவுகளும் தட்டப்பட்டு விட்டன. ‘வெறும் கையால்’ தட்டியிருக்க மாட்டார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
ஆனால் பலன்தான் இல்லை.

காரணம், சமீபகால நிகழ்வுகளின்பின் கோர்ட் விவகாரங்களில் தலையிட எந்தத் தலைமையும் தயாராக இல்லை. சகல தலைமைகளுக்கும் கோர்ட்களில் சொந்த வில்லங்கங்கள் உள்ளன. அதிலிருந்து வெளியே வரவே போராட வேண்டியுள்ள நிலையில், எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும் கோர்ட் விவகாரங்களில் தலையிட யாரும் தயாராக இல்லை.
இந்த 25 வணிக வளாகங்களின் சீல்வைப்பு விவகாரம், சென்னை ஹை கோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பில் நடக்கின்றது.
தமிழகத்தில் சமீப காலத்தில் முதல் தடவையாக ‘சர்வ வல்லமை பொருந்திய’ வர்த்தகர் குழு ஒன்று, நீதிமன்றத்துக்கு சாமான்யன் ஒருவன் செல்லும் வாயில் வழியாக மனுவுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: