செவ்வாய், 1 நவம்பர், 2011

அழகிரி சத்யமூர்த்திபவன் செல்ல, 4 செட் வேட்டி-சட்டை ஆர்டர்! (கிழியுமுங்க)

Viruvirupuசென்னை, இந்தியா: தமிழகத்தில் காமெடி-கிளப் போல மாறிவிட்ட காங்கிரஸ் கட்சியை இனியும் அப்படியே விட்டுவிடக் கூடாது என்ற முடிவு, டில்லி காங்கிரஸ் தலைமையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தமிழக காங்கிரஸில் நடைபெறும் உட்கட்சி வீரவிளையாட்டுகளுக்கு முடிவு கட்ட புதிய தலைவர் ஒருவரை அறிவிக்கும் யோசனை (காலம் கடந்து) ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்காகவே கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரியை, உடனடியாக டில்லி வருமாறு தொலைபேசி அழைப்பு வந்து மதியம் 1.40 மணி ஜெட்-ஏர்வேஸ் விமானத்தில் டில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் என்று சத்யமூர்த்திபவன் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. தமிழக காங்கிரஸின் தலைமைப் பதவி இவருக்குத்தான் என்று முடிவு செய்தே இவரை டில்லிக்கு அழைத்ததாகவும் கூறுகிறார்கள்.

கே.எஸ். அழகிரி, கடலூர் மாவட்டத்துக்காரர் (கீரிப்பாளையம்). சிதம்பரம் தொகுதியில் இரு தடவைகள் ஜெயித்தவர் (ஆஃப்கோர்ஸ் கூட்டணி பலத்திலும்தான்) பெரிதாக கோஷ்டி ஏதும் வைத்துக் கொள்ளாதவர் (தலைவராகும் வரையா?) இவர் கோஷ்டி வைத்துக் கொள்ளாவிட்டாலும், யாராவது ஒருவருடைய கோஷ்டியில் இருந்தே ஆக வேண்டுமல்லவா (காங்கிரஸ் பாரம்பரியம்)
அந்த வகையில் இவர், அமைச்சர் ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர்!
இவரை உடனடியான டில்லிக்கு வரச்சொன்ன கதை சத்யமூர்த்திபவனில் அடிபட்டால், என்னாகும்? ப.சிதம்பரத்தின் குரூப் ஆள் ஒருவர் தலைவராவதை மற்றைய குரூப் ஆட்கள் ஏற்றுக் கொள்வார்களா? ‘நான் கடவுள்’ என்று கூறிக்கொண்டிருந்த தங்கபாலு சும்மா இருப்பாரா? தமிழக காங்கிரஸின் ‘7ம் அறிவு’ என்று கூறப்படும் இளங்கோவன் விட்டுவிடுவாரா?
கே.எஸ். அழகிரி மதியம் 1.40 மணி ஜெட்-ஏர்வேஸ் 9W831 விமானத்தில் டில்லி சென்றால், இவர்கள் மாலை 5.55 மணி கிங்ஃபிஷர் IT233 விமானத்தைப் பிடித்திருக்க (போட்டுக் கொடுக்கத்தான்) மாட்டார்களா?

கருத்துகள் இல்லை: