செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இத்தாலி கடலில் படகில் பிணமாகக் கிடந்த 25 அகதிகள்: விசாரணைக்கு உத்தரவு

லாம்பெடுசா: லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த படகின் என்ஜின் அறையில் 25 பேர் இறந்து கிடந்ததை இத்தாலிய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

லிபியா உள்ளிட்ட வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் கலவரம் நடந்து வருவதால் அங்குள்ள மக்கள் அன்டை நாடுகளுக்கு தப்பித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று லாம்பெடுசா தீவில் 15 மீட்டர் நீளமுள்ள ஒரு படகு வந்தது. அந்த சிறிய படகில் 36 பெண்கள், 21 குழந்தைகள் உள்பட 271 ஆப்பிரிக்க அகதிகள் இருந்தனர். படகின் என்ஜின் அறையில் 25 பேர் இறந்து கிடந்ததை இத்தாலி்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். அந்த உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. அவற்றை லாம்பெடுசா தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இது குறித்து படகில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது,

லிபியாவில் கலவரம் நடப்பதால் அங்கிருந்து இந்த படகில் தப்பித்து வந்தோம். நாங்கள் கடந்த 3 நாட்களாக கடலில் பயணித்தோம். சிறிய படகில் நாங்கள் அனைவரும் பயணித்தோம். அதில் பலர் என்ஜின் அறையில் இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியவில்லை. எனவே, அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்றனர்.

25 பேர் இறந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பிரேதங்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன்பு இறந்திருக்க வேண்டும் என்றார்.

படகில் வந்திறங்கிய அகதிகள் 25 பேர் இறந்திருப்பது பற்றி வாய்த் திறக்கவில்லை. கடற்படையினர் படகை சோதனையிட்டபோது தான் என்ஜின் அறையில் 25 சடலங்கள் கிடப்பதைப் பார்த்தனர்.

கடந்த சில வாரங்களாக லிபியாவில் இருந்து அதிக அளவில் அகதிகள் லாம்பெடுசா வருகின்றனர். பெரும்பாலும் சிறிய மீன்பிடி படகுகளில் தப்பி வருகின்றனர். அதில் சில படகுகள் விபத்துக்குள்ளாகுகிறது.

கருத்துகள் இல்லை: