சனி, 6 ஆகஸ்ட், 2011

மாணவிகளை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் கைது

கோவை கவுண்டம்பாளையத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் கடந்த 28ந் தேதி நடைபெற்றது.
விழாவிற்கு வருபவர்களை வரவேற்க 2ம் ஆண்டு மற்றும் 3 ஆண்டு மாணவிகள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவிகள் நேர்த்தியாக சேலை அணிந்து, மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் செய்து கொண்டு பங்கேற்றனர்.
அப்போது விழாவில் கலந்து கொண்ட அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், மாணவிகளை பார்த்து "அழகாக இருக்கீங்க, பயமாக இருக்கிறது'' என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஆபாச வார்த்தைகளால் பேசி கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுபற்றி கல்லூரி முதல்வர் தேவியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து புகாரில் சிக்கிய மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வர் விசாரித்தார். அப்போது அவர்கள் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். அதை தொடர்ந்து மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சார்பில் துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் ராக்கிங் தடுப்பு சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் தங்கமுத்து, விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் கோவை 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்திய மூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அவர்கள் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: