சனி, 6 ஆகஸ்ட், 2011

புத்தக விநியோகம் மும்முரம உச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் தனியார் பள்ளிகள்

சென்னை: சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தாலும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதைக் காலில் போட்டு மிதிக்கும் விதமாக பெரும்பாலான தனியார் பள்ளிகள் பழைய மெட்ரிக் முறை புத்தகங்களை பெரும் விலைக்கு மாணவர்கள் தலையில் கட்டி வருகின்றன.

சென்னை மாநகரில் கிட்டத்தட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலுமே மெட்ரிகுலேஷன் பாடப்புத்தகங்கள் தரப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

புரசைவாக்கம் பகுதியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரிக்க முற்படும் பெற்றோர்களை இந்தப் பகுதி தனியார் பள்ளிகள் செக்யூரிட்டிகளை வைத்து விரட்டியடிக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.

சென்னை வேளாங்கண்ணி குழும பள்ளிகளில் மெட்ரிக் பாடப் புத்தகங்களை வழங்கியுள்ள நிர்வாகம், இடைத் தேர்வையும் அறிவித்துவிட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, நாங்கள் புத்தகங்களை வழங்கவே இல்லை என சாதிக்க ஆரம்பித்துவிட்டார் கேகே நகரில் உள்ள இந்த பள்ளியின் நிர்வாகி. ஆனால் இந்தப் பள்ளிக் குழந்தைகள் அனைவரிடமும் மெட்ரிக் பாடப் புத்தகங்கள் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

இதேபோல மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுமே மெட்ரிக் பாடப் புத்தகங்களை ஆயிரக்கணக்கான ரூபாயை பிடுங்கிக் கொண்டு மாணவர் தலையில் கட்டியுள்ளன (சமச்சீர் கல்வி புத்தகம் ரூ 300-க்குள்தான்). மடிப்பாக்கத்தின் பிரபல பள்ளியான பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மெட்ரிகுலேஷன் வழி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளியின் நங்கநல்லூர் உள்ளிட்ட கிளைகளிலும் இதே நிலைதான்.

இந்தப் பகுதியில் உள்ள சாய், கிங்க்ஸ், ஹோலி பேமிலி போன்ற அனைத்துப் பள்ளிகளிலும் இதே போல புத்தகங்களை தன்னிச்சையாக வழங்கி பாடங்களை நடத்தி வருகின்றனர்.

புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இதே நிலைதான். தாம்பரம் பகுதியில் எந்த தனியார் பள்ளியும் சமச்சீர் கல்வி புத்தகங்களுக்காக காத்திருக்கவில்லை. தங்கள் விருப்பப்படி தனியார் பதிப்பாளர்களிடம் வாங்கிக் குவித்துள்ளனர்.

சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடையாது என்று நிர்வாகம் கூறிவிட்டதாக தங்கள் பெற்றோரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் நேரடியாகப் போய் விசாரித்த போது, இனி சமச்சீர் கல்வி கிடையாது. அடுத்த ஆண்டும் வராது. நீங்கள் வேண்டுமானால் அரசுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என முகத்திலடித்தது போல பதில் கூறி அனுப்பி வருவதாக தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்களில்தான் இந்த நிலை என்றில்லை. கல்வியை கார்ப்பொரேட் வியாபாரமாக மாற்றிவிட்ட ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, ஊத்தங்கரை, சேலம், கோவை, கரூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரிய தனியார் பள்ளிகளும் எந்த அச்சமுமின்றி மெட்ரிகுலேஷன் பாடத் திட்டப் புத்தகங்களை வழங்கிவிட்டன.

தனியார் பள்ளிகள் விஷயத்தில் எதையும் கண்டுகொள்வதில்லை என அரசு முடிவெடுத்திருப்பதாகவே பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், தனியார் பள்ளிகள் குறித்த பெற்றோரின் புகார்களை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதே இல்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு இது தொடர்பாக அனுப்பப்படும் புகார்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

குறிப்பாக கட்டண விவகாரத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பவை மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பள்ளிகளே. புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடையாக சில லட்சங்களையும், கல்விக் கட்டணம் என பெயருக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் வாங்கி ஏமாற்றி வருகின்றன. இதுகுறித்த புகார்கள் எதையும் அரசுத் தரப்பு கண்டு கொள்ளவே இல்லை.

இதனால் தனியார் பள்ளி நிர்வாகங்களை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாத நிலையில் பெற்றோர் தவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: