புதன், 17 ஆகஸ்ட், 2011

15 பெண்களை கற்பழிப்பு: தொண்டு நிறுவன ஊழியர் மீது பெண் புகார்

வேலூர்: கல்லூரி மாணவிகள் உள்பட 15 பெண்களை கற்பழித்து படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என மிரட்டுவதாக தொண்டு நிறுவன அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகி மீது ஒரு பெண் புகார் தெரிவித்துள்ளார்.

வேலூர் அணைக்கட்டு பகுதி அருகே உள்ள ஊனை வாணியம்பாடியை சேர்ந்த செண்பகவள்ளி (30) என்ற பெண் இன்று டி.ஐ.ஜியை சந்தித்து புகார் கொடுக்க வந்தார்.
டிஐஜி அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், நான் பி.காம் படித்துள்ளேன். எங்கள் ஊரில் சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளேன். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு தொண்டு நிறுவனத்தின் வேலூர் கிளை நிர்வாகி என்னை சந்தித்து அவருடைய தொண்டு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், பின்னர் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார்.

இதையடுத்து அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஒருநாள் வேலை விஷயமாக என்று கூறி சென்னைக்கு காரில் அழைத்துச் சென்று அண்ணாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்தார். அப்போது குடிப்பதற்காக குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்ததும் நான் சுய நினைவை இழந்தேன்.

சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது நான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்து கதறி அழுதேன். இதையடுத்து என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்தார்.

இந் நிலையில் தொண்டு நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு என்னுடைய தோழிகளையும் அழைத்து வரச் சொன்னார். இதையடுத்து 2 கல்லூரி மாணவிகள் உள்பட 15 பெண்களை தொண்டு நிறுவன அலுவலருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

அந்தப் பெண்களை அந்த தொண்டு நிறுவன அலுவலரும், அவரது நண்பரான ஒரு பள்ளி நிர்வாகியும் சேர்ந்து அந்த பலமுறை பாலியல் பலத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அதை கேமராவில் பதிவு செய்து வைத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாகவும் மிரட்டி வருகின்றனர்.

இவர்களது செயல்களை அறிந்த நான் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுவிட்டேன். என்னையும் அப்பாவிப் பெண்களையும் பலிகடா ஆக்கிய அவர்களை தண்டிக்க வேண்டும்.

இதற்காக கடந்த 2ம் தேதியே டி.ஐ.ஜி.யிடம் புகார் கொடுக்க வர இருந்தேன். ஆனால், இதை அறிந்த அந்த நிறுவன அலுவலர் 4 பேரை அனுப்பி என்னை மிரட்டினார். முகத்தில் ஆசிட் வீசி, கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர். இதனால் அன்று என்னால் புகார் தர முடியவில்லை.

இனியும் பொறுக்கக் கூடாது என்று இன்று புகார் கொடுக்க வந்துள்ளேன் என்றார் செண்பகவள்ளி
கல்லூரி மாணவியை கடத்திய இன்ஸ்பெக்டருக்கு 4வது முறையும் ஜாமீன் மறுப்பு:

கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரும், அவரது காதலனும் ராமநாதபுரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த தீண்டாமை பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், தன்னை டிஎஸ்பி என்று கூறிக் கொண்டு, தனியாக ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அந்தப் பெண் நீண்ட நேரமாக திரும்பி வராததால் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து திருச்சி எல்லையில் உள்ள அனைத்து செக்போஸ்ட் மற்றும் காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கண்ணன், தனது காரில் மாணவியை புதுக்கோட்டைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை இறக்கி விட்டுள்ளார்.
இந்தக் கடத்தல் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கண்ணன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு இன்ஸ்பெக்டர் கண்ணன் மூன்று முறை மனு செய்தும் அதை திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 4வது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் கண்ணன். ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி மாலா, அதைத் தள்ளுபடி செய்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: