வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தங்கம்: பவுன் 20 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஆகஸ்ட் 18: தங்கம் ஒரு பவுனுக்கு இன்று ரூ. 20 ஆயிரத்தை தாண்டி, பவுனுக்கு ரூ, 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்து ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.18 ஆயிரத்தை தொட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வாக கருதப்பட்டது. அதில் இருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

கடந்த 9ம் தேதி தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.19 ஆயிரத்தை தாண்டியது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துவருவதற்குக் காரணம் சர்வதேச பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியாகும். பங்குகளில் முதலீடு செய்து வந்தவர்கள் தற்போதைய பங்குவர்த்தக வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு விரைவில் குறையக் கூடிய வாய்ப்பு இல்லை என்று முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஏனெனில் பங்கு மார்க்கெட் வீழச்சிக்கு அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைந்து வருவது முக்கிய காரணமாகும்.
அமெரிக்க கடன் பத்திர தரவரிசைப் பட்டியல், AAA என்ற முதல் இடத்தில் இருந்து AA+ என்ற இரண்டாம் இடத்துக்கு சரிந்து விட்டதாக கடந்த வார இறுதியில், ஸ்டாண்டர்டு அண்ட் புவர் என்ற சர்வதேச பொருளாதார ஆலோசனை அமைப்பு தெரிவித்தது.
இதனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் ரூ. 20 ஆயிரத்தை தாண்டி, பவுனுக்கு ரூ, 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியுள்ளது. இதனால் தங்கம் விலை கடுமையாக விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: