வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஜெயலலிதாவை வரவழைக்க எங்களுக்குத் தெரியும்!

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன!

சொத்து குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை சாட்சிகளின் விசாரணைகள் அனைத்துமே முடிந்து விட்டன. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதம், நீதிபதி மல்லிகார்ஜூனையா உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுப்​படி சசிகலா, இளவரசி இருவரும் கடந்த ஜுலை மாதம் 27-ம் தேதி கோர்ட்டில் ஆஜரானார்கள். உடல் நிலை​யைக் காரணம் காட்டி, சுதா​கரன் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் வழக்கறி​ஞரான பி.குமார், ஜெயலலிதா ஆஜராகாமல் இருப்பதற்கான வாதங்களை எடுத்து வைக்க.. அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட்-12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஏக எதிர்பார்ப்பு​களுக்கி​டை​யில், கடந்த 12-ம் தேதி தனி நீதிமன்றம் கூடியது. நீதிபதி மல்லிகார்ஜூனையா, ''ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்​பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி, வக்கீல்பி.குமார் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருக்​கிறார். அந்த மனுக்​களைத் தள்ளுபடி செய்கிறேன்.'' என்று கையோடு கொண்டு​வந்திருந்த குறிப்பை வாசிக்க... உடனே எழுந்த ஜெயல​லிதாவின் வழக்கறிஞர் குமார், '' செப்டம்பர் 14-ம் தேதி வரை தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. அதற்குள் ஜெயலலிதாவை கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடக் கூடாது.'' என அடுத்த மனுவை தாக்கல் செய்ததும் கடுப்பாகிவிட்டார் நீதிபதி. ''ஜெயலலிதாவை எப்போது இங்கே வரவழைக்க வேண்டும் என கோர்ட்டுக்குத் தெரியும்.'' என்று சொல்லி அந்த மனுவையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.
இந்த விவகாரங்களைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோரின் வக்கீல்கள், இன்னொரு மனுவைத் தாக்கல் செய்​தனர். அதில், ''சொத்து குவிப்பு வழக்கை விசா​ரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவிடம் மீண்டும் மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்.'' என கோரினர். இந்த மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

விசாரணை முடிந்து வெளியில் வந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவை பத்திரிகை​யாளர்கள் சூழ்ந்துகொண்டு கருத்து கேட்க, ''ஒவ்வொரு முறை விசாரணையின் போதும் மனு மீது மனு போட்டு வழக்கை இழுத்தடிச்சிட்டே இருக்காங்க. இது எங்கே போய் முடியப்போகுதோ போங்க!'' என்று சலித்துக்கொண்டு போனார்.

கருத்துகள் இல்லை: