செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

வீரபாண்டி ஆறுமுகம் மீது பொய்யான புகார் கொடுத்த பூசாரி மீது நடவடிக்கை- வக்கீல்

இடைப்பாடி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது பொய்யான நில அபகரிப்புப் புகார் கொடுத்த கோவில் பூசாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீரபாண்டி ஆறுமுகத்தின் வக்கீல் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் காவல் கண்காணிப்பாளரிடம் நிலஅபகரிப்பு புகார் அளித்தார். இதன் பேரில் சம்பந்தப்பட்ட பூசாரி மணியிடம் சங்ககிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார்.

இடைப்பாடி கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயனாரப்பன் கோவில் உள்ளது. சுமார் 2000 குடும்பத்தினருக்கு சொந்தமான இந்த குல தெய்வம் கோவிலில் உள்ள நான்கு பூசாரிகளில் அதேபகுதியை சேர்ந்த மணியும் ஒருவராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களிடம் வசூல் செய்து கோவிலுக்காக வாங்கிய விவசாய நிலத்தை மணி தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார் என்றும் இதை விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இடைப்பாடி போலீசாரிடம் ஐயனாரப்பன் குல தெய்வப்பங்காளிகள் அளித்த புகாரின் பேரில் அப்போதைய சங்ககிரி துணை காவல் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணைக்கு பின் 8.12.2009 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில்தான் மேற்படி நிலத்தை வீரபாண்டி ஆறுமுகம் அபகரிக்க முயன்றதாக கோவில் பூசாரி மணி கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கூறிய வீரபாண்டி ஆறுமுகத்தின் வக்கீல் பரமேஸ்வரன், வீரபாண்டி ஆறுமுகம் மீது கோவில் பூசாரி பொய் புகார் கொடுத்து உள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: