வியாழன், 18 ஆகஸ்ட், 2011

நடிகர் RK 40 இளைஞர்களை மோசடி செய்தார் வேலைவாய்பு தருவதாக




சென்னை : நடிகர் ஆர்கே மீது போலீஸ் கமிஷனரிடம் 40 இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். அரும்பாக்கம் என்எஸ்கே நகரை சேர்ந்தவர் குணசேகரன் உள்பட 40 இளைஞர்கள் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மே மாதம் 29ம் தேதி கார்ப்பரேட் கம்பெனியில் வேலை ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தோம். தி.நகர் கோபாலகிருஷ்ணன் தெருவில் இயங்கி வரும் அந்த கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கு சென்றோம். அப்போது அங்கு இந்த கம்பெனியின் இயக்குனரான திரைப்பட நடிகர் ஆர்.கே. என்ற ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதன் மேலாளர் விஜயகுமார் ஆகியோர் எங்களை இன்டர்வியூ செய்தனர்.

கம்ப்யூட்டர் தொடர்பான வேலை தருவதாக கூறினர். மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் தருவதாக தெரிவித்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் அதில் வேலைக்கு சேர்ந்தோம். ஆனால் சேர்ந்த சில வாரங்கள் எங்களுக்கு எந்த வேலையும் அவர்கள் கொடுக்க வில்லை. பின்னர் ஈசிஆர் ரோட்டில் உள்ள பெரிய நிலத்தை காட்டி இங்குள்ள பிளாட்டை நீங்க விற்று தர வேண்டும். அப்போதுதான் சம்பளம் தருவோம். மேலும் எந்தளவுக்கு விற்று தருகிறீர்களோ அந்தளவுக்குதான் அலவென்ஸ் தருவோம் என்று அந்த கம்பெனி நிர்வாகத்தினர் கூறினர்.

கம்ப்யூட்டர் வேலை என்று கூறி எங்களை நியமித்து விட்டு இப்போது ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக மாற்றுகிறீர்களா. இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டோம். ஆனால் கம்பெனி மேலாளர் விஜயகுமார் எந்த பதிலும் கூறிவில்லை. இந்நிலையில் 2 மாதங்கள் தொடர்ந்து வேலை பார்த்தோம். சம்பளம் தரவில்லை. அது பற்றி கேட்டதற்கு எங்களை தரக்குறைவாக பேசி விஜயகுமார் அனுப்பி விட்டார்.
நடிகர் ஆர்கே செல்வாக்கு மிக்கவர் என்பதால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அந்த கம்பெனிதான் பொறுப்பு. எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அந்த 2 மாத சம்பளம் மற்றும் அலெவன்சை மட்டுமாவது போலீசார் பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர் உரிய விசாரணை நடத்தும்படி தி.நகர் உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
‘இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’
சம்பளம் தரவில்லை என்று 40 இளைஞர்கள் புகார் கொடுத்தது குறித்து நடிகர் ஆர்கே கூறுகையில், “தி.நகரில் உள்ள கம்பெனிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விஜயகுமார் என்பவர் என்னிடம் வந்து, “உங்கள் இடத்தை பிளாட் போட்டு விற்று தருகிறேன். அதற்காக 40 இளைஞர்கள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்கள் மார்க்கெட்டிங் செய்து விற்று தருவார்கள்’’ என்று தெரிவித்தார். நானும் அதை நம்பினேன். ஆனால் இந்தளவுக்கு பிரச்னை வரும் என்று எனக்கு தெரியாது. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’’ என்றார்.

கருத்துகள் இல்லை: