திங்கள், 15 ஆகஸ்ட், 2011

கிறீஸ் பூசிக்கொண்டு திரியும் அவசியம் இராணுவத்தினருக்கு இல்லை: மாகாண தளபதி

'கிறீஸ் மனிதன் என்று யாருமே இல்லை. கிறீஸை பூசிக்கொண்டு திரிய வேண்டிய எந்த அவசியமும் இராணுவத்தினருக்கு இல்லை. இதற்கு இராணுவத்தினருக்கு நேரமும் இல்லை. இராணுவத்தினர் மீது சேறு பூச முற்பட வேண்டாம்' என இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா கூறினார்.
சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு குழப்பங்கள் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், கிறீஸ் மனிதன் என்பதெல்லாம் வங்கிக் கொள்ளையர்களும் கொள்ளையர்களும்,மரம் கடத்துவோரும் கிளப்பிவிட்டுள்ள புரளி எனவும் தெரிவித்தார்.
கிறீஸ் மனிதன் சர்ச்சை தொடர்பாக ஆராயும் உயர் மட்ட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.
இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜே குணவர்தன, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கட்டளைத்தளபதி பிரிகேடியர் மஹிந்த முதலிகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமையநாயகம், மட்டக்களப்பு மாவட்ட 234 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி சுகத்த திலகரட்ன உட்பட இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், சமய பிரமுகர்கள், பள்ளிவாசல்கள், இந்து ஆலயங்கள் கிறிஸ்தவ தேவாலயங்களின் நிர்வாகிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இன்று இடம்பெற்றுவரும் சம்பவங்களை படையினருக்கு சேறு பூசும் சம்பவங்களாகவே நாங்கள் பார்க்கின்றோம். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களையும், கொள்ளைகளில் ஈடுபட்டுவருபவர்களையும் மரங்களை கடத்தி விற்றவர்களையும் படையினர், பொலிஸார் பிடித்துவருவதால் அதனால் ஆத்திரமுற்றவர்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கான முழுத்தகுதியும் பொலிஸாருக்கு உண்டு.
சட்டத்தை மீறி தமிழீழ விடுதலைப் புலிகள் மின் கம்பத்தில் வைத்து மனிதர்களை கொலை செய்தது போல் நாங்கள் செய்ய முடியாது. ஒருவர் தவறு இழைத்தால் சட்டத்தின் முன் அவரை நிறுத்தி நீதி மன்றம் வழங்கும் தண்டனை ஒழுங்குமுறையை பின் பற்ற வேண்டியது அவசியமாகும்.
ஒரு மனிதனை பிடித்துக்கட்டி அவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்குமில்லை. சட்டத்தை யாரும் கையிலெடுத்து வீணான குழப்பத்தை ஏற்படுத்த முனைவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும். கிறீஸ் மனிதன் எனும் விவகாரம் நுவரேலியா, ஹப்புத்தள மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பேசப்படுகின்றது. இது மனோ நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வாழைச்சேனையில் கிறீஸ் மனிதன் எனும் பிரச்சினை ஏற்பட்டது.
இதன் உண்மை நிலைமையை இங்கு நான் கூற வேண்டும். ஏறாவூரை சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் பெண்ணொருவருடன் தொடர்பினை வைத்திருந்தார். அந்தப்பெண்ணுக்கு இன்னுமொரு தொடர்பும் இருந்தது. இந்நிலையில் அப்பெண்ணை அவர் அடைய முற்பட்ட போது இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர் பிடிக்கப்பட்டு மிக கடுமையாக தாக்கப்பட்டு அலவாங்கினாலும் தாக்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் மீட்டெடுத்த போதுதான் பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி பொலிஸாரை தாக்கியுள்ளனர். இதை பொலிஸார் செய்தது குற்றமா? என நான் கேட்கின்றேன்.
இரண்டாவது சம்பவம் பொலனறுவை மாவட்டத்திலுள்ள கட்டுவன் புல் கிராமத்தில் நடந்தது. முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர். அங்கு சிங்கள மீனவர் ஒருவர் வீதியினால் செல்லும் போது அவர் கிறீஸ் மனிதன் என பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
மலையகத்தில் காபட் விற்பனை செய்யும் வறியவர்கள் இருவரை பிடித்து தாக்கி அந்த அப்பாவிகளை வெட்டி கொலை செய்தார்கள். பொத்துவில் பிரதேசத்தில் பெண்ணொருவர் கம்பி வேலியை கடக்க முற்பட்ட போது அவரின் சேலை கம்பியில் சிக்கியுள்ளது. அதற்கு அந்தப்பெண் 'கிறீஸ் பூதம் வந்து விட்டது' என கூக்குரலிட்டு ஓடியுள்ளார்.
கம்பி வேலியும் கிறீஸ் பூதமாக மாறியுள்ளது. இது தான் உண்மை நிலை இதை நீங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று தெளிவு படுத்த வேண்டும். தற்போது நாட்டில் யானைகள் கணக்கிடப்படுகின்றன. யானைகளை கணக்கிடுவதற்காக சென்ற உத்தியோகத்தர்களை கிறீஸ் பூதம் வருகின்றது எனக் கூறி அவர்களை அடித்து தாக்கிய சம்பவத்தின் பின்னணியே பொத்தவில் சம்பவமாகும்.
அதனை தடுக்கச்சென்ற பொலிஸாருக்கு அடித்தார்கள்.வாகனங்களுக்கு நெருப்பு வைக்கப்பார்த்தார்கள்.அதன்பிறகே நாங்கள் படையினரை அனுப்பினோம்.நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் அவர்கள் கிறீஸ் மனிதர்கள் அல்ல வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள்.
கிறீஸ் மனிதன் என்பது வெறும் அப்பட்டமான பொய்யாகும். கிறீஸ் மனிதன் என யாராவது நினைத்தால் அது அவரின் உள நலத்தோடு தொடர்புபட்ட கோளாறாகும். கிறீஸ் மனிதன் என்று யாராவது இருக்கின்றார்களா? என்று நான் உங்களிடம் கேட்கின்றேன்.
அவ்வாறு யாருமே இல்லை. கிறீஸை பூசிக்கொண்டு திரிய வேண்டிய எந்த அவசியமும் இராணுவத்தினருக்கு இல்லை. இதற்கு இராணுவத்தினருக்கு நேரமும் இல்லை. இராணுவத்தினர் மீது சேறு பூச முற்பட வேண்டாம். 20 வருட காலம் போர் முனையில் நின்றவன் என்ற வகையில் பயங்கரவாதம் தாண்டவமாடிய போது முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கு படை வீரர்கள் காட்டிய ஆர்வத்தையும் அக்கறையையும் மறந்து படை வீரர்கள் மீது கற்களை வீசி குழப்பத்தை ஏற்படுத்தவதனால் எனக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
சமாதானம் கிடைத்த பின்னர் ஒரு நீண்ட அபிவிருத்தியில் செல்கின்ற ஒரு மாகாணம் இந்த கிழக்கு மாகாணமாகும். இந்த நாட்டில் பயங்கரவாதம் தோற்றகடிக்கப்பட்ட பின்னர் எமது யுத்த தாங்கிகளையும் கவச வாகனங்களையும் மூடிவைத்துள்ளோம். இயந்திரத் துப்பாக்கிகளை அறைகளில் பூட்டிவைத்துள்ளோம். எமது வீதித்தடைகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தியுள்ளோம். வீதியில் காபட் போட்டுள்ளோம்.
யுத்தத்தில் பாவித்த பீரங்கிகள், மற்றும் யுத்த தாங்கிகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இயந்திர துப்பாக்கிகள் அறைகளில் அடுக்கி வைக்கப்ட்டுள்ளன. சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு இலகுவான போக்கு வரத்துக்கள் இடம்பெறுகின்றன. தற்போது சுற்றி வளைப்புக்கள், வீதிச்சோதனை சாவடிகள், வீடுகளில் தேடுதல்கள் போன்ற எதுவுமில்லை. இவைகளை மீண்டும் கொண்டு வரவேண்டுமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை 10 நிமிடங்களில் கொண்டு வரமுடியும். கடந்த கால நிகழ்வுகளை சற்று சிந்தனை செய்து பாருங்கள். முன்னர் புனானையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு இரண்டு மணித்தியாலம் எடுக்கும். ஆனால் தற்போது வெலிக்கந்தையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு 40 நிமிடமே எடுகின்றது. எனவே தற்போது உங்களுக்கு அந்த காலத்துக்கு செல்ல விருப்பமா?
இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளேன்.
கிழக்கு மாகாணத்திலே ஏதாவது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதித்தடைகளை ஏற்படுத்துவேன். மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு செல்வதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுக்கும். உங்கள் வாழ்நாளில் அதிக காலத்தை ரோட்டில் கழிக்கவேண்டிவரும்.
சுற்றிவளைப்பு, சோதனை நடவடிக்கைகள், வீதித்தடைகள் ஏற்படுவது உங்களுக்கு விருப்பமா? வீட்டுக்குவந்து படையினர் தேடுதல்களை மேற்கொள்வது உங்களுக்கு விருப்பமா? அது விருப்பமானால் ரோட்டில் போட்டு டயர்களை எரியுங்கள் பரவாயில்லை. இவற்றுக்கெல்லாம் சரியான ஊசிமருந்து எங்களிடம் உள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில முடிவுகளை இன்று தொடக்கம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த வகையில் இரானுவத்திரை இரவு வேளைகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளேன். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டம் மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதேவேளை இக்கூட்டத்தில் கிழக்கில் ஏற்பட்டுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பில் கிராமங்கள் தோறும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை தணிக்க விழிப்புக்குழுக்களை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது தோன்றியுள்ள நிலைமையினை கட்டுப்படுத்த இரவுவேளைகளில் படையினரை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்றும் அவர்களுடன் விழிப்புக்குழுக்களை சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
விழிப்புக்குழுக்களை அமைப்பது தொடர்பில் அந்ததந்த பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் மற்றும் படை பொறுப்பதிகாரிகள்,பொது அமைப்புக்கள், மதப்பெரியார்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்த பணிப்புகள் வழங்கப்பட்டன.
- தமிழ்மிரர்

கருத்துகள் இல்லை: