ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

கப்பலை கானல் நீரில் இறக்கிய பாவிகள்


அஹிம்சை வழியிலான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை தமிழ் இளைஞர் கைகளில் ஆயுதம் ஏந்த வைத்து ஆயுதப் போராட்டமாக மாற்றி யமைத்து அவர்களைப் பயங்கரவாதிகளாக்கி கூண்டோடு கைலாயம் அனுப்பியதில் தமிழ் அரசியல் வாதிகளுக்கு நிகராக தமிழ் ஊடகத்துறையினருக்கும் பெரும் பங்குள்ளது.
தமது அரசியல் இருப்பிற்காகத் தமிழ் இளைஞர்களை தமிழ் அரசியல்வாதிகள் எந்தளவிற்கு உசுப்பேற்றி உயிரையும் மதிக்காது போராட்டத்திற்குள் தள்ளிவிட்டார்களோ அந்தளவிற்குத் தமிழ் ஊடகங்களும் தமிழ் இளைஞர்களுக்கு உணர்வுகளைத் தூண்டித் தமது இலாபத்தை நோக்காகக் கொண்டு செயற்பட்டதை, செயற்பட்டு வருவதை எவரும் மறுக்கமாட்டார்கள்.
இதனை அவர்கள் தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுப்ப தாகக் கருதினால் சிங்கள ஊடகங்களும், சிங்கள அரசியல் வாதிகளும் நடந்து கொள்வதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அவர்கள் இனவாதமாகச் செயற்படுகிறார்கள் என நாம் கருதினால் தாம் செய்வதும் இனவாதமே என்பதை தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்காக 1956 கலவரம், 1983 கறுப்பு ஜுலை, காத்தான்குடிப் படுகொலை, அம்பாறை வீரமுனைப் படுகொலை, செஞ்சோலை கொலை, நவாலி தேவாலய படுகொலை அழிஞ்சிப்பொத்தானை என்பவற்றை நாம் தமிழ் ஊடகங்களில் கண்டிக்காது இருக்க முடியாது. அதேபோன்று கெக்கிராவ படுகொலை, அரந்தலாவ பிக்குகள் கொலை, ஹொரவப் பொத்தானை கொலைகளை சிங்கள ஊடகங்கள் கண்டிக்கவே செய்யும்.
இப்போது கொலைக் கலாசாரம் எல்லாமே முடிவிற்கு வந்துள்ளது. இனிமேலும் பழைய வற்றைக் கிளறுவதில் எவ்விதமான பலனும் கிடையாது. அது மேலும் பகைமை உணர்வையே வளர்க்கும். அதனை எம்முடன் விட்டுவிட்டு எமது எதிர்கால சமுதாயத்திற்கு நல்லவற்றை எடுத்துக் கூறுபவர்களாக நடந்து கொள்ளவேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகத்துறையினரும் இனிமேலாவது இன ஒற்றுமையை ஏற்படுத்தி புரையோடிப் போயுள்ள இனப்பிரச் சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தமது இருப்பிற்காகவும், தமது வளர்ச்சிக்காகவும் இவ்விரு தரப்பினரும் செயற்படக் கூடாது.
தமிழ் மக்கள் இதுவரை பட்ட உயிரிழப்புக்கள், சொத்து இழப்புக்கள், துன்பங்கள், மன உளைச்சல்கள் போதும். இனியுமொரு துயர வாழ்வை எதிர்கொண்டு அதைத் தாங்கும் சக்தி அம்மக்களுக்கு இல்லை. இதனை உணர்ந்து வாழும் இந்தச் சொற்ப காலத்தில் விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்துடன் இன்பமாக வாழ வேண்டும்.
எனவே இனிமேலாவது தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகத்துறையினரும் தமிழ் மக்கள் நலன் கருதி பொறுப் புணர்வுடன் தங்களது கடமைகளை மேற்கொள்வார்கள் என நம்புகின்றோம்.

கருத்துகள் இல்லை: