சனி, 20 ஆகஸ்ட், 2011

Paschim Banga மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பஸ்சிம் பங்கா என மாற்றப்படுகிறது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இனி மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் பங்கா என அழைக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வரும்.
மேற்கு வங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் West Bengal என வருவதால் அகர வரிசைப்படி கடைசி இடத்தில் இருப்பதாகவும், இதனால் அனைத்து விஷயங்களிலும் கடைசியாகவே மேற்கு வங்கத்தை அழைக்கிறார்கள் என்றும் புகார்கள் கிளம்பின. நமது மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் அங்கு கோரிக்கைகள் கிளம்பின.
இதுகுறித்து இடதுசாரி கூட்டணி ஆட்சி இருந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரினமூல் அரசு இதுகுறித்த கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்தது.
இதையடுத்து மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் சூரிய காந்த மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழு அமைக்கப்பட்டு புதிய பெயர்களைப் பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

அக்குழுவும் பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து கடைசியாக பங்களா, பஸ்சிம் பங்கா, பங்க பிரதேஷ், பங்கபூமி ஆகிய நான்கு பெயர்களை இறுதிப்படுத்தி அரசிடம் கொடுத்தது.
இந்தப் பெயர்கள் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. அதிலிருந்து இறுதியாக பஸ்சிம் பங்கா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தின் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றவுடன் அமலுக்கு வரும்.
சமீபத்தில்தான் ஒரிசா மாநிலத்தின் பெயர் ஒடிஷா என மாற்றப்பட்டது நினைவிருக்கலாம். இதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது. அதேபோல சென்னை, பெங்களூர் உள்ளிட்ட சில நகரங்களின் பெயர்களும் கூட மாற்றம் கண்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பஸ்சிம் பங்கா என மாறுகிறது.
பஸ்சிம் என்பது வங்க மொழியில் மேற்கு என்று பொருள். அதாவது இதுவரை ஆங்கிலத்தில் அழைத்து வந்த பெயரை தற்போது வங்க மொழியில் மாற்றியுள்ளனர். எனவே இதுவரை டபிள்யூ என்று ஆரம்பித்த இம்மாநிலத்தின் ஆங்கிலப் பெயர், இனி பி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்.

கருத்துகள் இல்லை: