செவ்வாய், 28 ஜூன், 2011

எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு புது சாமியார் கிளம்புவார். ஒரு மடத்தை அமைப்பார். அவருக்கு சீடர்கள்

பஞ்சாபில் - முக்கியமாக ஜலந்தரில் - மக்கள் தெருவுக்கு வந்து போராடுவதைப் பார்த்திருப்பீர்கள். தெருவில் போகும் வண்டிகளை அடித்து உடைத்து, டயர்களைக் கொளுத்தி, ரயில்களைக் கொளுத்தி, ஒரே நாசம்.

மதப் பொறுக்கித்தனம் உலகமயமாவதின் விளைவு இது. ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் ஒரு குறிப்பிட்ட சீக்கிய இனப்பிரிவின் குருத்வாராவில் பிரசங்கம் நடந்துகொண்டிருக்கும்போது ஆயுதம் தாங்கிய சிலர் உள்ளே நுழைந்து தாக்கி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். விளைவாக இரு குருமார்களில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் நிலை கவலைக்கிடம்.

இந்தத் தகவலை முதலில் செய்தியில் கேட்டதும், ஏதோ ஆஸ்திரிய நியோ-நாஸிகள்தான் இந்தியர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனரோ என்று நினைத்தேன். ஆனால் அடிதடி, சகோதரர்களுக்கு இடையே என்று பின்னர் தெரிந்தது. கொன்றவனும் சீக்கியனே, கொல்லப்பட்டவனும் சீக்கியனே.

நாம் இங்கே தெரிந்துகொள்ளவேண்டியது - சீக்கியர்கள் என்பது ஒரு தனிப்பெரும் குழு அல்ல என்பதை. அவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன. சாதி வித்தியாசங்கள் உள்ளன. மதத் தத்துவ வித்தியாசங்கள் உள்ளன.

குரு நானக், இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் உள்ள பல கெட்ட விஷயங்களை ஒதுக்கிவிட்டு இரண்டிலும் உள்ள நல்ல விஷயங்களையும் ஒன்றுசேர்த்து, சீக்கிய மதத்தை உருவாக்க முனைந்தார். ஆனால் இன்றோ சீக்கிய மதம், இரண்டிலும் உள்ள கெட்ட விஷயங்களை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளது.

சீக்கியர்களிடையே சாதி வித்தியாசம் இருக்கக்கூடாது என்று நானக்கும் அவரது வழி வந்த அனைத்து குருமார்களும் இதை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் உண்மையில் பஞ்சாபில் சீக்கியர்களிடையே சாதிகள் நல்ல வலுவாகவே உள்ளன. பூட்டாசிங் என்ற காங்கிரஸ்காரர் தலித் சீக்கியர் என்ற கோட்டாவுக்குள்தான் காங்கிரஸில் இடம் பெறுவார். அதென்ன ‘தலித் சீக்கியர்’ ? இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம் என்று எல்லாமே சாதியில் சிக்கித் தவிக்கின்றன.

இஸ்லாத்தில் doctrinal விஷயங்களை முன்வைத்து சகோதரக் கொலைகள் நடப்பது வாடிக்கை. இன்றுவரை சுன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒருவரை அடித்துக்கொண்டு கொலை செய்துகொள்வதைப் பார்த்திருப்பீர்கள். பாகிஸ்தானில் ஈராக்கிலும் எப்போதும் இது நடப்பதைப் பார்க்கலாம். அதேபோன்ற நிலை் சீக்கியர்களிடையேயும் உள்ளது.

நிறுவனமயமாக்கப்பட்ட சீக்கிய மதத்தைக் கட்டுப்படுத்துவது அகால் தக்த் எனப்படும் குழு. பெரும்பாலும், இந்தக் குழுவுக்கும், அகாலி தளம் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். காங்கிரஸ் கட்சி இடையில் புகுந்து தன்னால் முடிந்த அளவு குழப்பத்தை விளைவிக்கப் பார்க்கும். இப்படித்தான் 1970-களின் இறுதியில் ஆரம்பித்த ஒரு பிரச்னை காலிஸ்தான் என்ற சீக்கியப் பிரிவினை வாதத்தை வளர்த்தது.

இந்து மதத்தில் எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு புது சாமியார் கிளம்புவார். ஒரு மடத்தை அமைப்பார். அவருக்கு சீடர்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே காரியம் சீக்கிய மதத்திலோ நடந்தால் அகால் தக்த் கோபம் அடையும். அது பெரும் வன்முறையில் போய் முடியும்.

1920-களில் நிரங்காரிகள் என்று ஓர் அமைப்பு உருவானது. 1978-ல் இந்த அமைப்பின் சில கிரந்தங்கள் - சமய நூல்கள் - தடை செய்யப்படவேண்டும் என்று மைய நீரோட்ட சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்தனர். சில அமைப்புகள் தெருப் போராட்டத்துக்கு அழைக்க, ஒரு பெரும் கூட்டம் அமிர்தசரஸில் உள்ள நிரங்காரிகளின் மடத்தைச் சுற்றி வளைத்தது. நிரங்காரிகள் உள்ளிருந்து துப்பாக்கியால் சுட, சீக்கியர்கள் பலர் இறந்தனர். அங்கு தொடங்கிய கலவரம்தான் பிந்த்ரன்வாலே உருவாக்கப்பட்டு, பாகிஸ்தான் இடையில் புகுந்து குழப்பி, ஆபரேஷன் புளூ ஸ்டார் நிகழ்ந்து, இந்திரா காந்தி படுகொலையிலும், டில்லி சீக்கியப் படுகொலைகளிலும் முடிந்தது.

2007-ல் டேரா சச்சா சவுதா என்ற அமைப்பின்மீது மைய நீரோட்ட சீக்கியர்கள் தாக்குதல் நடத்தினர். நல்ல வேளையாக இந்தக் கலவரம் 1978 போலச் செல்லவில்லை. டேரா சச்சா சவுதா காங்கிரஸுக்கு ஆதரவு தரும் அமைப்பு என்பதை மனத்தில் கொள்ளவும். ஆனால் 2007-ன் காங்கிரஸ், இந்திரா காந்தியின் காங்கிரஸ் போல நடந்துகொள்ளாமல், சற்று முதிர்ச்சியுடன் நடந்துகொண்டது. ஆனாலும் இன்றுவரை அகால் தக்தும், அகாலி தளமும், சச்சா சவுதா அமைப்பை அழித்துவிடவேண்டும் என்ற மனநிலையில்தான் உள்ளன. பெரும்பாலான ‘கீழ் சாதி’ மக்களோ, சச்சா சவுதா போன்ற அமைப்பையே நாடுகின்றனர். ‘மேல் சாதி’ பிடியில் இருக்கும் அகால் தக்தின் குருத்வாராக்களுக்கு அவர்கள் செல்வதில்லை.

இப்போது 2009-ல் நடக்கும் கலவரங்களும் இதேமாதிரியானவையே. டேரா சச்சா சவுதாவை அகால் தக்த் நேரடியாகத் தாக்கியது. டேரா சச்கண்ட் பல்லான், தலித் மக்களின் ஆதரவு பெற்ற அமைப்பு. ஆனால் அகால் தக்துக்கும், சில தீவிரவாத சீக்கியர்களுக்கும் இந்த அமைப்பைக் கண்டால் ஆகவில்லை. அதன் விளைவுதான் வியன்னாவில் நடந்த தாக்குதலும் கொலையும். அதன் விளைவுதான் பஞ்சாபின் தலித்கள் தெருவில் இறங்கிப் போராடுவதும்.

யார் சீக்கியனாக இருப்பது, யாரை சீக்கிய மதத்திலிருந்து விலக்கலாம் என்ற மிகுந்த ஆபத்தான ஆயுதம் அகால் தக்திடம் உள்ளது. எக்கச்சக்கமான சொத்துகள் அகால் தக்திடம் உள்ளன. அதனால் அகால் தக்த் அரசியலாக்கப்படுகிறது. அகால் தக்த் தலைமை ஜதேதார் யார் என்பதற்குக் கடும் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டிகளின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியும் அகாலி தளமும் பலப்பரீட்சை செய்கின்றன.

இந்தியாவின் பிற பகுதிகளில் நடப்பதுபோலவே பஞ்சாபிலும் சாதி வெறி தலைவிரித்தாடுகிறது. அதனால்தான் எதிர் அமைப்புகள் தோன்றுகின்றன. அந்த அமைப்புகள் பெறும் ஆதரவைக் கண்டு அகால் தக்த் திகிலடைகிறது. இந்த அமைப்புகளை எப்படியெல்லாம் அழிப்பது என்ற யோசனையில் பல தீவிரவாத சீக்கியர்கள் இறங்குகின்றனர்.

அகால் தக்தை அழித்துவிட்டால், யாரும் ‘மைய நீரோட்டம்’ கிடையாது என்ற நிலை வந்துவிடும். யார் வேண்டுமானாலும் சீக்கியனாகலாம். யாரும் அந்த மதத்திலிருந்து ஒருவரை வெளியேற்றமுடியாது.

அகால் தக்த் என்ற அமைப்பின் அழிவில்தான் சீக்கியர்களின் எதிர்காலமும் இந்தியர்களின் எதிர்காலமும் வளமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: