புதன், 29 ஜூன், 2011

Greece திவால் யூரோ 'வை கைவிடுகிறது ஜெர்மனி


லண்டன் : ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, யூரோ கரன்சியை கைவிட்டு, பழைய கரன்சியான, "டச்மார்க்'கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரே மாதிரியாக யூரோ கரன்சியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கியான, பண்டெஸ் வங்கி, "டச்மார்க்' சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து, "டச்மார்க்' சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மன் நாட்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பின், "டச்மார்க்' கரன்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டாலருக்குப் பிறகு, உலகளவில்,"டச்மார்க்' கரன்சிக்கு நல்ல பெயர் இருந்தது. தற்போது, அந்நாட்டு மக்கள், "டச்மார்க்' கரன்சியின் தனித்துவத்தை இழக்காமல், மீண்டும் அதே கரன்சி வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை விட்டு வந்தனர். மேலும், வர்த்தக ரீதியில் டாலருக்கு அடுத்ததாக நல்ல முதலீட்டை, "டச்மார்க்' கரன்சி ஈர்த்து வந்தது.

யூரோ கரன்சியைப் பெற்றிருக்கும் கிரீஸ் நாடு, தற்போது, திவாலாகியுள்ளது. இந்நிலையில், யூரோ கரன்சியின் மதிப்பை சர்வதேச அளவில் நிலை நிறுத்த வேண்டுமானால், கிரீஸ் நாட்டை திவாலில் இருந்து ஐரோப்பிய நாடுகள் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், யூரோ கரன்சியின் மதிப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகி உள்ளதால், ஜெர்மன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள், "டச்மார்க்' கரன்சிக்கு மாற வேண்டும் என்று, கோரி வருகின்றனர்.

இது தொடார்பாக, ஜெர்மன் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், "யூரோ கரன்சிக்கு எதிர்காலம் இல்லை என்று, 71 சதவீதம் பேரும், அந்த கரன்சியின் மீது நம்பிக்கை இல்லை என்று, 19 சதவீதம் பேரும், கிரீஸ் நாட்டை காப்பாற்றும் ஐரோப்பிய நாடுகளின் எமர்ஜென்சி நடவடிக்கை வெற்றி அளிக்காது என்று, 68 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு ஆய்வில், "யூரோ கரன்சியிலிருந்து கிரீஸ் நாட்டை வெளியேற்ற வேண்டும்' என்று, ஜெர்மனி நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: