வியாழன், 30 ஜூன், 2011

குழந்தையை கடத்திய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது.Chennai


சென்னை சைதாப்பேட்டை சாரதி நகர் முரஹரி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற மகளும், 1 1/2 வயதில் மணிராஜ் என்ற மகனும் உள்ளனர்.   கடந்த 16 ந் தேதி அஸ்வினி, மணிராஜ் இருவரும் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென மணி ராஜ் காணாமல் போய் விட்டான். இது குறித்து முருகன் சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது போரூர் மந்தவளி தெரு, பகுதியைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் வீட்டில் மணிராஜ் இருப்பது தெரியவந்தது.

சத்தியமூர்த்தி ஆட்டோ டிரைவராவார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்திய போது, குழந்தை கடத்தலின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது.அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி மேற்பார் வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார், ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் விசாரித்த போது, ராஜஸ்தான் டிரஸ்ட் எனும் அமைப்பில் உள்ள இந்திரா என்பவர் ரூ.10 ஆயிரம் கொடுத்து குழந்தை மணிராஜை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார்.

இதையடுத்து போலீசாரின் பார்வை இந்திரா மீது திரும்பியது. அவரிடம் விசாரணை நடத்திய போது தான், குழந்தை மணிராஜ் கடத்தலின் பின்னணியில் உள்ள முழு விவரம் தெரிய வந்தது. அது வருமாறு:
ஈரோட்டை சேர்ந்தவர் சிவசலாபதி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணம் நடந்து நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. எனவே அவர்கள் 1 வயது முதல் 2 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து ஆதரவற்ற குழந்தைகள் வளர்க்கப்படும் பல்வேறு டிரஸ்டுகளில் தங்களது பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.

அசோக் நகரில் உள்ள லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ் டில் வேலை பார்த்து வரும் ரோஸ்மேரியையும் சிவசலா பதி அணுகினார். அவர் தங்கள் டிரஸ்டில் குழந்தை இல்லை என்று சொல்லி, ராஜஸ்தான் டிரஸ்ட்டில் வேலை பார்த்து வரும் இந்திராவை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதனால் சிவசலாபதிக்கும் இந்திராவுக்கும் பழக்கம் அதிகரித்தது. அதன் பேரில் சிவசலா பதி, இந்திராவிடம் எனக்கு உடனே குழந்தை வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு இந்திரா, “ஆதரவற்ற இல்லம், டிரஸ்ட் மூலம் குழந்தையை தத்து எடுக்க வேண்டுமானால் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். உடனே குழந்தை வேண்டும் என்றால், எங்கிருந்தாவது எடுத்து வந்து தான் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சிவசலாபதி அதற்கு சம்மதித்தார். எங்கிருந்தாவது எனக்கு குழந்தை கிடைத்தால் போதும் என்றார். அவரது அவசரத்தை புரிந்து கொண்ட இந்திரா, குழந்தையை கடத்தி வந்து ஒப்படைக்க 3 லட்சம் ரூபாய் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். நீண்ட பேரத்துக்குப் பிறகு 2 1/2 லட்சம் ரூபாய் கொடுக்க சிவசலாபதி சம்மதித்தார்.

இதையடுத்து இந்திரா குழந்தை கடத்தும் திட்டத்துக்கு வியூகம் வகுத்தார். ராஜஸ்தான் டிரஸ்ட் மூலம் வங்கி கடன், ஆட்டோ வாங்கிக் கொடுத்து உதவி செய்த வகையில் பலரை இந்திராவுக்கு தெரியும். தன்னிடம் உதவி பெற்ற மேற்கு மாம்பலம் புதுத் தெருவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவரை இந்திரா நாடி, விஷயத்தை கூறினார்.

இதையடுத்து குழந்தை கடத்தலுக்கான திட்டத்தை இந்திரா, நாகம்மாள், அவரது கணவர் நாராயணன், மகன் வெங்கடேசன், இந்திராவின் தோழிகள் சுமதி, கலா, இலக்கியா ஆகியோர் வகுத்தனர். கடத்தல் சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியில் வசித்து வந்த சுமதிக்கு, பக்கத்தில் சாரதி நகரில் முருகன் செந்தமிழ்செல்விக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருப்பது தெரியும். அந்த குழந்தையை கடத்தலாம் என்று முடிவு செய்தனர்.

இதற்காக சிவசலாபதியிடம் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றனர். திட்டமிட்டப்படி கடந்த 16 ந் தேதி வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மணிராஜை, கலாவும், இலக்கியாவும் சேர்ந்து சாமர்த்தியமாக கடத்தினார்கள். பிறகு மணிராஜை அவர்கள் இந்திராவிடம் ஒப்படைத்தனர்.

இந்திரா, குழந்தை மணிராஜை, சிவசலாபதியிடம் காட்டினார் அந்த குழந்தையை வளர்க்க சம்மதித்த சிவசலாபதி குழந்தையை இங்கேயே இருக்கட்டும் ஈரோட்டுக்கு போய் விட்டு வந்து விடுகிறேன்” என்று கூறி சென்றார். மீட்பு குழந்தையை தனது வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத இந்திரா, போரூர், மந்தவளி தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் கொடுத்து வைத்திருக்க கூறினார்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் திறமையாக துப்பு துலக்கி போரூரில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த குழந்தை மணிராஜை மீட்டனர். குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு குழந்தை கடத்தலில் தொடர்புடையவர்கள் வேட்டையாடப்பட்டனர். 3 பெண்கள் கைது குழந்தை கடத்தலுக்கு வியூகம் வகுத்து கொடுத்த இந்திரா, அதை செயல்படுத்திய நாகம்மாள், மற்றும் சுமதி ஆகிய 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

குழந்தை மணிராஜ் அணிந்திருந்த நகைகள் மற்றும் உடைகள் நாகம்மாளிடம் இருந்து மீட்கப்பட்டன. இன்று குழந்தை மணி ராஜை, பெற்றோர் முருகன், செந்தமிழ்செல்வியிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி பாராட்டினார்.

பிறகு கமிஷனர் திரிபாதி நிருபர்களிடம் கூறுகையில், “குழந்தை மணிராஜ் கடத்தப்பட்டதும் அவனது புகைப்படத்துடன் கூடிய விளம்பர நோட்டீஸ் ஏராளமாக ஒட்டினோம். அதை பார்த்த ஒருவர் அந்த நோட்டீசில் இருந்த நம்பருக்கு தகவல் கொடுத்தார். இதன் மூலம் குழந்தை மணிராஜை மீட்க முடிந்தது என்றார்.

அப்போது கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சங் கர், செந்தாமரை கண்ணன், உளவுப் பிரிவு இணைக் கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர். குழந்தை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இந்த கடத்தல் கும்பல் சென்னையில் வேறு எங்காவது குழந்தைகளை கடத்தினார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: