திங்கள், 27 ஜூன், 2011

சந்தர்ப்ப வாதத்தை மிகவும் சாதுரியமாக கையாண்டவர்தான் காந்தி

காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில், “”எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன” என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் “பொறுப்பை’ ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.
அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.
காந்தியும் அவரது காலங்களும்’ என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார். “”புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.”
தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி “வன்முறை’ என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.
இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம், “”இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்” என விளக்கமளித்தார்.
முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு, “”போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது” என நியாயம் கற்பித்தார்.
பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் “யங் இந்தியா’வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு, ““போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.
தொடரும்

கருத்துகள் இல்லை: