வியாழன், 30 ஜூன், 2011

புதுச்சேரி: வெடிகுண்டு பார்சல் அனுப்பி இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய தொழில் அதிபர்

ஆசைக்கு இணங்க மறுத்ததால் வெடிகுண்டு பார்சல் அனுப்பி இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய தொழில் அதிபர்
புதுச்சேரி அரியாங்குப்பம் சோலை கவுண்டர் வீதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 70) என்பவரின் மகள் ஜோதி (25). இவர் அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு எஸ்.டி.டி. பூத் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார். தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி கம்பெனியில் வேலை செய்து வந்தார். ஜோதியின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 28.06.2011 அன்று மதியம் 3.30 மணியளவில் ஜோதியின் தந்தை பன்னீர் செல்வம் பெயருக்கு ஒரு கொரியர் பார்சல் வந்தது. அந்த பார்சலில் பன்னீர் செல்வத்தின் பெயரும், ஜோதியின் செல்போன் நம்பரும் எழுதப்பட்டு இருந்தது. அதில் அனுப்புபவரின் பெயர் அன்பு, கடலூர் என்று எழுதப்பட்டு இருந்தது. ஜோதி அந்த பார்சலை வாங்கி கொண்டு நேராக தனது படுக்கை அறைக்கு சென்று அதை பிரிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அந்த பார்சலில் இருந்த குண்டு வெடித்ததில் ஜோதியின் முகம், கை, கால் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது வீட்டின் படுக்கை அறை மேலே போடப்பட்டு இருந்த சிமெண்டு கூரை சுக்குநூறாக உடைந்து சிதறியது. மேலும் அந்த அறையில் இருந்த கட்டில், மெத்தை, டி.வி. உள்பட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்தன.

அருகில் உள்ளவர்கள் ஜோதியை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் தொழில் அதிபர் அருணகிரி (32) என்பவர் ஜோதிக்கு பார்சலில் வெடிகுண்டு அனுப்பி கொலை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கொரியர் நிறுவனம் மூலம் போலி முகவரி கொடுத்து பார்சலில் வெடிகுண்டை அனுப்பி ஜோதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினார்கள்.

கைது செய்யப்பட்ட அருணகிரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:
அரியாங்குப்பம் சோலைகவுண்டர் வீதியில் நான் மெழுகுவர்த்தி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறேன். எனது மனைவி பெயர் புனிதா. இறந்து போன ஜோதி எனது மனைவி புனிதாவின்
நெருங்கிய தோழி. ஜோதி மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

எனவே அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனது ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். இருப்பினும் அவர் மீது உள்ள மோகம் எனக்கு குறையவில்லை.

நான் தொடர்ந்து வற்புறுத்தியதால் கோபம் அடைந்த ஜோதி, இதுபற்றி எனது மனைவியிடம் கூறி விடுவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். இதற்காக ஒரு பார்சலில் வெடிகுண்டு அனுப்பி அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
மேற்கண்டவாறு அருணகிரி தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: