செவ்வாய், 28 ஜூன், 2011

மரணதண்டனை விதிக்கும் சவூதி அரசுக்கு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுக்கும் சவால்!


ஆசிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் சவூதி அரேபிய மேற்குலக நாடுகளின் பணியாளர்களுக்குத் தண்டனை விதிப்பதில்லை எனக் குற்றம்சாட்டிய ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முடியுமாயின் அமெரிக்க அல்லது பிரித்தானிய பணியாளர்களுக்கு மரணதண்டனை விதிக்குமாறு சவால் விடுத்தார்.

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நபீக் ஐ விடுவிக்கக் கோரி கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“மத்திய கிழக்கு தொழிலாளர்களின் நலன் குறித்து அரசாங்கத்துக்கு சிறிதேனும் அக்கறையில்லை. முதுகெழும்பு இல்லாத அரசாங்கம் ஊடகங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. சவூதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு 333 இலங்கையர்கள் தண்டனை பெற்றனர். எனினும் இலங்கை அரசாங்கமோ மௌனம் காத்துக்கொண்டிருக்கிறது.
உடம்பு முழுவதும் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் இலங்கைக்கு பணிப்பெண்கள் திரும்பி அனுப்பப்பட்டார்கள். ஆணியை விழுங்குமாறு பலவந்தப்படுத்தப்பட்ட பெண்களும் அனுப்பப்பட்டார்கள். எனினும் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது?
ரிஷானாவின் விடுதலை குறித்துப் பேசுவதாக அரச தரப்பினர் போலியாக நடிக்கிறார்கள். இந்த விடயத்தில் அரச தரப்பினர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. ஆதலால் சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நாம் தயாராகியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: