சனி, 2 ஜூலை, 2011

புலிகளின் வதை முகாம் அனுபவம்.அந்த 16 -17 வநது சிறுவனை, ‘அண்ணை’ என விழிக்கும் அவலத்தையும் காண முடியும்.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் – 3

புலிகளின் ஒற்றர்களால் கைதுசெய்யப்பட்டேன்!


நான் எமது புத்தகக்கடையை அண்மித்தபோது, கடைக்கு முன்னால் சைக்கிளில் காலுன்றி நின்றவரின் உருவத்தை நன்கு அவதானிக்க முடிந்தது. ‘சந்தேகத்துக்கு இடமின்றி இந்தப்பொடியன் அவங்கடை ஆள்தான்’ என்பதை அனுமானித்துக் கொண்டேன். நான் எனது சைக்கிளைவிட்டு இறங்கியதும் அந்தப்பையன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, எனது கடையில் இருந்த தோழர் தவராசாவின் முகத்தையும் பார்த்தான். அதாவது ‘இவர்தான் நாங்கள் தேடிவந்த மணியம் எனபவரோ?’ என்ற கேள்வி அந்தப்பார்வையில் இருந்தது. பதிலுக்கு தவராசாவும் ‘உன்னைத்தேடி வில்லங்கமான ஆட்கள் வந்திருக்கிறாங்கள்’ என்ற தகவலைத் தன் கண்களால் எனக்கு உணர்த்தினார்.


வந்திருப்பவன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதை ஊகித்தறிய எனக்குச் சிரமமேதும் இருக்கவில்லை. சாதாரணமாகவே, தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களுக்கு, சில அசாத்திய மோப்பக்குணங்கள் உண்டு. தனது இனத்திலுள்ள யாராவது ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால், சிறிதுநேர உரையாடலின் பின், அவர் எந்த ஊரவர், என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஓரளவு சரியாகச் சொல்லி விடுவர். இந்தப் ‘புலனாய்வு’த் திறமை, அவர்களைப் பொறுத்தவரை தமிழ் இயக்கங்கள் பற்றிய அவர்களது கணிப்பீடுகளுக்கும் பொருந்தும். இயக்கப் ‘பொடியளை’க் கண்டால், அவர்கள் எந்த இயக்கம் என்பதை சரியாக மதிப்பிட்டு விடுவர்.


என்னைப் பொறுத்தவரை, நான் தமிழன், அதிலும் யாழ்ப்பாணத் தமிழன் என்பதற்கும் அப்பால், ஓரளவு மானிடப் பண்புகள் பற்றிப் புரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என்பனவற்றின் கொள்கைகளை மட்டுமின்றி, அதன் உறுப்பினர்களின் வளர்ப்பு முறைகள், பழக்க வழக்கங்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததினாலும், வந்திருப்பவனைப் பற்றி தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.


அன்றைய காலகட்டத்தில், ஆயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டத்தில், ஐந்து புலிகளை புகுத்திவிட்டால், அவர்களை சுலபமாக இனம்கண்டுவிட முடியும். காரணம், சாதாரண மக்களுக்கும் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள தோற்ற மற்றும் பழக்க வழக்க  வித்தியாசங்களாகும். நீண்ட கொடிய யுத்தத்தின் காரணமாக உயிர்களையும் உடைமைகளையும் இழந்து, ஜே.ஆர்.ஜெயவர்த்தன – பிரேமதாச அரசுகளின் நீடித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வாடி வதங்கிப் போயிருந்த, சாதாரண தமிழ்ப் பொதுமக்களையும், பிரபாகரனால் ‘வேள்விக்கு வளர்த்த ஆட்டுக்கடாய்கள்’ போலிருந்த புலி உறுப்பினர்களையும், ஒருவர் சுலபமாக பாகுபடுத்திப் பார்த்துவிட முடியும்.


ஒரு கிராமப்புறச் சிறுவன், புலிகளினால் தமது இயக்கப் பயிற்சிக்காக பிடித்துச் செல்லப்படும்போது நோஞ்சானாகத்தான் இருப்பான். பின்னர் சில மாதங்களோ வருடங்களோ கழித்து அவனை அவனது பெற்றோர்களோ, உறவினர்களோ, ஊரவர்களோ, நண்பர்களோ காணும்போது, அடையாளம் தெரியாத அளவுக்கு அவனது உடலும் உள்ளமும் மாறிவிட்டிருக்கும். அவனுக்கு முகாமில் வழங்கப்படும் பயிற்சிகள், உணவு என்பன காரணமாக அவன் உருண்டு திரண்ட வாட்ட சாட்டமான ஆளாக மாறிவிட்டிருப்பதுடன், அவனது தோற்றத்தில் ஒரு அதிகார ஆணவ மிடுக்கும் உருவேறி இருக்கும். அவனது பெற்றோரே, அவனுடன் கதைக்கும்போது, மிகுந்த அவதானத்துடனும், பயபக்தியுடனும் கதைப்பதைக் காணக்கூடியதாகவிருக்கும். முன்பு அவனை ‘தம்பி’ என்றழைத்த ஊரவர்கள், ‘நீங்கள்’ என்றழைப்பதையும், முன்பின் பழக்கமில்லாத ஒரு வயோதிபர் கூட, அந்த 16 -17 வநது சிறுவனை, ‘அண்ணை’ என விழிக்கும் அவலத்தையும் காண முடியும்.


தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், மற்றைய இயக்கங்களை விட, புலிகள் இயக்கம் சற்று வித்தியாசமாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. மற்றைய இயக்கத்தவர்கள் போல புலிகள் மக்களுடன் கண்டபடி ஊடாடமாட்டார்கள். அவர்கள் மற்றைய இயக்கத்தவர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் சந்தேகக்கண்கொண்டே நோக்குவர். அந்த நோக்கில் பார்ப்பவர்களை மிரளப்பண்ணும் ஒரு பயங்கரப்பார்வை உள்ளுறைந்து இருக்கும்.


அப்பொழுதெல்லாம் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர், வழமையானதைவிட நீண்ட சேர்ட்டுகளை அணிந்திருப்பவர். சிலரது பின்பக்கத்தில் சேர்ட்டுக்குள்ளே பிஸ்ரல் துருத்திக் கொண்டிருப்பது தெரியும். அவர்களைப் பார்த்துவிட்டு, சில சாதாரண இளைஞர்களும், நீண்ட சேர்ட்டுகளை அணிந்துகொண்டு, சேர்ட்டுக்குள்ளே ஒரு தடியைச் செருகிக்கொண்டு, தம்மையும் ‘ஐ’ன்னாவாக (Intelligence) உருவகித்து மக்களைத் திகில்பண்ணச் செய்ததும் உண்டு! அப்பொழுது இந்த நீண்ட ‘பக்கி’ சேர்ட் அவர்களது ‘சிம்போலிக்காக’ப் பார்க்கப்பட்டது.


கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில், ‘கொக்கோகோலா’ பானம் அவர்களது இன்னொரு ‘சிம்போலிக்’காகச் சில காலம் இருந்தது. ஏதாவது ஒரு கடையில் வாட்டசாட்டமான இளைஞர்கள் வந்து கொக்கோகோலா பானம் கேட்டால், கடைக்காரர் அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களது தேவையை முதலில் பூர்த்தி செய்து அனுப்பி வைப்பது வழக்கம். பின்னர், அந்த நேரத்தில் புலிகளின் வன்னிப் பொறுப்பாளர் மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் இருந்த முரண்பாடு, முறுகலாக முற்றிய பின்னர், பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் பதின்மூன்றாம் கட்டையில் தேராவில் குளத்துக்கு அண்மையில் முகாமிட்டிருந்த மாத்தையா, கிட்டுவின் புலிகளுக்கு சென்ற ஒரு லொறி கொக்கோகோலா போத்தல்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களைக் ‘காயப்போட்டதும்’ நடந்தது.


இந்த இடத்தில், புலிகளின் உறுப்பினர்களுக்கும், மாபெரும் சீன – வியட்நாமிய புரட்சிகளின் போது, தமது தாய்நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் போராடிய கம்யூனிஸ்ட் கெரில்லாப் போராளிகளுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தை தெரிந்துகொள்வது பயனுள்ளதாகவிருக்கும்.


அந்த நாடுகளில் நடைபெற்றது, முழுக்க முழுக்க பொது எதிரியான அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான புரட்சிகர மக்கள் யுத்தமாகையால், மக்கள் யார், போராளிகள் யார் என்பதை எதிரிகளால் சுலபத்தில் அறிந்துகொள்ள இயலாது. இதற்கு உதாரணமாக, இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.


ஒருமுறை வியட்நாமில் ஒரு கிராமத்தைச் சுற்றிவளைத்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகள், விடுதலைப் போராளிகளான ‘வியட்கொங்’ கெரில்லாக்கள் 10 பேரை சந்தேகத்தில் கைதுசெய்தனர். அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து, அவர்களது குழுவுக்கு தலைவன் யார் எனக் கேட்டனர். எவ்வளவோ மிரட்டிக் கேட்டும், (கழுத்தில் சைனைட் குப்பி அணியாத) அந்தப் போராளிகள் தமது தலைவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. “:நீங்கள் தலைவன் யாரெனச் சொல்லாவிட்டால், எல்லோரையும் ஒவ்வொருவராகச் சுட்டுவிடுவோம்” என எச்சரித்துவிட்டு, வரிசையில் முதலில் நின்றவனைச் சுட்டுக் கொன்றனர்.


அதன் பின்னர் அந்தப் போராளிகளை நோக்கி, “இப்பவாவது சொல்லுங்கள். உங்கள் தலைவன் யார்?” என வினவினர்.


அங்கு நிலைகுலையாது எஞ்சி நின்ற 9 பேரின் விரல்களும், அமெரிக்கப்படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தமது சக தோழனை நோக்கி நீண்டன. உண்மை அதுவல்ல என்ற போதிலும், தாம் சரியான ஆளை இனம்கண்டு ஒழித்துக்கட்டியதாக நம்பிய அமெரிக்கப்படையினர், அத்துடன் சுடுவதை நிறுத்திவிட்டனர்.


இதுதான் மக்களைச் சார்ந்து நின்று போராடும் பாட்டாளிவர்க்கப் போராளிகளுக்கும், புலிகள் போன்ற பாசிசப் பாணியிலான படைகளுக்குமுள்ள அடிப்படை வித்தியாசம்.


எனவே என்னைத்தேடி வந்திருந்த அந்த இளைஞனை யார் என்று அடையாளம் காண்பதில் எனக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லை. எனது தலைக்கு மேலே ‘பாசக்கயிறு’ வீசப்பட்டுவிட்டதை உணர்ந்தேன்.


தோழர் தவராசா என்னைப் பார்த்து, “உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிற்கிறான்” என மெதுவாகச் சொன்னார்.


அதற்கிடையில், அவனும் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, கடை வாசற்படிக்கருகில் வந்து நின்றான்.


நான் அவனைப் பார்த்து, “தம்பி என்னிட்டையோ வந்திருக்கிறீர்கள்?” என வினவினேன்.

“உங்களை வந்தால் ஒரு இடமும் போகாமல் நிக்கச் சொல்லி சின்னவன் அண்ணை சொன்னவர்” என அவன் என்னிடம் கூறினான்.

“சின்னவன் அண்ணை ஆர்?” என நான் அவனிடம் வினவினேன்.

“அவர்தான் எங்கடை ரவுண் (யாழ்.நகர) இன்ரெலியென்ற் (புலனாய்வு) பொறுப்பாளர்” என அவன் மீண்டும் கூறினான்.

“என்ன விடயமாக என்னைச் சந்திக்க வந்துள்ளார்?” இது நான்.

“எனக்குத் தெரியாது. அவர் வந்த பிறகு கதையுங்கோ” இது அவன்.

“சரி அவர் வரும்வரைக்கும் நீங்கள் உள்ளே வந்து இருங்கோ” என ஒரு ஆசனத்தை சுட்டிக்காட்டி அவனை அழைத்தேன். ஆனால் அவன் வரவில்லை. நான் எங்கும் தப்பியோடிவிடாதபடி என்னைக் காவல் காப்பது போல கடையின் முன்னால் நின்று கொண்டான்.


சிறிதுநேரம் கழித்து சின்னவன் என அழைக்கப்பட்டவர் கடைக்கு வந்துசேர்ந்தார். அவருடன் இன்னுமொருவரும் வந்தார். அவர் தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுச் சங்கமொன்றில் வேலை செய்பவர் எனப் பின்னர் அறிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் யாழ் வீதியிலிருந்த புலிகளின் நகரக் காரியாலயம் சென்று, அங்குள்ள பொறுப்பாளரிடம் என்னைக் கைதுசெய்யப்போவதை அறிவித்துவிட்டு வரவே சென்றனர் என்பதையும், பின்னர்தான் அறிந்து கொண்டேன். எனக்காக முதலில் காத்துநின்ற இளைஞனின் பெயர் ஜெயந்தன் என்பதையும்; தெரிந்து கொண்டேன்.

நேராக என்னிடம் வந்த சின்னவன் தனது அடையாள அட்டையை என்னிடம் காண்பித்து, “நான் சின்னவன், புலனாய்வுத்துறை யாழ் நகரப் பொறுப்பாளர், உங்களை ஒரு விசாரணைக்காக கூட்டிச்செல்ல வந்திருக்கிறேன்” என்றான்.


“என்ன விசாரணை என்று அறியலாமோ?” என நான் அவனிடமும் வினவினேன்.


“அதை விசாரணை நடாத்துபவர்கள் உங்களிடம் சொல்வார்கள்” எனப் பதிலளிக்கப்பட்டது.


அதன்பின்னர் கடையிலிருந்த மேசையின் லாச்சிகளை அவன் திறந்து ஆராய்ந்தான். பின்னர் அதற்குள்ளிருந்த இலங்கையின் வீதி வரைபடம் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டான்.


பின்னர் தோழர் தவராசாவை உற்றுநோக்கிய புலிகளின் ஒற்றன், “இவர் யார்?” என வினவிவிட்டு, தன்னுடன் வந்தவர்களை நோக்கி “இவரை என்ன செய்வது? கொண்டுபோகவா?” எனக் கேட்டான்.


இந்த இடத்தில் நான் குறுக்கிட்டு, “அவர் மருந்து வாங்குவதற்கு பணம் கேட்டு என்னிடம் வந்தவர். அவரை எதற்காகக் கொண்டு போகிறீர்கள்?” என்று கேட்டேன்.


பின்னர் அவர்கள் கடையைப் பூட்டித் திறப்பைத் தம்முடன் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகினர். இந்தச் சந்தர்ப்பத்தில் தவராசா தனது பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குப் பறப்பட்டுவிட்டார். அவரை அவர்கள் விட்டுவிட்டது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ஏனெனில் அவர்கள் அவரையும் கைதுசெய்து கொண்டு போயிருந்தால், வாய்பேச முடியாத அவரது குமர்ப்பிள்ளை உதவியின்றி தத்தளித்திருப்பார். அத்துடன் நோயாளியான தவராசாவும் புலிகளின் வதை முகாமில் சில நாட்களிலேயே மரணித்திருப்பார்.


நான் உயிருடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை கிஞ்சித்தும் அற்ற ஒரு நிலையில், தவராசாவின் கண்களும் எனது கண்களும் இறுதியாக ஒருமுறை சந்தித்துக் கொண்டன. அவரது கண்களில் தெரிந்த வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சோகமும், நிராசையும் இன்றும் எனது மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டே இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு சோகமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். நான் புலிகளின் பிடியிலிருந்து ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலையாகி வந்தபோது, முதல் Nலையாக தோழர் தவராசாவைச் சென்று பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும்கூட, புலிகளின் உளவாளிகள் தொடர்ந்தும் என்னைக் கண்காணித்து வந்ததால், எனது கட்சித் தோழர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். நான் அவசரப்பட்டு சந்தித்தால், என்னைவிட அவர்களுக்குத்தான் தொல்லைகள் உருவாகும் என்பதால் அவ்வாறு தவிர்த்தேன்.

அந்தச் சூழ்நிலையில் ஒருநாள் தவராசாவின் உரும்பிராய் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த எனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியை எதேச்சையாகச் சந்தித்த போது, “தவராசா அண்ணர் எப்படி இருக்கிறார்?” என ஆவலுடன் வினவினேன்.

“அவரா, அவர் மோசம் (மரணித்து) போய் ஒரு மாசமாச்சு. நேற்றுத்தான் அந்தியேட்டி நடந்தது” என அவர் சொன்னார். இந்தத் தகவல் எனக்கு பேரதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் அளித்தது. குறிப்பாக அவர் இல்லாத சூழலில், அவரது மகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என நான் மிகவும் கவலைப்பட்டேன். பின்னர் ஒருமுறை தற்செயலாக நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் அவரது மகளைக் கண்டு சுகம் விசாரிக்க முடிந்தது. அதன்பின்னர் 1990 ஒக்ரோபர் 30 மாபெரும் இடப்பெயர்வு, பின்னர் கொழும்புக்கு இடம் பெயர்ந்தமை என்பன காரணமாக தவராசாவின் மகள் பற்றி எதுவும் அறிய முடியவில்லை.

ஆனால் நான் வெளிநாட்டுக்கு வந்தபின்னர், தோழர் தவராசாவின் சொந்த ஊரான உடுப்பிட்டியைச் சேர்ந்தவரும், அவருடன் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை டிப்போவில் ஒன்றாக வேலை செய்தவருமான இன்னொரு தோழர் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது, தவராசாவின் அந்த வாய்பேச முடியாத மகளையும் புலிகள் கொன்றுவிட்டார்கள் என அந்த தோழர் கவலையுடன் தெரிவித்தார். ஆக மொத்தமாக தோழர் தவராசாவின் முழுக்குடும்பத்தையும், ஈழப்போராட்டமும் அதன் மூலம் வளர்ந்த பாசிச மாபியாக் கும்பலும் அழித்துவிட்டது. இப்படி எத்தனை குடும்பங்களோ?


தோழர் தவராசா புத்தகக்கடையை விட்டு அகன்றபின்னர் புலிகளின் ஒற்றர்களுடன் நான் போகத் தயாரானேன்.


தொடரும்

கருத்துகள் இல்லை: