வியாழன், 30 ஜூன், 2011

நீதிபதி தங்கராஜ் மலேசியாவில் குற்றவாளி ஒருவருடன் தங்கியுருந்தவர்

புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் குறித்து விசாரிக்க உள்ள நீதிபதி தங்கராஜ் மலேசியாவில் குற்றவாளி ஒருவருடன் தங்கியுருந்தவர் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருக்கும் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் ஜெயலலிதா வெண்டுமென்றே திட்டமிட்டு விசாரணைக் கமிஷனை அமைத்துள்ளார் என்பதை தமிழக மக்கள் உணர்வார்கள்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை பயன்படுத்த மறுத்து செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சட்டமன்றப் பேரவையை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு?

சாதாரண பயணிகள் விமானத்தை பயன்படுத்தாமல், தனியார் விமானத்தை முதல் அமைச்சர் கையாளுவதால் ஏற்படும் செலவு எவ்வளவு? ஜெயலலிதாவின் ஒரு நாள் டெல்லி பயணத்திற்கான வீண்செலவைப் பற்றியெல்லாம் விசாரணைகள் வேண்டாமா?

டான்சி வழக்கை தனி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்துவதற்கு தகுந்த அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை என தீர்ப்பு கூறிய நீதிபதி தங்கராஜ் தான், புதிய தலைமைச் செயலகத்தை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்று, நிலத்தை ஜெயலலிதா அரசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்த உண்மை.

சென்னையில் ரியல் எஸ்டேட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, காவல்நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில், 1999ல் உயர்நீதிமன்ற நீதிபதி தங்கராஜ், வழக்கறிஞர் செல்வராஜ், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் செல்வரத்தினம் ஆகியோருடன் மலேசியாவில் உள்ள நடசத்திர ஓட்டலில் 10 நாட்கள் தங்கியிருந்தார்.

குற்றவாளி கிருஷ்ணமூர்த்தியுடன் மலேசியாவில் தங்யிருந்த தங்கராஜ்தான் தற்போது, புதிய தலைமைச் செயலகத்தைப் பற்றி விசாரிக்கப்போகிறார்.

எந்த அளவுக்குப் பொருத்தமானவரை விசாரணை ஆணையத்தின் தலைவராக அதிமுக அரசு தேடிப்பிடித்து நியமித்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா? இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: