திங்கள், 2 மே, 2011

Sai baba trust தலைவர் தேர்வு பிரச்சினை: சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளிடையே மோதல்

Sai Baba Passed Awayதலைவர் தேர்வு பிரச்சினை: சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளிடையே மோதல்
தலைவரை தேர்வு செய்யும் பிரச்சினையில், சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீ சத்ய சாய் சென்டிரல் டிரஸ்ட் அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. சத்ய சாய்பாபா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த சொத்துக்களை நிர்வகிப்பது, வரவு-செலவு அதிகாரத்தை தீர்மானிப்பது தொடர்பாக அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அறக்கட்டளையில் வேணு சீனிவாசன், பகவதி, நாகானந்த், சக்கரவர்த்தி, எஸ்.வி.கிரி, இந்துலால்ஷா மற்றும் சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சாய்பாபாவின மறைவை தொடர்ந்து, அறக்கட்டளையின் புதிய தலைவரை தேர்ந்து எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர், சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித் ஆகியோருக்கு இடையேதான் தலைவர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று புட்டபர்த்தியில் நடைபெற்றது. ஆனால் தலைவரை தேர்வு செய்யும் பிரச்சினை தொடர்பாக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதாலும், ஒருமித்த கருத்து ஏற்படாததாலும் நேற்றைய கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, சத்யஜித்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். அவருக்கு, கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய் வாகினி டிரஸ்ட் பொறுப்பை ஒப்படைக்க அவர்கள் தீர்மானித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சத்யஜித் எந்த பதவியையும் விரும்பவில்லை என்றும், அறக்கட்டளை நிர்வாகிகள் சிலர் அவருக்கு இந்த பொறுப்பை வழங்க முன்வந்து இருப்பதாக பிரசாந்தி நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஸ்ரீ சத்ய சாய் வாகினி டிரஸ்ட் இந்தியா முழுவதும் 99 பள்ளிக்கூடங்களையும், 33 நாடுகளில் உள்ள தலா ஒரு பள்ளிக்கூடத்தையும் நிர்வகித்து வருகிறது.
சாய்பாபா அறக்கட்டளைக்கு உள்ள சொத்துக்களின் மதிப்பு பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவதால், சொத்துக்கள் பற்றிய தஸ்தாவேஜுகளை ஐகோர்ட்டிலோ அல்லது சுப்ரீம் கோர்ட்டிலோ தாக்கல் செய்வது பற்றி அதன் நிர்வாகிகள் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அப்படி தாக்கல் செய்து விட்டால் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர்கள் கருதுவதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: